சாதிக்கும் திருநங்கைகள்



எச்சூழலிலும் திசைமாறக் கூடாது!

நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. கடையேறி ஏறி காசு கேட்பதும், பாலியல் தொழில் செய்வதுமே பெரும்பாலான திருநங்கைகளுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. கல்வி, வேலை என எந்தப்பக்கம் நகர்ந்தாலும் பாலினம் இடைமறிக்கிறது. குடும்பத்தைப் போலவே சமூகமும், அரசும் திருநங்கைகளைப் புறக்கணிக்கவே செய்கின்றன.

இத்தனை இடைமறித்தல்களுக்கு மத்தியிலும், கடும் உழைப்பால் சில திருநங்கைகள் தங்கள் சுயத்தை நிரூபிக்கவே செய்கிறார்கள். நிராதரவான சூழல், குழப்பமான மனநிலை, மிரட்டல், விரட்டல்களைக் கடந்து, தாங்கள் விரும்பிய இலக்கைத் தொட்டு முன்மாதிரியாக நிற்கிறார்கள். இளம் தலைமுறை திருநங்கைகளுக்கு, அவர்களின் வெற்றி பாடமாக இருக்கிறது.

கோவையைச் சேர்ந்த பத்மினிக்கு பரதநாட்டியக் கலைஞர், இசைக்கலைஞர், செய்தி வாசிப்பாளர் என ஏகப்பட்ட முகங்கள். இதை எட்டிப் பிடிக்க அவர் பட்ட வதைகள், சொல்லில் அடங்காது.

‘‘8 வயசுலயே குழப்பம் தொடங்கிடுச்சு. அண்ணன், தம்பின்னு வித்தியாசம் இல்லாம எல்லார்கிட்டயும் அடி, உதை... 14 வயசுல வீட்டை விட்டு கிளம்பிட்டேன். அப்போ, எனக்கு ஆதரவா இருந்தது, குடும்ப நண்பர் பிரகாஷ்தான். முறைப்படி, நடனமும் இசையும் கத்துக்கிட்டேன்.

பள்ளிகள்ல நடன ஆசிரியையா வேலை செஞ்சேன். நிறைய நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் போறேன். சாலமன் பாப்பையா சார்கூட பட்டிமன்றங்கள் கூட பேசியிருக்கேன். இப்போ தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரா இருக்கேன்...’’ என்கிற பத்மினி, பிரகாஷையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு குழந்தையை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. ஐந்து வயதிலேயே தன் பாலியல் சிக்கலை உணர்ந்த வைஷ்ணவி, பெரும் மனக்குழப்பத்துக்கு உள்ளானார். பெற்றோரும், உற்றாரும் புரிந்து கொள்ளாத நிலையில், சக திருநங்கைகள் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். கண்முன்னே, பாலியல் தொழிலும், கடைகேட்டலுமே வாழ்வாதாரமாக நிற்க, ‘எச்சூழலிலும் வீட்டை விட்டு வெளியேறி திசை மாறக்கூடாது’ என்று உறுதி எடுத்துக்கொண்டு, வெளியில் ஆணாகவும் உள்ளுக்குள் பெண்ணாகவும் வாழப் பழகினார்.

ஆண் அடையாளத்துடனே ஒரு நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்து, மெஷின் ஆபரேட்டராக ஆனார். கூடவே டிரைவிங் இருந்தால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற நிலையில், கனரக வாகனம் பழகி லாரி டிரைவர் ஆனார். சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் முடிந்தபிறகு, தனக்கும் திருமண ஏற்பாடுகள் தொடங்க, குடும்பத்தில் போராட்டம் தொடங்கியது. தன்னைப் போன்ற திருநங்கைகளை வீட்டுக்கு அழைத்து வந்து தன் நிலையை விளக்கச் செய்தார்.

வைஷ்ணவியின் அக்கா விஜயலெட்சுமி ஆதரவாக நின்றார். சுதந்திர திருநங்கையாக அடையாளம் பெற்ற வைஷ்ணவி, பார்த்த வேலையை விட்டு விட்டு லோனில் ஒரு ஷேர் ஆட்டோ வாங்கினார். திருவொற்றியூர்- பாரிமுனை வழித்தடத்தில் இறக்கை கட்டிப் பறக்கிறது வைஷ்ணவியின் ஷேர் ஆட்டோ. கடனை முறையாகத் திரும்பக் கட்டுவதோடு குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறார். உறவுகள் மத்தியிலும், பயணிகள் மத்தியிலும் பெரும் மரியாதையோடு வாழ்கிறார் வைஷ்ணவி. தூத்துக்குடியைச் சேர்ந்த பாரதி, இந்தியாவின் முதல் மாற்றுப்பாலின இறைப்பணியாளராக உயர்ந்திருக்கிறார்.

‘‘இந்த அடையாளத்தை உணர்ந்தபோது மனதுக்குள் இனம்புரியாத குழப்பம். உணர்வும், செயலும் வேறு வேறாக இருந்தன. பள்ளியில் கிண்டல், கேலி, புறக்கணிப்பு... முடங்கிப் போனேன். அப்போதெல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்தது இறைப்பணிதான். சர்ச், கிராம ஊழியம் என்று நாட்கள் கழிந்தன. வீட்டின் நெருக்கடியை +2 முடிக்கும் வரை தாக்குப் பிடித்தேன். அதற்குமேல் முடியவில்லை. சென்னை வந்து கடைக்குக் கடை போய் காசு கேட்டேன்.

எனக்கு ஏற்பட்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும், ‘மற்ற பாலினரைப் போல நம்மாலும் கௌரவமாக வாழமுடியும்’ என்று நிரூபிக்கும் வேகத்தை ஏற்படுத்தின. ஒரு இறைப்பணியாளர் மூலம் திருநங்கை என்ற அடையாளத்துடனே இறைப்பணிக் கல்லூரியில் சேர்ந்து 4 ஆண்டு ‘தியாலஜி’ படிப்பையும், 2 ஆண்டு ‘டிவைனிட்டி’ படிப்பையும் முடித்து இறைப்பணியாளராக ஆனேன்.

செங்கல்பட்டு இ.சி.ஐ. சர்ச்சில் பணி அமர்த்தப்பட்டேன். ஒரு திருநங்கை பாஸ்டரானதை ஆண் போதகர்களும், சுவிசேஷகர்களும் சகித்துக்கொள்ளவில்லை. எல்லா எதிர்ப்பு களையும் கடந்தேன். இப்போது அந்தப் பணியிலிருந்து விலகி மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் பாரதி.

செல்வி சந்தோஷம், பிசியோதெரபிஸ்ட். சென்னை கிரிக்கெட் கிளப்பின் ஆஸ்தான இயன்முறை மருத்துவர் இவர்தான். ஐ.பி.எல் வீரர்களுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். திருநெல்வேலி கல்குறிச்சியைச் சேர்ந்தவர். ‘‘டாக்டர் கனவோட பள்ளிக்கூடத்துக்குப் போனவ நான். ஆனா பாலினக் குழப்பம் என்னை திசை திருப்பப் பாத்துச்சு. ஆனா, இறைவன் ஒரு குறை வச்சிருந்தா அதுக்கு இணையா ஒரு நிறையும் வச்சிருப்பார். நான் எனக்குள் இருந்த நிறைகளைத் தேடுனேன்.

 நல்லாப் படிச்சேன். ஆனாலும் என் மருத்துவக் கனவு பலிக்கலை. ஆனா மருத்துவம் சார்ந்தே படிக்கணும்ங்கிறதுல உறுதியா இருந்தேன். பிசியோதெரபியை தேர்வு செஞ்சேன். அதன்பிறகுதான் குடும்பத்தில என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன். பலத்த அதிர்ச்சி இருந்தாலும் என் நடவடிக்கையும், அன்பும் அவங்களைப் புறக்கணிக்க விடலே. எல்லா உறவுகளும் என்கூட இருக்காங்க.

ஒரு சராசரி மனுஷனுக்குக் கிடைக்கிறதைக் காட்டிலும் அதிக மரியாதையோடு இன்னைக்கு என்னால வாழமுடியுது. சென்னையில ஒரு கிளினிக் திறக்கிற வேலையும் நடந்துக்கிட்டிருக்கு...’’ என்கிறார் செல்வி சந்தோஷம்.

தேனி, தெப்பம்பட்டியைச் சேர்ந்த ஸ்வாதியிடம் நாட்டுப்புறக் கலைகள் தலைதாழ்த்தி நிற்கின்றன. கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம், குறும்பராட்டம், கம்பத்தாட்டம், மான் கொம்பாட்டம் என ஏகப்பட்ட கலைகளில் தேர்ந்தவர். மாதத்தில் 20 நாட்கள் நிகழ்ச்சிகளில் கழிகிறது. ‘‘நிராதரவா நின்னப்போ என் கண் முன்னால இருந்தது இரண்டே வழிகள்தான். பாலியல் தொழில், பிச்சை எடுக்கிறது. இரண்டுலயுமே எனக்கு விருப்பமில்லை.

என்னால கௌரவமா வாழமுடியும்னு நம்பினேன். திருநங்கைகளுக்காக வேலை செய்யுற ஒரு அமைப்புல சேந்தேன். அப்படியே கலைகளையும் கலந்துக்கிட்டேன். கலைக்கு பாலினமெல்லாம் இல்லை. இப்போ எனக்கிருக்கிற அடையாளம் ‘கலைஞன்’. பள்ளி, கல்லூரிகளுக்கெல்லாம் போய் கலைப்பயிற்சி கொடுக்கிறேன். குடும்பத்திலயும் என்னை ஏத்துக்கிட்டாங்க...’’ - மகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஸ்வாதி.

ராயபுரம் ஸ்வேதா, ஜுவல்லரி மேக்கர். தமிழகமெங்கும் சப்ளை செய்கிறார். அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இவருக்கு நிரந்தர ஸ்டால் உண்டு.மாலை நேரக் கேன்டீனும் நடத்து கிறார். ஜாபர்கான்பேட்டை கோமதியின் கரங்களில் தெய்வீகக்கலை நர்த்தனமாடுகிறது. மண்ணுக்குள் இருக்கும் இறைவனின் உருவத்தை லாவகமாக வெளிக்கொண்டு வருகிறார். தவிர போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் திருநங்கைகள் குறித்த பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

‘‘சின்ன வயசுல இருந்தே எனக்கு பக்தி அதிகம். திருநங்கையா அடையாளப்பட்டதை வீட்டுல யாரும் பெருசா எடுத்துக்கலே. எனக்குள்ள இருக்கிற மாற்றத்தை உணர்ந்தபிறகு, நிறைய திருநங்கைகளை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வருவேன். விருந்தாளி மாதிரி அவங்களை வரவேற்று உபசரிப்பாங்க. +2 வரைக்கும் படிச்சேன். அதுக்குப்பிறகு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில சேந்தேன். அங்கிருந்து போலீஸ் டிரெய்னரா ஆனேன். ஓய்வு நேரங்கள்ல சிற்பங்கள் செய்வேன்...’’ என்கிறார் கோமதி.

‘‘அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைத்தால், இவர்களைப் போல எல்லா திருநங்கைகளின் வாழ்க்கையும் மாறிவிடும்...’’ என்கிறார் ஆக்டிவிஸ்ட் பிரியா பாபு.‘‘2014 ஏப்ரல் 15ம் தேதி, ‘திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 மாதங்கள் கடந்தபிறகும் அதை சட்டமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. படித்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்த தலைமுறைக்கு படிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. குடும்பமும், அரசும், சமூகமும் சமமாக மதித்தால் இவர்களைப் போலவே பிற திருநங்கைகளின் துயரமான வாழ்க்கையும் மாறும்...’’ என்கிறார் பிரியா பாபு.

-வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர், ஏ.டி.தமிழ்வாணன்