சென்னைக்கு தேவையா மோனோரயில்?



ஒருவழியாக 2015ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின்போது சென்னையில் கோயம்பேடு - மவுன்ட் இடையே சிறிதளவு தூரத்துக்கு மெட்ரோ ரயில் தனது பயணத்தைத் தொடங்கி விடும். மெட்ரோ பாதையின் விரிவாக்கம் ஒருபுறமிருக்க,

 மோனோரயில் திட்டத்தை வேகமாக அமல்படுத்தத் துடிக்கிறது அ.தி.மு.க அரசு. 3,627 கோடி ரூபாய் செலவில் பூந்தமல்லி-கத்திப்பாரா, போரூர்-வடபழனி இடையில், 20.68 கி.மீ. தூரத்துக்கு மோனோரயில் திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை. நெரிசல் மிகுந்த சென்னை மாநகருக்கு இது பொருத்தமில்லாத திட்டம் என குரல்கள் உயர்கின்றன.

கடந்த 2006ல் உருவாக்கப்பட்டது மோனோரயில் திட்டம். ரூ.16,650 கோடி செலவில் பூந்தமல்லி-கத்திப்பாரா, பூந்தமல்லி-வடபழனி, வண்டலூர்-வேளச்சேரி, வண்டலூர்-புழல் ஆகிய 4 வழித்தடங்களில் 300 கி.மீ தொலைவுக்கு திட்டமிடப்பட்டது. அப்போதே இதற்கு எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

அதன்பிறகு மெட்ரோ ரயில் திட்டம் வந்தது. மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு மீண்டும் மோனோ ரயிலை தூசிதட்டியது. அதை செயல்படுத்தும் பொறுப்பு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் வழங்கப்பட்டு, முதற்கட்டப் பணிகளுக்காக 200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதை செயல்படுத்த மூன்றுமுறை சர்வதேச டெண்டர் கோரியும் ஒரேயொரு நிறுவனம் தவிர வேறெந்த நிறுவனமும் முன்வரவில்லை.

இதற்கிடையில், திட்ட வரைவுகளும் பெருமளவு மாற்றப்பட்டன. 300 கி.மீ தூரம், 111 கி.மீ. தூரமாகக் குறைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடம் கோரப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் 20.68 கி.மீ தூரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு, நிதியை வழங்க மறுத்து விட்டது. மாநில அரசு நிதி அல்லது, தனியார் கூட்டுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டு நழுவிக் கொண்டது. இதையடுத்து திரும்பவும் மோனோரயில் திட்டத்தை தூசி தட்டுகிறார்கள் அதிகாரிகள்.

அதே நேரத்தில், ''மோனோரயில் திட்டம் சென்னைக்கு சிறிதளவும் பொருந்தாது’’ என்ற குரல்களும் அழுத்தமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ‘‘ஓரிரு கி.மீ. தூரமுள்ள பகுதிகளை இணைக்கவும், தீம் பார்க்குகளிலும் சுற்றுலா தலங்களிலும் சாகச மகிழ்ச்சியை உருவாக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும் மோனோரயிலை பயணிகள் போக்குவரத்தாக அமைப்பதன் பின்னணியில் உள்நோக்கம் இருக்கிறது’’ என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

‘‘உலகில் 60 இடங்களில் மட்டுமே மோனோரயில் பயன்பாட்டில் இருக்கிறது. அதிலும் 48 இடங்களில், 3 முதல் 4 கி.மீ தூரத்துக்கு மட்டுமே ஓடுகிறது. 12 இடங்களில் மட்டுமே 10 கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிற்கு இயக்கப்படுகிறது.

அதிலும் 5 இடங்களில் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. உலகின் மிகப்பெரிய திட்டம் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஜப்பான் நாட்டின் ஒசாகா மோனோரயில் திட்டத்தின் நீளமே 28 கி.மீ.தான். ஆனால், சென்னையில் 111 கி.மீ. தூரத்துக்கு திட்டம் தீட்டுகிறார்கள். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, மலேசியாவின் புத்ரஜயா, அமெரிக்காவின் சியாட் நகரங்களில் மோனோ ரயில் திட்டப்பணிகள் பாதியோடு நிறுத்தப்பட்டுள்ளன. உலகத்தில் எங்குமே இதற்கு வரவேற்பில்லை. கட்டுமானச் செலவு மட்டுமின்றி, மோனோ ரயிலை இயக்குவதற்கான செலவும் அதிகம்.

கோலாலம்பூரில் 8 கி.மீ தூரப் பணிகளை முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. 8 மாதம் ரயிலை இயக்க மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அதை இயக்கிய நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது. மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் மோனோரயில் நிறுவனங்கள் தந்திரங்களைக் கையாண்டு, கட்டுக்கதைகளைக் கூறி தங்கள் தயாரிப்பை விற்பனை செய்கிறார்கள். இந்த நிறுவனங்கள் காப்புரிமை பெற்றிருப்பதால் வேறு யாரிடமும் போல்ட் நட் கூட வாங்க முடியாது...’’ என்று அதிர வைக்கிறார் ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் செயலாளர் இரா.அருள். தொடக்கத்திலிருந்தே இத்திட்டத்தை எதிர்த்து வருகிறது இந்த அமைப்பு. 

‘‘ஒசாகா மோனோரயில் திட்டத்தில் 1 நாளைக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் பயணிப்பதாகச் சொல்கிறார்கள். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3500 பேருந்துகள் உண்டு. இவற்றில் ஒரு நாளைக்கு 50 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினாலே சென்னையின் போக்குவரத்துப் பிரச்னை தீர்ந்துவிடும்.

‘பேருந்துகளை அதிகமாக்குங்கள்’ என்றால் சிலர், ‘சாலைகளுக்கு எங்கே போவீர்கள்?’ என்று கேட்பார்கள். 8 லட்சம் வாகனங்கள் ஓடிய அதே சாலைகளில்தான் இன்று 30 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. தினமும் புதிதாக 100 கார்கள் சாலைக்கு வருகின்றன. ஆக்கிரமிப்புகளைக் களைந்து தரம் வாய்ந்த சாலைகளை அமைத்தால் போதும். இந்தியாவில் அதிக டூவீலர்கள் ஓடும் நகரம் சென்னைதான். பேருந்துகளை அதிகமாக்கினால் டூவீலர் எண்ணிக்கை குறைந்து விடும். 

மோனோரயிலில் செய்யும் முதலீடு வீண். இந்த திட்டத்தில் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொண்டே 3 தடவை டெண்டர் விட்டும் நிறுவனங்கள் வரத் தயங்குகின்றன. மோனோரயில் நிறுவனங்களின் பின்னணியில், அதில் உள்ள பாதகங்களை மறைத்து சில அதிகாரிகள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதே என் கணிப்பு’’ என்கிறார் அருள்.
இந்தியாவின் முதல் மோனோரயில் மும்பையில் கடந்த பிப்ரவரியில் ஓடத் தொடங்கியது.

வடாலா முதல் செம்பூர் வரை, 19 கி.மீ தூரத்துக்கு ஓடும் இந்த திட்டத்துக்கான செலவு 1900 கோடி. நாளொன்று ரயிலை இயக்கும் செலவு மட்டுமே ரூ.7 லட்சம். ஆனால் டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகை வெறும் ரூ.2 லட்சம். மாதத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொள்கிறது மும்பை மோனோரயில். இந்த இழப்பு காரணமாக 2வது கட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.‘‘டெல்லி, சண்டிகரைப் போல திட்டமிட்டு உருவாக்கப்படாத பழமையான நகரம் சென்னை.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நகரத்தை பிற்காலத்தில் நாம் மேம்படுத்தியிருக்கிறோம். 1950களில் இங்கு மோனோரயிலைக் கொண்டு வந்திருந்தால் பயனளித்திருக்கும். நகரத்தையே வேறு மாதிரி திட்டமிட்டிருக்கலாம். இப்போது மோனோரயில் கொண்டு வருவது நகரத்தையே குலைத்துவிடும்...’’ என்கிறார் சட்டம், மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நிபுணர் ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி.

‘‘சென்னையில் பறக்கும் ரயில் திட்டமே பெரிய அளவில் பயனளிக்கவில்லை. ஆனால் அதில் கிடைக்கும் பலன் கூட மோனோரயி லால் கிடைக்க வாய்ப்பில்லை. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நகரமைப்புத் தன்மை சென்னையை விட வேறுபட்டது. இங்குள்ள நெருக்கடிக்கு எந்த விதத்திலும் மோனோரயில் தீர்வாக இருக்காது. 4 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் 500 முதல் 600 பேர் மட்டுமே பயணிக்கலாம். ஆனால் அதற்கான செலவு பல மடங்கு அதிகமாகும். சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு இது போதாது’’ என்கிறார் ஷங்கர்.

வளர்ந்த நாடுகளில் ஒரு திட்டத்தை அடுத்த நூறாண்டுகளை மனதில் வைத்தே உருவாக்குகிறார்கள். ஆனால் நம் ‘நிபுணர்கள்’, அடுத்த 10 ஆண்டுகளை மட்டுமே இலக்கு வைக்கிறார்கள். போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்க்க எவ்வளவோ எளிய வழிகள் இருக்கும்போது உலகமே கைவிட்ட அல்லது தொடத் தயங்குகிற ஒரு திட்டத்தை விடாப்பிடியாக நிறைவேற்றத் துடிப்பது நிறைய கேள்விகளை எழுப்புகிறது. ஒற்றைப் பைசாவாக இருந்தாலும் அது மக்களின் பணம். அதை ஆட்சியாளர்கள் மனதில் வைத்துக்கொள்வது நல்லது.

வளர்ந்த நாடுகளில் ஒரு திட்டத்தை அடுத்த நூறாண்டுகளை மனதில் வைத்தே உருவாக்குகிறார்கள். ஆனால் நம் ‘நிபுணர்கள்’, அடுத்த 10 ஆண்டுகளை மட்டுமே இலக்கு வைக்கிறார்கள்.

மோனோரயில் திட்டம் மொத்த தொலைவு- 20.68 கி.மீ மொத்த செலவு- 3,267 கோடி

*வழித்தடம்-1

பூந்தமல்லி- கத்திப்பாரா
மொத்த நிறுத்தங்கள்: 11
பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, போரூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், பட் ரோடு, கத்திப்பாரா ஜங்ஷன்.

*வழித்தடம்-2
போரூர்- வடபழனி
மொத்த நிறுத்தங்கள்: 4
போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி

வெ.நீலகண்டன்