இனி வயல்கள் தானே நீர் பாய்ச்சிக்கொள்ளும்!



மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு

‘‘இதுக்கு ‘மைக்ரோக்ளைமேட் நீர்ப்பாசனக் கருவி’ன்னு பேர் வச்சிருக்கோம் சார். பயிர்களுக்கு தண்ணீர் எப்போவெல்லாம் தேவைப்படுதோ, அப்போவெல்லாம் பம்பு செட்டை ஆன் பண்ணி
தண்ணீர் தர்றதுதான் இதோட வேலை. இந்தக் கருவி ஒரு விவசாயிகிட்ட இருந்தா, அவர் நிலத்துல அளவுக்கு மேல தண்ணி பாயவும் செய்யாது...

தண்ணி இல்லாம பயிர்கள் காயவும் செய்யாது. தேவையான நேரத்துல தேவையான அளவு தண்ணியை மட்டும் இது தரும்.’’ - பிரமாண்டமாய் துவங்குகிறார் ஸ்வாதி. திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் கணினிப் பொறியியல் படிக்கும் மாணவி இவர். இவரோடு வினோதராணி, சிந்து, ரம்யா என மொத்தம் நான்கு மாணவிகள் இணைந்து செய்திருக்கும் பலே ப்ராஜெக்ட் இது.

‘‘மண்ல எவ்வளவு ஈரப்பதம் இருக்குன்னு கண்டுபிடிக்கிற கருவியை ‘சாயில் மாய்ஸ்சர் சென்ஸார்’னு சொல்வாங்க. காற்றின் ஈரப்பதத்தைக் கணக்கிட ‘ஹுமிடிடி சென்ஸார்’ உதவுது. இது தவிர, டெம்பரேச்சரை கணக்கிடவும் இப்ப எலக்ட்ரானிக் சென்ஸார்கள் இருக்கு. இதையெல்லாம் ஒரு வயல்வெளியில அங்கங்க செட் பண்ணிட்டா போதும்... அந்த நிலத்தை எப்பவும் பல்ஸ் பிடிச்சிப் பார்த்துக்கிட்டே இருக்கும்.

தண்ணீர் அதிகமா தேங்கினாலும் சரி, ஈரப்பதம் குறைஞ்சாலும் சரி... அதை நொடிக்கு நொடி அப்டேட் பண்ணிட்டே இருக்கும். இதைத்தான் நாங்களும் பண்ணியிருக்கோம்’’ என வினோதராணி கேப் விட, சிந்து தொடர்கிறார்...‘‘வயல்வெளியில பல இடங்கள்ல சென்சார்கள் இருக்கும்... எங்கேயாச்சும் ஒரு இடத்துல எங்களோட கன்ட்ரோல் யூனிட் இருக்கும். ஒரு பெரிய சர்க்கியூட் போர்டு, அதில் இணைக்கப்பட்டிருக்குற பேட்டரி, ஒரு எல்.சி.டி திரை, அதைக் கட்டுப்படுத்துற பட்டன்கள்...

இதுதான் எங்க கன்ட்ரோல் யூனிட். நிலத்துல பதிச்சிருக்குற சென்சார்கள் தர்ற தகவல்களை வயர்லஸ் வழியா இந்த கன்ட்ரோலர் உள் வாங்கிடும். நிலத்தோட ஈரப்பதம் குறையும்போதும், வெப்பநிலை கூடும்போதும் மட்டும் பம்பு செட்டை இது ஆன் பண்ணிடும். குறிப்பிட்ட அளவுக்கு மேல தண்ணீர் நிறைஞ்சுட்டா, ஆட்டோமேடிக்கா ஆஃப் பண்ணிடும்’’ என்கிறார் அவர் நுட்பமாக.

‘‘இந்த சென்ஸார்களோட தொடர்பு கொஞ்ச தூரத்துக்குத்தான்னாலும் அங்கங்கே சின்னச் சின்ன கன்ட்ரோல் யூனிட்டுகளை அமைச்சு நூத்துக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கும் பாசனம் பண்ணலாம். சின்ன வீட்டுத் தோட்டத்துக்கும் பயன்படுத்தலாம்.

விவசாயி தன்னோட செல்போன் மூலமா ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியே இந்தக் கருவியைக் கட்டுப்படுத்துற வசதியையும் இப்போ இணைச்சிருக்கோம். ஏழை விவசாயிகளோட நேரத்தையும் தண்ணியையும் மிச்சப்படுத்துற இந்தக் கருவியை ரொம்ப குறைஞ்ச செலவுல உருவாக்க முடியும்’’ என்கிறார் மாணவி ரம்யா பெருமிதத்தோடு! விவசாயத்திலும் தொழில்நுட்பம் லெஃப்ட் புகுந்து ரைட் வரட்டும்!

- எம்.நாகமணி