பல்கலைப் பார்வை!



பாண்டிய நாட்டு  பல்கலைக்கழகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொன்மையும் பாரம்பரியமும் வாய்ந்தது. இது 1957ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்கக் கல்வி மையமாக செயல்படத் தொடங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், உயிரியல், வேதியியல், கணிதம் என சில துறைகளுடன் தொடங்கப்பட்டு அவற்றில் முதுகலைப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

 1965ல் மதுரை பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றது. இந்தப் பல்கலைக்கழகம் பாண்டியர்கள் ஆட்சி செய்த பழமையும் பெருமையும் மிக்க மதுரையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் தேனி நெடுஞ்சாலையில் நாகமலை அடிவாரத்தில் உள்ளது. இது 750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

1979ல் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான காமராசர் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்டது. இப்போது உள்ள பல்கலைக்கழகத்தின் வளாக கட்டு மானத்தை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ஜாகிர் உசேன் துவக்கி வைத்தார்.

இப்பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும் (9 தனித்தியங்கும்) உடன் அனுமதி பெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. 14 தொடர்பு மையங்களை அமைத்துள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் கல்யாணி மதிவாணன் உள்ளார். இவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் ஆவார்.

இந்த பல்கலைக்கழகமானது ஆராய்ச்சி விரிவாக்க மையமாகப் பதிவு செய்யப்பட்டுச் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து பல துறைகளிலிருந்தும் பேராசிரியர்கள் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். பட்னாகர் விருது - 4, தமிழ்நாடு இளம் விஞ்ஞானி விருது - 16, (2 பெண்கள்) என பல விருதுகள் பெற்றுள்ளனர். 12 பேராசிரியர்கள் அறிவியலிலும், கலையியலிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர்.

பல்கலைக்கழகத்திற்கு UGC, CSIR, DST, DBT, MOEF, MOES, ICMR, ICSSR, DRDD, ICAR, MHRD போன்ற நிதி நிறுவனங்கள் நிதி உதவி செய்கின்றன. பல்வேறு நிதி நல்கை நிறுவனங்களின் உதவியுடன் கருவியாக்க மையம், ஆற்றல் சால் நுட்ப உயிரியியல் துறை போன்ற பல துறைகள் புதுப்பிக்கப்பட்டு முழு நிறைவாகச் சிறப்பாக ஆற்றல்மிகு துறைகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து 13 பேராசிரியர்கள் துணைவேந்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இத்தகு சிறப்புச் செயல்பாடுகளால் டிசம்பர் 2005ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆற்றல்சால் பல்கலைக்கழகமாக உயர்நிலை பெற்றுள்ளது.

இதில் இப்போது 20 புலங்களும் 75 துறைகளும் உள்ளன. இப்புலங்களில் பல்வேறு ஆய்வுத் திட்டங்கள் துறை சார்ந்தும் தனிப் பேராசிரியர்கள் சார்ந்தும் செயல்பட்டு வருகின்றன. 12 புலங்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு சிறப்பு நிதியுதவித் திட்டம் என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது. ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் புலம்’ மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 7 அறிவியல் புலங்களின்  புத்தாக்க ஆய்வு மேம்பாட்டிற்குத் துணை புரிந்து ஊக்கமளித்து வருகிறது.

உயிரியல் புலத்தில் கோடைக் கால, குளிர்காலப் பள்ளிகள் நடத்தப்பட்டு இளம் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொலைதூரக் கல்வி மூலமாக தமிழகம் முழுவதிலுமிருந்து இதுவரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வியியல் மேம்பாட்டுக் கல்லூரி பல்வேறு புத்தொளிப் பயிற்சிகளையும் ஒருங்கிணைந்த புத்தாக்கப் பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. பல்லூடகக் கல்வி மையம் மின் உள்ளடக்கம் வழிக் கற்பித்தல் (E Content), செயற்கைக்கோள் வழி கற்பித்தல் (EDUSAT) போன்ற இரண்டு திட்டங்களையும் மற்றும் தனிப்பட்ட கல்வி ஒலிபரப்பு அலைவரிசைத் திட்டம் (Vyas channel) என வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் ஒலிபரப்பப்படும் திட்டத்தை வளர்த்தெடுத்துச் செயல்படுத்தி வருகிறது.

இவை தவிர கல்வித்திட்ட மேம்பாடு, (Curriculum Aspects), கற்றல் கற்பித்தல் மதிப்பீடு, ஆய்வு மேம்பாடு சமூகப் பணியும், அடிப்படை வசதியும் கற்றல் சூழலும், மாணவர் மேம்பாடு, ஆளுமைத் திறன் பொருந்திய தலைமை நிர்வாகம் மற்றும் புதிய திட்டங்கள் என நிர்வாக மேலாண்மை அடிப்படைகளில் பல்கலைக்கழகம் பன்முக அறிவுசார் ஆற்றலை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்ட பல்கலைக் கழகமாகச் செயல்பட்டு வருகிறது.

உள்கட்டமைப்பு

ஒவ்வொரு துறைக்கும் தரமான வகுப்பறைகளும் கருத்தரங்க அறைகளும் அறிவியல் ஆராய்ச்சிக்கான அறைகளும் உள்ளன. பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆண்கள் தங்கும் விடுதிகள் ஐந்தும், பெண்கள் தங்கும் விடுதிகள் மூன்றும் உள்ளன.  இதில் சுமார் 1200 மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்க முடியும். பல்கலைக்கழக ஊழியர்கள் தங்குவதற்காக குடியிருப்பு வசதியும் உள்ளன. இதுதவிர மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின் நலனுக்காக 15 படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவமனையும் செயல்படுகிறது. உள்விளையாட்டு அரங்கம் மற்றும் ஜிம்னாஸியமும் உள்ளன.

நூலகம்

பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நூலகம் நவீனமயமாக்கப்பட்டது. இங்கு 3 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அவற்றில் 55,000 பாடங்கள் தொடர்பான புத்தகங்கள் குறிப்புகள் எடுப்பதற்கானவையாக உள்ளன. 1Gbps  இன்டர்நெட் வசதியும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆயிரம் இ-புக்ஸ் உள்ளன. இங்கு இளங்கலை பட்டப்படிப்புகளும், முதுகலை பட்டப் படிப்புகளும், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள்  தொலைதூரக் கல்வியாகவும் வழங்கப்படுகின்றன.

எம்.நாகமணி
படம்: பாலா