‘‘டெல்லி மக்களே... உங்களை ராமரின் வழித்தோன்றல்கள் ஆள வேண்டுமா? அல்லது முறைதவறிய உறவில் பிறந்தவர்கள் ஆள வேண்டுமா? முடிவு செய்யுங்கள்!’’- கடந்த திங்கள்கிழமை டெல்லியில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் இப்படி ஆவேசமாகப் பேசி, நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பக் காரணமாகி இருக்கிறார்,

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி. பிரதமர் மோடியின் அரசு எதிர்கொண்ட முதல் நெருக்கடிக்குக் காரணமான இந்த அனல் துறவி, இதற்கு முன்பும் இப்படிப் பேசியதுண்டு. என்ன, அப்போது அமைச்சராக இல்லாததால் இந்த அளவு பிரச்னை ஆகவில்லை, அவ்வளவுதான்!
மோடி அலையால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபதேபூர் தொகுதியிலிருந்து எம்.பி.யான ஜோதிக்கு சர்ச்சைகள் புதிதல்ல. யமுனை நதியில் படகோட்டியும் மீன் பிடித்தும் வாழும் நிஷாத் என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தில், மிக வறிய குடும்பத்தில் பிறந்தவர் ஜோதி.
பெரிய குடும்பத்தின் பாரத்தை அப்பாவோடு இணைந்து சுமக்க வேண்டியிருந்ததால், பள்ளிப் படிப்பு பாதியில் நின்றது. அப்பாவோடு சென்று யமுனையில் மீன் பிடித்து சந்தை யில் விற்பது சிறுமியாக அவர் கண்ட வாழ்வு.
ஊரில் சத்சங்கம் நடக்கும்போது தவறாமல் சென்று பங்கேற்பார். காரணம், பக்தி அல்ல; பசி! பிரசாதம் வாங்குவதற்காகவே வரும் ஒரு ஏழைச் சிறுமிக்கு இருக்கும் அபார குரல் வளமும், ஞாபக சக்தியும் அச்சுதானந்தரை ஈர்த்தது. அவர்தான் இந்துத்வ பாதைக்கு ஜோதியைத் திருப்பி விட்டவர். அவரது வழிகாட்டலில், பகவத் கீதை கதாகாலட்சேபம் செய்வதில் ஜோதி தேர்ந்தார். அவரது குடும்பத்துக்கே அது வளம் சேர்த்தது.
திருமணம் தோல்வியில் முடிந்து அவர் மீளாத் துயரில் ஆழ்ந்தபோது சுவாமி பரமானந்தர் அவருக்கு தீட்சை கொடுத்து துறவி ஆக்கினார். விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இணைந்து, ராமர் கோயில் இயக்கத்தை உ.பி. முழுக்க கொண்டு சேர்த்த பிரதான குரல்களில் ஒன்று ஜோதியினுடையது.
அங்கிருந்து பாரதிய ஜனதாவுக்குள் வந்தவர், உ.பி. சட்டமன்ற தேர்தலில் இரண்டு முறை தோற்றார். கடந்த தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆனவரை, மோடி எம்.பி. ஆக்கி டெல்லிக்கு அழைத்துக் கொண்டார்.
தேர்தலின்போது எதிர்க்கட்சியினரை அவர் விமர்சித்த பல வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாது. எம்.பி. ஆனதும் தன்னைக் கொல்ல சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுப்பினார். உள்கட்சி கோஷ்டி மோதலில் அடிபட்டார். தனக்காக உழைத்தவர்களை இவர் பழிவாங்குவதாக தொண்டர்கள் சொன்னார்கள்.
அதற்காக கட்சி விசாரணை நடக்கிறது. எம்.பி.க்கள் கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தில் இவர் செய்த குளறுபடியால் தொகுதியில் போராட்டம் நடந்து ஒருவர் இறந்தே போனார். இந்தச் சூழலில் இவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்துவிட்டது. மோடியின் தூய்மை இந்தியாவில் இம்மாதிரி அழுக்கு பேச்சுகளுக்கு இடம் உண்டா?
-அகஸ்டஸ்