சமூக ஊடகங்கள் மேல் படர்ந்திருந்த கண்ணி விலகியிருக்கிறது. இணையவெளியில் உற்சாகம் பொங்கி வழிகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற இணைய ஊடகங்களில் வெளியிடப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் குற்றமெனக் கருதும் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு ‘66 ஏ’வை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஊழல், லஞ்சம், முறைகேடுகளை அம்பலப்படுத்தும் ஆயுதமாக சமூக ஊடகங்கள் மாறிவரும் சூழலில், இந்தத் தீர்ப்பு அச்சத்தையும், அவநம்பிக்கையையும் தகர்த்திருக்கிறது.
2000மாவது ஆண்டில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2008ம் ஆண்டு அதில் ‘66 ஏ’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. ‘கம்ப்யூட்டர் அல்லது பிற தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் பிறரை வருந்தச் செய்யும், எரிச்சலூட்டும், தொல்லை செய்யும், அவதூறு செய்யும், அச்சம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள், புகைப்படங்களை அனுப்பினால் 3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்’ விதிக்க வகை செய்கிறது இந்தப் பிரிவு.
முதன்முதலில் இந்தப் பிரிவுக்கு உயிர் கொடுத்தவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 2012 ஏப்ரலில், தன்னை விமர்சித்து கேலிச்சித்திரங்களை இணையத்தில் உலவவிட்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மற்றும் சுபத்ராசென் குப்தா ஆகியோரை இப்பிரிவின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அடுத்த சில மாதங்களில், நாடாளுமன்றத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கார்ட்டூன் வெளியிட்ட, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு அக்டோபரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தை ட்விட்டரில் விமர்சித்த புதுச்சேரி ரவி சீனிவாசனும், நவம்பரில் பால் தாக்கரே மறைவையொட்டி மும்பை நகரில் அவரது கட்சியினர் நிகழ்த்திய வன்முறைகளைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் எழுதிய ஷாகின் தாதா, அதை ‘லைக்’ செய்த ரினு ஆகியோரையும் இதே சட்டப்பிரிவின் கீழ் கைதுசெய்தார்கள்.
இந்தக் கைதுகள் பட்டியலில் லேட்டஸ்ட்... சமாஜ்வாதி கட்சித் தலைவரும் அமைச்சருமான ஆசம் கானை விமர்சித்து ஃபேஸ்புக்கில் எழுதிய 11ம் வகுப்பு மாணவன்.
சமூக ஊடகங்களின் குரலை நெரிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற தொடர் தாக்குதல்கள் பெரும் அதிர்வையும் விவாதத்தையும் கிளப்பின. 66 ஏ பிரிவை நீக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவி ஷ்ரேயா உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். அப்பிரிவைப் பயன்படுத்திய அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்று சுட்டிக் காட்டி இப்பிரிவை நீக்கியிருக்கிறது.
தனிமனித துவேஷங்கள், பாலியல் அவதூறுகள், மார்ஃபிங் போன்ற செயலில் ஈடுபடும் வக்கிர மனிதர்கள் இணையவெளி யில் சுதந்திரமாக உலவுகிறார்கள். பல லட்சம் ஆபாச இணையதளங்கள் செயல்படுகின்றன. அதையெல்லாம் சீண்டாமல், ஊழல்களையும், முறைகேடு களையும், அரசின் செயல்பாட்டையும் விமர்சிக்கும் சமூக அக்கறையாளர்களை மிரட்டி ஒடுக்கவே 66 ஏ அதிக அளவில் பயன்பட்டுள்ளது. இதை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
‘‘எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரண குடிமகன் நான். நிறைய நண்பர்கள் ட்விட்டர்ல இருந்ததால என்னையும் சேரச் சொன்னாங்க. ராபர்ட் வதேராவைப் பற்றி இணையத்தில விவாதம் நடந்தப்போ ‘வதேராவை விட கார்த்தி சிதம்பரத்துக்கு அதிக சொத்து இருக்கும்’னு ஒரு ட்விட் பண்ணினேன். அப்போ என் மொத்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை 16. அதில் 9 பேர் என் உறவினர்கள். 3 பேர் என் நண்பர்கள்.
நான் போட்ட ட்விட்டை ஒருத்தர்கூட லைக்கோ, ஷேரோ பண்ணல. திடீர்னு வீட்டுக்கு போலீஸ் வந்துச்சு. கொலைக்குற்றவாளி மாதிரி தூக்கி வேன்ல போட்டுக்கிட்டுப் போனாங்க. ஸ்டேஷனுக்குப் போறவரைக்கும் ஏன் கைது செய்யப்பட்டோம்னே தெரியாது. ஏகப்பட்ட மிரட்டல்கள் வேற. எனக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமும் கிடையாது. அவரை தனிப்பட்ட முறையில காயப்படுத்தணும்ங்கிற எண்ணமும் எனக்கில்லை.
நான் எழுதின விஷயத்தை எதிர்க்கட்சிக்காரர்கள் வீதிக்கு வீதி நின்னு பேசுறாங்க. ஆனா அதை ட்விட்டர்ல போட்டது குற்றம். இந்த சட்டப்பிரிவு கருத்துரிமை, வாழ்வுரிமைக்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் சரியான நேரத்துல இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கு...’’ என்கிறார் இப்பிரிவின் கீழ் வழக்கை சந்தித்த ரவி சீனிவாசன். இப்போது முன்னைக் காட்டிலும் தீவிரமாக இணையத்தில் இயங்குகிறார். இப்போது இவரின் ஃபாலோயர் எண்ணிக்கை 2700ஐத் தாண்டிவிட்டது.
கடந்த ஆண்டு சின்மயி அளித்த ஒரு புகாரின் அடிப்படையில் இதே பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை இருவரை கைதும் செய்தது. தற்போது 66 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது இவ்வழக்கை பின்னடையச் செய்திருக்கிறது. இதுபற்றி சின்மயியின் அம்மா பத்மாஷினி ஆதங்கத்தோடு பேசினார்.
‘‘இணையத்துல பெண்கள் சுதந்திரமாவும், இயல்பாவும் செயல்பட முடியல. ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்துறாங்க. மார்ஃபிங் பண்ணி அசிங்கப்படுத்துறாங்க. ஆபாசமாவும் மிரட்டலாவும் பேசுறாங்க. அதுமாதிரி நபர்களைத் தண்டிக்க 66 ஏ மாதிரி ஒரு பிரிவு அவசியம். அரசு இதைவிடவும் கடுமையா ஒரு புது சட்டத்தைக் கொண்டு வரணும். இப்போதைய சூழ்நிலை தவறான நபர்களுக்கு உற்சாகம் கொடுத்திடக்கூடாது’’ என்கிறார் பத்மாஷினி.
இணையவெளியில் துணிச்சலாகக் கருத்து தெரிவித்து ஆக்கபூர்வமாக இயங்கும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், 66 ஏ பிரிவு நீக்கப்பட்டதை வரவேற்கிறார்.
‘‘இந்திய அரசியல் சட்டத்தின் 19-1 ஏ பிரிவு, கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக்குகிறது. 66 ஏ அந்த அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. இதில் குற்றத்தின் தன்மை தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
ஒரு விமர்சனம் எரிச்சலூட்டினால், வருந்தச் செய்தால், தர்மசங்கடப்படுத்தினால் அது குற்றம் என்கிறது. நியாயமான விமர்சனங்கள் கூட ஒருவரை எரிச்சல் படுத்தலாம். இது சார்ந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட கருத்துகள் அனைத்தும் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் விவாதிக்கப்பட்டவை. அங்கே பேசினால் குற்றமில்லை. இணையத்தில் எழுதினால் குற்றமா? இணையக் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே அளவுகோளை ஆக்கபூர்வமான விமர்சகர்கள் மீதும் பயன்படுத்தக்கூடாது.
66 ஏ நீக்கப்பட்டதால் மட்டும் கருத்துச் சுதந்திரம் முழுதாக காப்பாற்றப்பட்டதாக கருதிவிடக்கூடாது. சாதி, மதக் குழுக்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துகிறார்கள். எழுத்தாளர்கள் எதை எழுத வேண்டும், பத்திரிகைகள் எதை வெளியிட வேண்டும், சினிமாக்கள் எதைக் காட்ட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கிறவர்களாக அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பு 66 ஏ ஒன்றுமே இல்லை. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார் மனுஷ்யபுத்திரன்.
சமூக ஊடகங்களில் அநீதிக்கு எதிராக குரல்கள் ஒருங்கிணைகின்றன. நியாயமும், உரிமையும் உரத்த குரலில் ஒலிக்கிறது. அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் தாட்சண்யமின்றி விவாதிக்கப்படுகின்றன. ஆக்கபூர்வமான அந்த வெளியைக் கவ்வியிருந்த விலங்கு நொறுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் ஆக்கபூர்வமாகவும், பொறுப்புணர்வோடும் அதைப் பயன்படுத்த வேண்டியதும் அவசியம்.
எழுத்தாளர்கள் எதை எழுத வேண்டும், பத்திரிகைகள் எதை வெளியிட வேண்டும், சினிமாக்கள் எதைக் காட்ட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கிறவர்களாக சாதி, மதக் குழுவினர் வளர்ந்திருக்கிறார்கள்! அவர்களுக்கு முன்பு 66 ஏ ஒன்றுமே இல்லை.
- வெ.நீலகண்டன்