மரத்தில் விளையுது மின்சாரம்!



பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?’ என்பது போன்ற தத்துவார்த்த கேள்விகளை இனி கேட்க முடியாது. பிரான்ஸில் ஒரு மரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ‘காற்று மரம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மரத்திலிருந்து மின்சாரமே தயாரிக்கலாம்.

ஒற்றை வரியில் சொல்வதானால், காற்றாலை மின்சாரத்துக்காக பெரிய பெரிய காற்றாடிகள் நிறுவுகிறார்களே... அதன் சுருங்கிய வடிவமே இது! பிரான்ஸைச் சேர்ந்த ‘நியூ விண்ட்’ என்ற நிறுவனத்தின் எஞ்சினியர்களின் மூன்றாண்டு உழைப்பில் உருவானது. 25 அடி உயரத்தில் இருக்கும் இந்த மரத்தை எங்கு வேண்டுமானாலும் நடலாம். ஒரு மரத்தில் நூறு இலைகள் உண்டு. இலைகள் என்றால், அவை குட்டி குட்டி காற்றாலைகள். காற்றில் அவை சுழலும்போது இந்த மரம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

‘‘பெரிய காற்றாலைகளுக்கு சில வரையறைகள் உண்டு. அதிகம் காற்றடிக்கும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அவை பலன் தரும். ஆண்டில் ஐந்து அல்லது ஆறு மாதங்கள்தான் அப்படி மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு காற்று வீசும். இதில் அப்படி இல்லை. நெரிசலான நகரத்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசலில்கூட இந்த மரத்தை நிறுவலாம். லேசான காற்றில்கூட மின்சாரம் உற்பத்தியாகும்’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைவர் ஜெரோம் லாரிவியர்.

இதன் இலைகள் என்பவை, சுமார் ஒன்றரை அடி உயரத்தில் இருக்கும் பிளாஸ்டிக் சுழல் பிளேடுகள். காற்று உள்ளே போனதும் இவை சுற்றி, அந்த விசையை மின்சாரமாக மாற்றுகின்றன. ‘‘எதிர்காலத்தில் இயற்கையான இலைகளிலிருந்தே நாரெடுத்து இந்த மரத்துக்கு இலைகள் உருவாக்கும் திட்டம் இருக்கிறது. இந்த மரத்தை தரையில்தான் நட வேண்டும் என்றில்லை. மொட்டை மாடிகள், சாய்வான வீட்டுக் கூரைகளிலும் நிறுவலாம். இதிலேயே சூரிய மின்சாரத்தை உருவாக்கும் பேனல்களையும் பதித்து இரண்டு விதமாகவும் லாபம் அடையலாம்’’ என்கிறார் லாரிவியர்.

இப்போது ஒரு மரத்தின் விலை ரூ.22 லட்சம். எதிர்காலத்தில் இதன் விலை கணிசமாகக் குறையுமாம். நல்ல காற்று வரும் இடத்தில், முதல் ஓராண்டிலேயே போட்ட பணத்தை எடுத்து விடலாம் என நம்பிக்கை தருகிறார் இவர். வரும் ஆண்டிலேயே இது விற்பனைக்கு ரெடி! எதிர்காலத்தில் எல்லோரும் ஆர்வமாக மரம் நட ஆரம்பித்து விடுவார்கள் போல!

- அகஸ்டஸ்