வைரமுத்து காதல் சமர்ப்பணம்
கலையுலகத்தில் இளமைக் காதலுக்கு மொத்த குத்தகை கவிப்பேரரசு வைரமுத்து தான். ‘ஓ காதல் கண்மணி’க்கு எழுதிய காதல் வரிகள் அதற்கு சாட்சி. பனித்துளியில் வானம் பார்க்கிற தன் மனசை அந்தப் பாடலோடு இதோ இதோ எனத் திறந்து காண்பிக்கிறார்...‘‘ ‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் சற்றே சோர்வாக இருந்தார். அப்போது நான் அவரிடம் பேசினேன். ‘இது உங்கள் உழைப்புக்கான தோல்வி கிடையாது. படத்திற்கான தோல்வியும் கிடையாது.

இது வணிகத் தோல்வியே தவிர கலைத் தோல்வி கிடையாது’ என உண்மையை அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். ‘எனவே நீங்கள் அந்தக் கவலைக்குள் கரைந்து போக மாட்டீர்கள் என நம்புகிறேன். அடுத்த முயற்சியை உடனே ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு சுலபமாக வெற்றி தரக்கூடிய காதல் களமாக இருக்கட்டும்’ என்றேன்.
கொஞ்சநாள் கழித்து அலைபேசியில் அவர் பெயர் வந்து சிணுங்கியது. ரத்தினச் சுருக்கமாகக் கதையைச் சொன்னார். அவருக்கே உரித்தான காதல் கதை. அவருக்கு பாடலும் இசையும் நவீனமும் காதலும் கலந்து தர வேண்டியிருந்தது. ‘ஓ காதல் கண்மணி’ நிகழ்காலக் காதலின் நகலாக இருக்கும்.

இப்படியான ஒரு வேளையில்தான் மறுபடியும் அழைப்பு. ‘நம்ம படத்துக்கு ஒரு தமிழ்க் கீர்த்தனை வேண்டும். அது கடவுளைப் பார்த்து பக்தன் கேட்பது போலவும் இருக்கணும்... அதே நேரம், காதலன் காதலிக்கும் பொருந்தி வரணும். அவசரம்... நாளைக்கே தருவீங்களா’ என அவர் கேட்டதிலேயே அவசரமும் ஆர்வமும் எனக்குப் புரிபட்டது. ‘நாளை நான் ஊரில் இல்லையே. ஆகவே...’ என இழுத்தேன்.
மறுமுனையில் அவர் திகைத்திருப்பது மௌனத்திலேயே தெரிந்தது. ‘அதனால்... இன்றே இப்பொழுதே எழுதித் தந்து விடுகிறேன்’ என்றேன். ‘அடடா, போதும்’ என விரிந்த புன்னகையில் மலர்ந்து சொன்னார் மணி. நான் எழுதிய கீர்த்தனை இதுதான். ஏ.ஆர்.ரஹ்மானின் மெல்லிசையில் சித்ரா பாடியிருக்கும் பாடல். புதிய சங்கீதப் பரம்பரைக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையக்கூடும் எனக் கேட்டவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். நான் அதையே தமிழ் மக்கள் சொல்லிப் பார்க்க ஆசைப்படுகிறேன்!’’ அந்த வரிகள் இங்கே...
‘மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்?
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்?
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்?
சொற்கள் கேட்டேன் கவிதை தந்தனை
மின்மினி கேட்டேன் விண்மீன் தந்தனை
எதனைநான் கேட்பின் உனையே தருவாய்?
பசியில் துடித்தேன் இரையாய் வந்தனை
பிணியில் துடித்தேன் மருந்தாய் வந்தனை
எதில் நான் துடித்தால் இறையாய் வருவாய்?’
புதிய சங்கீதப் பரம்பரைக்கு
இது ஒரு வரப் பிரசாதமாக அமையக்கூடும்
- நா.கதிர்வேலன்