மனதார உண்ணுங்கள்!



centre spread special

ஆரோக்கியமான வாழ்வுக்கு சத்துமிக்க உணவு அவசியம் என்பது தெரியும்தான். அதேவேளையில் அந்த உணவினை உண்ணும் மனநிலையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்களும், உணவியல் நிபுணர்களும்...

உணவுக்கும் மனதுக்கும் என்ன தொடர்பு?

பாவ்லோட்வ்(Pavlov) என்னும் ரஷ்ய மருத்துவர் ஒரு விநோதமான ஆராய்ச்சி ஒன்றைச் செய்தார். நாய், பூனை இரண்டையும் ஒன்றாக வளர்த்து வந்தார். அவைகளிடத்தில் சுரக்கக்கூடிய செரிமானச் சுரப்பின் அளவை சோதனை செய்யும் முயற்சியாக நாயையும், பூனையையும் தனித்தனியாக சாப்பிட வைத்து கவனித்து வந்தார்.  

உணவை கண்களால் காணும்போதே நாய் மற்றும் பூனையின் இரைப்பையில் Digestive Juice சுரப்பதைக் கண்டறிந்தார். ஒரு நாள் பூனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அதன் முன்னால் நாயை கூட்டி வந்தார். பயத்தில் பூனைக்கு Digestive Juice சுரக்கவேயில்லை. இதில்தான் மிகப்பெரிய உண்மை அவருக்குப்புரிந்தது.

பதற்றமான சூழ்நிலையில் சாப்பிடும் உணவு நிச்சயம் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எதிர்மறையான அதிர்வுகளை கிரகித்துள்ள அந்த உணவை நாம் உண்டால், உடல் செல்களினுள் செல்லும் அந்த உணவானது எதிர்மறையான விளைவை உண்டாக்கி, நம் உடலையும் பாதிக்கும் என்பதற்கு சரியான உதாரணம் மேற்சொன்ன சோதனை முயற்சி.

இதையே ‘சாப்பிடும்போது திட்டினா எப்படி உடலில் ஒட்டும்’ ‘கோபமா சாப்பிடக் கூடாது’ என்பது போன்ற சாதாரண வார்த்தைகளில் நம் பெரியவர்களும், அம்மாக்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது சாப்பிடும் முறையில் மட்டுமல்லாமல் சமைக்கும் முறையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அது நம் உடலினுள்ளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு சமையலறையும், சாப்பிடும் இடமும் ஒரு தியான அறைக்கு ஈடாக இருப்பது முக்கியம்.

எனவே, உணவு உண்ணும் வேளையில் கோபமோ, வாக்குவாதங்களோ, வேறு எதிர்மறை சிந்தனைகளோ வேண்டாம். இதையே கொஞ்சம் டெக்னிக்கலாக Mindfullness Eating என்கிறார்கள். உண்ணும்போது வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் உணவை நாவால் சுவைத்து, வாயால் அரைத்து, மனதார உண்ணுங்கள்.

- என்.ஹரிஹரன்