ஆர்யாகாந்த்!



‘சன் குடும்பம் 2014’ விருதுகள் நிகழ்ச்சியில் பல சுவையான தகவல்களைப் படித்து மகிழ்ந்தோம். கட்டுரையே நேரில் பார்த்த எஃபெக்ட் கொடுக்க, சன் ஒளிபரப்பில் இன்னும் ஹை டோஸ் கிடைத்தது!
- எஸ்.சுமதி சந்திரன், காங்கேயம்.

சாருஹாசனின் பள்ளி நண்பன் ராமநாதன் பற்றிய நினைவுகள், நெகிழ்ச்சி. இளம் வயதில் சிலரின் மேன்மையை உணராமல், முதுமையில் உணரும் மனப் பக்குவம் எல்லாருக்கும் வாய்க்கிறது!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

‘சந்தோ...ஷ்’ என சின்னக் குழந்தையாய் சிணுங்கிய ஜெனிலியாவுக்கே ஒரு குழந்தை பிறந்திருக்கிறதா? வாவ்! ஹனியாக பார்த்த ஜெனியை இனி அம்மாவாய் தலைவணங்கி ஏற்போம்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘மீண்டும் மிரட்டும் பறவைக் காய்ச்சல்’ கட்டுரை சரியான நேரத்தில், சரியாக அடிக்கப்பட்ட அலாரம். பி5ழி1 வைரஸ் பற்றியும், நோய் அறிகுறிகளையும் அடுக்கிய விதம், எளிமை, தெளிவு, துல்லியம்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை-1.

மனச்சோர்வும் மன அழுத்தமும் சமூகத்தின் அவலமாகிப் போய் அது குடும்பக் கொலைகளுக்குக் காரணமாகிறது. இதற்கான தீர்வில் அரசுக்கும் மக்களுக்கும் சமபங்கு இருப்பதை சுட்டிக் காட்டிய கட்டுரை, நச்!
- சாரதாமணி, போத்தனூர்.

‘மனக்குறை நீக்கும் மகான்கள்’ பகுதியில் வரும் ஸ்ரீஅரவிந்த அன்னையின் சரிதம், அவரின் பக்தர்களுக்குக் கிடைத்த ஆன்மிக அமுதம்! மணியம் செல்வனின் தூரிகையில் அன்னை, தெய்வ உருவாய் மின்னுகிறார்.
- டி.கே.தெய்வநாயகி, புதுச்சேரி.

விவசாயிகளின் ஏர் போல, கால மாற்றத்தால் காணாமல் போகிறது மீனவர்களின் கட்டுமரம். அதைக் கட்டும் கடைசி மனிதனின் பேட்டியைப் படித்தபோது விழிகளில் கண்ணீர்த் துளிகள்!
- காந்தி லெனின், திருச்சி.

ரஜினிக்கென்று பிரத்யேகமாக, ‘லிங்கா’ படத்திற்காக ஒரு கோயில் உருவாக்கப்பட்டதா? இப்படி வரிசையாக லிங்கா சீக்ரெட்ஸை வெளியிட்டு படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டீர்கள்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘மீகாமன்’ படத்தில் ஹன்சிகா காலை ஆர்யா வருடுவதும், ஹன்சிகா முத்தம் கொடுப்பதும்... ஆஹா சூப்பர் ஸ்டில்லு! ஆர்யா காந்தம் மாதிரி... எந்த இரும்பு இதயத்தையும் இழுத்துடும் போலிருக்கே! வாழ்க ‘ஆர்யாகாந்த்’!
- டி.வி.சூரஜ்குமார், கோவை.