+2 வணிகவியல் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்



பொதுத்தேர்வு டிப்ஸ்

கடந்த சில இதழ்களில் +2 பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக முக்கிய குறிப்புகளை வழங்கி வருகிறோம். அதனைத் தொடர்ந்து +2 வணிகவியல் பாடத்தில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது என்பது பற்றியும் அதிக மதிப்பெண்கள் எடுப்பது பற்றியும் சில தகவல்களை வணிகவியல் முதுகலை ஆசிரியர் D.சிதம்பரராஜ் வழங்கியுள்ளார். இனி அவர் தரும் வழிகாட்டுதலைப் பார்ப்போம்.

பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் வினாத்தாள் மொத்தம் 90 மதிப்பெண்களைக் கொண்டது. தற்போது அரசு 30 நிமிடம் அதிகரித்துள்ள காரணத்தினால் மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுதலாம். வணிகவியல் பாடத்தை பொறுத்தமட்டில் மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவேண்டும். அப்படி படித்தால் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் உங்களால் பதிலளிக்க இயலும். இதை மனதில் வைத்துக்கொண்டு நன்கு புரிந்து படியுங்கள்.

வினாத்தாளில் பகுதி 1-ல் ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 கொடுக்கப்பட்டிருக்கும். இதில் நாம் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையைச் சேர்த்து எழுத வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20.

பகுதி 2-ல் 2 மதிப்பெண் வினாக்கள் பத்து கொடுக்கப்பட்டிருக்கும். இதில் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினா எண் 30 கண்டிப்பாக விடையளிக்க வேண்டிய வினா. இதன் மொத்த மதிப்பெண்கள் 14.பகுதி 3-ல் மூன்று மதிப்பெண் வினாக்கள் 10 கொடுக்கப்பட்டிருக்கும். இதில் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினா எண் 40-க்குக் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் 150 வார்த்தைகளுக்கு மிகாமல் விடையளிக்க வேண்டும். இதன் மொத்த மதிப்பெண்கள் 21.

பகுதி 4-ல் ஐந்து மதிப்பெண் வினாக்களில் மொத்தம் ஏழு வினாக்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் அல்லது என்ற கூடுதல் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஆகையால் இரண்டு வினாக்களில் நாம் ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் விடையளிக்க வேண்டும். இதன் மொத்த மதிப்பெண்கள் 35.

மாணவர்கள் நீலநிற மைகொண்ட பேனா மட்டுமே பயன்படுத்துவது நல்லது.மேலும் அடிக்கோடிட பென்சிலை பயன்படுத்தலாம்.
ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க கேட்கப்படும் 20 வினாக்களில் கண்டிப்பாக 17 வினாக்கள் புத்தகத்தின் பயிற்சி வினாக்கள் மட்டுமே இடம்பெற வாய்ப்புள்ளது. மற்ற மூன்று வினாக்கள் புத்தகத்தினுள்ளேயிருந்து கேட்கப்படும். ஆகையால் மாணவர்கள் புத்தகத்தின் ஒரு அதிகாரத்தின் பின்புறம் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு பயிற்சி செய்துகொள்ள வேண்டும். புரிந்து படித்திருந்தால் மட்டுமே இதர மூன்று வினாக்களுக்கு மாணவர்களால் பதிலளிக்க இயலும்.

இரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்க மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலிருக்கும் அனைத்து இரண்டு மதிப்பெண் வினாக்களையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். தேர்வு எழுதும்போது இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு 3-லிருந்து நான்கு வரிகளுக்குள் விடைகளை எழுதுவது போதுமானது. கேள்விக்குத் தகுந்த பொருத்தமான விடைகளை நறுக்கென்று எழுதுவது நல்லது.

மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க ஒவ்வொரு பாடத்திலிருக்கும் முதல் வினாவைக் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். மேலும் மூன்று மதிப்பெண் வினாக்களுக்குத் தகுந்த விடையளித்தால் போதுமானது. அதிகம் பக்கம் பக்கமாக எழுதவேண்டிய அவசியமில்லை. 6-லிருந்து 8 வரிகளுக்குள் உங்கள் விடைகளை எழுதினாலே போதுமானது. வினாவை நன்கு புரிந்துகொண்டு அதற்குத் தகுந்த விடைகளை எழுதவேண்டும். வினாக்களுக்கு சம்பந்தமில்லாத விடைகளை எழுதவேண்டாம்.

ஐந்து மதிப்பெண் வினாக்களை பொறுத்தமட்டில் மாணவர்கள் வேறுபாட்டு வினாக்கள் அனைத்தையும் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் கேட்கப்படலாம். மாணவர்கள் முக்கியமாக வினாக்களின் தலைப்புகளைக் கண்டிப்பாகப் படித்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ‘மகளிர் தொழில் முனைவோரின் இடர்பாடுகள் விவரிக்க’ என்று வினா கேட்கப்பட்டால் அதற்குக் குறைந்தது ஐந்து தலைப்புகள் எழுதி அதை மட்டும் விவரித்தால் போதுமானது.

  ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் எழுதினாலே போதுமானது. ஏனெனில் நாம் ஏழு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியுள்ளதால் ஏதேனும் ஒரு வினாவிற்கு அதிகம் நேரம் செலவழித்து எழுதுவது நம்முடைய நேரத்தை வீணடிக்கும். அதிக பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை விட்டு வினாக்களுக்குத் தேவையான விடைகளை மட்டும் எழுதினால் போதுமானது.

 இதற்கு முன்பு 200 மதிப்பெண்கள் உண்டு. அதில் நெடுவினாவிற்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆகையால் மாணவர்கள் அதிக பக்கம் எழுதுவார்கள். தற்போது ஒரு வினாவிற்கு ஐந்து மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படுவதால் பக்கம் பக்கமாக எழுதுவதை மாணவர்கள் குறைத்துக்கொள்ளலாம். நெடு வினாவிற்கு அதிகபட்சம் மூன்று பக்கங்கள் எழுதினால் போதுமானது.

உதாரணமாக, ‘மனித வளத்தின் குணாதிசயங்கள் யாவை?’ என்ற வினாவிற்கு நாம் பத்து வரிகளில் விடைகளைக் கொடுக்கலாம். ஆகையால் பாடப் பொருளின் கருத்துகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் கதைகளுக்கு அல்ல என்பதை மாணவர்கள் நன்கு உணர்ந்து படிக்கவேண்டும்.
அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க மாணவர்கள் முயற்சி செய்யவேண்டும். எந்த ஒரு வினாவையும் எழுதாமல் விட்டுவிடக்கூடாது மாணவர்களே! அனைவருக்கும்  வாழ்த்துகள்! (இவர் தரும் மாதிரி வினாக்களை அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.)

- தோ.திருத்துவராஜ்