நகம் என்ற கிரீடம்!



அழகே... என் ஆரோக்கியமே...

‘நகம் என்ற கிரீடம் அதிசயம்’ என்றார் கவிப்பேரரசு வைரமுத்து. உண்மைதான்... நம் கைகள் மற்றும் கால்களின் விரல்களின் நுனிக்கு நகம் என்பவை கிரீடங்கள்தான். அவை விரல்களுக்கு அழகோடு பாதுகாப்பையும் தருகின்றன. நம் அன்றாட வாழ்வில் சாதாரண வேலையிலிருந்து நுட்பமான பல வேலைகள்  வரை செய்வதற்கு நகங்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற நகங்கள், ஒருவரின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று மருத்துவ உலகில் வர்ணிக்கப்படுகிறது. நகங்கள் எப்படி ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாகிறது என்பதையும், அதன் முக்கியத்துவங்களையும் பார்ப்போம்...

முதலில் நகங்கள் என்பவை என்னவென்று புரிந்துகொள்வோம்.

கொஞ்சம் டெக்னிக்கலாகவே பார்க்கலாம். விரல்களின் மேல் தோலில் உள்ள Stratum Corneum என்ற அடுக்குதான் நகமாக மாறுகிறது. இதை மருத்துவர்கள் Nail plate என்று அழைக்கிறார்கள். இந்த Nail plate அமர்ந்துள்ள இடத்துக்கு Nail bed என்று பெயர். நகம் Nail bed பகுதியை ஒட்டி இருப்பதற்கு காரணம் Onychodermal band. நம் நகமானது எளிதில் விழுந்து விடாமல் இருப்பதற்கு இந்த Onychodermal band உதவுகிறது.

இதில் நகம் உருவாக காரணமாக உள்ள இடம் Nail matrix. நகத்தின் வேர்ப்பகுதி என்பதால் இதனை உயிர் என்று கூட சொல்லலாம். நகம் விரல் நுனியில் எந்தவித பிடிப்பும் இல்லாமலும், நகத்தின் வேரான Matrix அருகில் நன்கு ஒட்டியும் இருக்கும். நகமும் தோலும் சேரும் இடத்தை Proximal nail fold என்று குறிப்பிடப்படுகிறது. இந்த Proximal nail fold-ஐயும் நகத்தையும் இணைத்து பாதுகாக்கும் ஒரு முக்கியமான பகுதி Cuticle.

இந்த க்யூட்டிகிள் பகுதியை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கை மற்றும் கால்களை அழகு செய்து கொள்வதற்கு இப்போது அனைவரும் Beauty Parlour செல்கிறார்கள். ஆனால், ‘உங்கள் நகத்தில் எவ்வளவு அழுக்கு இருக்கிறது பாருங்கள்’ என்று அதை சுரண்டிவிடுகிறார்கள். அப்படி செய்வது ஒரு தவறான பழக்கம். Manicure மற்றும் Pedicure செய்யும்போது Cuticle சேதம் ஏற்பட்டால் ‘நக சொத்தை’ எளிதாக உருவாகும். நகங்களை அதிக நேரம் தண்ணீரிலேயே வைத்திருப்பவர்களுக்கு இந்த Cuticle சேதம் ஏற்பட்டு Paronychia என்ற நக சுத்தியும் உருவாகும்.

ஒருவர் தனது நகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள என்ன வெல்லாம் செய்ய வேண்டும்?

வேதிப்பொருட்களும், டிடர்ஜென்டுகளும் நகத்தை சேதப்படுத்தக் கூடியவை. எனவே, முடிந்த அளவு அவை நகத்தின் மீது நேரடியாக படுவதை தவிருங்கள். வீட்டு வேலைகளை செய்யும்போது காட்டன் க்ளவுஸ்களையும், ஈரமான வேலைகள் செய்யும்போது வினைல் அல்லது ரப்பர் க்ளவுஸ்களையும் உபயோகியுங்கள். நகத்தை வெட்டும் முன் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து விட்டு வெட்டுங்கள். இது நகத்திற்கு உண்டாகும் Mechanical Stress-ஐ குறைக்கும். நகத்தை கடினமாக சுத்தம் செய்வதை தவிருங்கள்.

அடிக்கடி பார்லர் செல்பவராக இருந்தால், உங்களுக்கென்று பிரத்யேகமான Instruments -ஐ வாங்கி, அதை எடுத்துச் செல்லுங்கள். நகங்களை மிக நீளமாக வளர்ப்பதை தவிருங்கள். அப்படி நீளமாக வளர்க்கும்போது அடிபட்டு எளிதாக நகம் பிய்ந்து போகும் அபாயமுள்ளது. உங்கள் நகம் ஏற்கனவே உடைந்து போகும் தன்மை உடைய Brittle nail ஆக இருந்தால், தினமும் மாய்ஸ்சரைசர்களை தடவி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நகங்களில் என்னென்ன பிரச்னை ஏற்படலாம்?

‘நகச்சொத்தை’ மிக முக்கியமான ஒன்று. இது பொதுவாக பூஞ்சைகளால் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஈரத்திலே வேலை செய்பவர்கள் (எ.கா வீட்டு வேலை செய்யும் பெண்கள், சமையல்காரர், டீ மாஸ்டர் போன்றவர்கள்), வேலை நிமித்தமாக தினமும் ஷூ அணிபவர்கள், விளையாட்டு வீரர்கள், பொது நீச்சல் குளத்தில் நீச்சலடிப்பவர்கள் போன்றவர்கள் நகச்சொத்தைக்கு எளிதில் ஆளாகிறார்கள். ஈரத்திலேயே வேலை பார்ப்பவர்களுக்கு கூடுதலாக நகச்சுத்தியும் உருவாகும். அது மட்டுமில்லாமல், அவர்களின் விரல்களுக்கு இடையே Intertrigo ஏற்படலாம். Candida என்ற பூஞ்சையினாலும் Intertrigo ஏற்படலாம்.

சொரியாஸிஸ், லைக்கன் ப்ளானஸ், புழு வெட்டு போன்ற சரும நோய்கள் 20 Nail dystrophy என்னும் நிலையை ஏற்படுத்தலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் முற்றிய நிலையில் வெளுத்து போகும்போது, நகங்கள் குழி போல் உண்டாகி Spoon shaped nail உருவாகலாம். உடலில் புரதச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு நகங்கள் வெள்ளையாக மாறிவிடலாம். பாதி நார்மலாகவும், பாதி வெள்ளையாகவும் உள்ள நகங்கள் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்படும். நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு மற்றும் சொத்தை நகம் உள்ளவர்களுக்கு, நகம் மஞ்சளாக மாறலாம். ரத்த ஓட்டம் குறைவாக உள்ளவர்கள், இதயத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு நகங்கள் நீலமாக மாறிவிடலாம்.

சில வகையான விஷங்களாலும் நகம் நீல நிறமாக மாறலாம். வார்ட் என்ற வைரல் நோய் சில நேரங்களில், நகத்தின் அடியில் தோலையும் பாதித்து Subungual wart -ஐ ஏற்படுத்தும். Melanoma என்று சொல்லப்படும் சருமப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு சில நேரங்களில், நகத்தின் அடியில் உள்ள தோல் பாதிக்கும்போது Proximal nail fold ஆனது கறுத்துப்
போகலாம். சில நேரங்களில் நகத்தில் அடிபட்டு உள்ளே ரத்தக்கட்டு ஏற்பட்டால் கூட நகத்தின் Proximal nail fold கறுத்துப் போகலாம். நகங்களில் சிலருக்கு கறுப்பு கலரில் ஒரு கோடு ஏற்படலாம்.

இதை Longitudinal Melanonychia என்று அழைப்பார்கள். இது பொதுவாக பரம்பரைத் தன்மையால் கூட ஏற்படலாம். மிக அரிதாக Melanoma-வால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுபோல் ஏற்படலாம். நகத்திற்கு போடப்படும் நெயில் பாலிஷாலும் சிலருக்கு ஒவ்வாமைகள் ஏற்படலாம்.

நெயில் பாலிஷ் நல்லதா? கெட்டதா?

நெயில் பாலிஷ்/ நெயில் லாக்குவர், கொதிக்க வைத்த Nitrocellulose- ஐ கரைத்து தயாரிக்கிறார்கள். இதை நகத்தில் தடவும்போது எந்த பிரச்னையும் இல்லை. இது நகத்தில் காற்று நுழைவதை (Oxygen permeability) தடுக்காது. ஆனால், இந்த Nitrocellulose resin-ஐ பலப்படுத்துவதற்காக Tosylamide Formaldehyde resin என்கிற ஒன்றை சேர்ப்பார்கள். இது ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது. தற்போது சந்தையில் கிடைக்கும் Hypo allergenic நெயில் பாலிஷ் வகைகளில், மேற்சொன்ன Tosylamide formaldehyde resin-க்குப் பதிலாக Polyester resin அல்லது Cellulose Acetate Butyrate-ஐ சேர்க்கிறார்கள்.

எப்படி முறையாக பயன்படுத்தலாம்?

நெயில் பாலிஷை போடுவதற்கு முன் ஒரு Base coat தெளிவான க்ளியர் பாலிஷ் கொண்டு போட வேண்டும். இது நகத்தில் சாயம் ஏறுவதை தவிர்க்கும். அடுத்தது தேவையான நெயில் பாலிஷை போட வேண்டும். அதன் மீது Top coat அடிக்க வேண்டும். இந்த Top coat-ல் ‘சன் ஸ்கீரின்’ உள்ளது. அதனால் நெயில் பாலிஷ் எளிதில் நிறம் மங்காது. அதன் மீது Nail Polish dryer என்ற திரவத்தை அடிக்கலாம்.

ஆனால் நெயில் பாலிஷை அடிக்கடி போடுவதும், அதை நீக்குவதற்காக நெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகிப்பதும் நல்லதல்ல. தொடர்ந்து நெயில் பாலிஷை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தால் நகத்தின் வளையும் தன்மை கெட்டு, நகம் எளிதில் உடையக்கூடிய Brittle Nail- ஆக மாறிவிடும். ஆகையால், சரியான பழக்கங்களை கடைப்பிடித்து கைகளுக்கு அழகுதரும் நகங்களை பேணிக் காப்போம். ( ரசிக்கலாம்… பராமரிக்கலாம்… )