மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

வீரியமான விதைகள்தான்
நல்ல மரங்களாகின்றன.
மகான்கள் விதையிலேயே
மரங்களைப் பார்த்துவிடுகிறார்கள்
வளர வேண்டிய
மரத்திற்காக விதையை
கவனமாய் தேர்ந்தெடுத்து
விதைத்தும் அருள்கிறார்கள்
பாம்பன் சுவாமிகள் அப்படித்தான் விதைக்கத் தொடங்கினார்.

சென்னை திரும்பிய பாம்பன் சுவாமிகள் பெரும்பாலான நேரங்களைத் தனிமையில் கழிக்கவே விரும்பினார். இதுவரை செய்து முடித்த பணிகளை மனத்திரை யில் ஓட்டிப் பார்த்தார். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று பட்டியலிட்டார். ‘மனிதர்களின் வாழ்க்கை விசித்திரமாக இருக்கிறது.

பெரும்பாலானோர் எப்பொழுதும் கண்மூடித்தனமாக ஓடுகிறார்கள். அல்லது நத்தை போன்று மெல்ல நகர்கிறார்கள். இரண்டுமே ஆபத்துதான். இதை நெறிப்படுத்த வேண்டும். அதற்கு ஆன்மிகம் சிறந்த வழி. தன்னை அறிதலுக்கு உள்முகப் பயணம்தான் உபாயம்’ என போதித்தார். முடிந்தபோதெல்லாம் தீவிர கடவுள் பக்தி குறித்துப் பேசவும்  தயங்கவில்லை.

‘ஒவ்வொரு குடும்பமும் கடவுள் வழிபாட்டுக்கென நேரம் ஒதுக்க வேண்டும். முருக வழிபாடு என்பது வெகு தீவிரமாக செயல்படுத்த வேண்டியது. செயல்திறன் அதிகம் இருக்க வேண்டுமாயின் முருகனின் பாதத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் முருகன் ஒட்டுமொத்த சக்தியின் வடிவம். பிரபஞ்ச உயிர்ப்பின் திரண்ட சக்தி அவன். திட்டமிட்டு துடிப்புடன் காரியமாற்ற விருப்பம் இருக்கும் யாராக இருந்தாலும் அதற்கு முருக வழிபாடு வழிகாட்டும்’ என்று உபதேசித்தார். வேலும் மயிலும் வேகத்தின் - விவேகத்தின் அடையாளம் என்றார்.

கடற்கரையில் ஏகாந்தமாக அமர்ந்திருக்கும் மாலைப் பொழுதுகளில் திரு.வி.க., ஜோதிடர் சின்னசாமி, புதுப்பாக்கம் முதலியார் ஆகியோர் சுவாமிகளிடம் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். அவர்களிடம் பேசும்போது, ‘மனிதன் கொல்லாமையை சிரத்தையுடன் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

அதுவும் தன் பசிக்காக இன்னொரு உயிரை வதைத்துப் புசிப்பது மகாகொடுமை என்று வலியுறுத்தினார். மாமிச உணவு உண்பதால் உடலுக்கு வரும் கேடுகளையும் குறிப்பிடத் தவறவில்லை. சக மனிதர்களிடத்தில் காட்டும் அன்புதான் வாழ்வை மலர்த்தும் என உபதேசித்தார். ‘ஜீவயாதனையைக் குறித்த வியாசம்’ என்ற நூலில் இது குறித்து பாம்பன் சுவாமிகள் விரிவாக எழுதியுள்ளார்.

சென்னை-ராயப்பேட்டையில் உள்ள பாலசுப்ரமணிய பக்த ஜன சபை, சைவ அடியார்களின் சரணாலயமாக விளங்கியது. சைவ சமயப் பணிகளையும் திருமுறை சேவையையும் செய்து வரும் அந்தச் சபை நிலையத்துக்கு, 1915ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள் பாம்பன் சுவாமிகள் கால்கோல் நாட்டி அருளினார்.

புதுப்பாக்கத்தில் தங்கி இருந்தபோதெல்லாம் மாலை நேரத்தில் திருவல்லிக்கேணி கடற்கரைக்கு வந்து மணல்வெளியில் அமர்ந்து தனிமைத் தவத்தில் மூழ்குவதை வழக்கமாக்கிக் கொண்டார் பாம்பன் சுவாமிகள். அப்போதெல்லாம் வெறும் பாலும் பழமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஜபம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். ‘முருகனோடு பேசுவது... தமிழ் குறித்து சிந்திப்பது...’ என நகரும் பொழுதுகளில் அலைகளின் ஊடே மணல் பரப்பில் நண்டுகள் நகர்ந்து விளையாடுவதும், கடலின் இனிமையான அலையோசையும் அவரை உன்னதமான மன உணர்வுக்குள் நகர்த்தும். பாம்பன் சுவாமிகள் சின்ன வயதிலிருந்தே கடற்கரையை ஒட்டிய பகுதியிலேயே வசித்தவர் என்பதால், இது அவருக்கு பிடித்தமானதாக இருந்தது. சில நாட்கள் இரவில் கடல் மணல் பரப்பிலேயே அயர்ந்து விடுவார்.

சில மாலைப் பொழுதுகளில், கடற்கரையில் உலவும் சுவாமிகளை தரிசிக்க சுவாமிகளின் சீடர்களான பார்த்தசாரதி செட்டியார், சிவசங்கரத் தம்பிரான் முதலானோரும் வந்துவிட அது நல்ல சத்சங்கமாய் மாறிவிடும். பக்தியும் தமிழும் பரிமாறப்படும். இந்நிலையில் ஒரு சித்திரை மாத பௌர்ணமி அன்று சிற்றுண்டிகளைச் செய்து வந்து முருகனுக்குப் படைத்துவிட்டு நிலவொளியில் சீடர்களோடு உண்டு மகிழும் வழக்கத்தை பாம்பன் சுவாமிகள் ஆரம்பித்து வைத்தார்.

இப்படி பௌர்ணமி நிலவொளியில் சிற்றுண்டி வழங்கும் திருப்பணியை முதன்முதலாக சம்பந்த முதலியாரும் தொடர்ந்து குழந்தைவேல் முதலியாரும் ஏற்றுக்கொண்டார்கள். இந்தச் சித்திரை நிலவில் சிற்றுண்டி படைத்து உண்டு மகிழும் வழக்கம் இன்றும் பிரப்பன்வலசையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாம்பன் சுவாமிகள் திருவல்லிக்கேணியில் தங்கி இருந்தபோது உடலில் வெப்பம் அதிகரித்து வெகுவாக பாதிக்கப்பட்டார். வெப்ப நோயிலிருந்து காக்கும் குளிர்தருவாக குமரக்கடவுளையே நம்பினார். அதன் பொருட்டு ‘குமாரஸ்தவம்’ என்னும் மந்திர மயமான ஸ்தோத்திரத்தைப் படைத்தார்.

1918ம் ஆண்டு ஆடி மாதம் 7ம் தேதி இது முருகனின் அருள் பிரசாதமாகக் கிடைத்தது. அழகன் முருகனின் ஆயிரம் நாமங்களின் உட்பொருளையும் இந்த குமாரஸ்தவத்தில் அடங்கியுள்ள 44 நாமங்கள் செறிவுடன் உள்கொண்டிருக்கும் வண்ணம் இது படைக்கப்பட்டதாகும். சுவாமிகளின் எந்த ஒரு நூலைப் படிக்கும் முன்னாலும், இதைப் படித்து விட்டு, பின்னரே மற்றதைத் தொடங்க வேண்டும் என்பது மரபானது.

தனது குருவாக மனதில் வரித்துக்கொண்ட காதல் பெருமான் அருணகிரிநாதருக்கு தாம் செய்ய வேண்டிய மிகப்பெரியதொரு பணி இருக்கிறது. அதை செவ்வனே செய்ய வேண்டும் என தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். திருவேட்டீஸ்வரம் ஈசன் அதற்கு அருள்புரிவான் என முடிவு செய்தவர், அருணகிரிநாதரின் திருமேனியை விக்ரகமாக வடிக்க ஏற்பாடும் செய்தார். தனது அன்பர்கள் அனைவரையும் அழைத்தவர், 24.6.1918 அன்று ஆனி மாதம் 11ம் தேதி அருணகிரிநாதருக்கு குருபூஜை நடத்தினார்.

 இதை ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் விதித்தார். சென்னை புதுப்பாக்கத்தில் இயங்கி வந்த சிவசுப்பிரமணிய பக்த ஜனசபை, இதை சிரமேற்கொண்டு செயல்படுத்தியது. ஆண்டுதோறும் ஆனி மாதம் வரும் பௌர்ணமியே அருணகிரிநாதரின் குருபூஜை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பாம்பன் சுவாமிகள். இன்றும் முருக பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் அருணகிரிநாதர் குருபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்து வந்த பாம்பன் சுவாமிகள் மனதில், ஒரு மங்களகரமான வார்த்தை உதயமானது. அது மஹாதேஜோ மண்டலம்.அது என்ன மஹா தேஜோ மண்டலம்?உலகெங்கும் உள்ள முருகப்பெருமான் அடியார்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் புனிதர் பேரவைக்குத்தான் பாம்பன் சுவாமிகள் இப்படியொரு பெயரைச் சூட்டினார்.

ஏழு பாதாள உலகங்களைப் பாதமாகவும் ஏழு தீவுகள் அடங்கிய பூமியைக் கணுக்கால்களாகவும் ஏழு பெரும் கடல்களை இடுப்பு வஸ்திரமாகவும் திசைகளைப் புயங்களாகவும், ஆகாயத்தை நாபியாகவும் சொர்க்கலோகத்தைச் சிரசாகவும் சூரியன் - சந்திரன் - அக்னி மூன்றையும் கண்களாகவும் மேகங்களைக் கேசமாகவும் விண்மீன்களை கேசத்தை அலங்கரிக்கும் பூக்களாகவும் பரம சிவனையே ஆத்மாவாகவும் பராசக்தியை புத்தியாகவும் விஷ்ணுவை இடது பக்கமாகவும் பிரம்மனை வலது பக்கமாகவும்

 கலைமகளை வேத வாக்காகவும் மகாலட்சுமியை செல்வமாகவும் வாயுவை பிராணன் முதலான பத்து வாயுக்களாகவும் காலாக்னி ருத்ரனை கோபமாகவும் அக்கினி தேவனை ஜாடராக்னியாகவும் அனந்தன் முதலான நாகங்களை பாதங்களிலும் புயங்களிலும் அணியும் ஆபரணங்களாகவும் எல்லா மூலிகைகளையும் ரோமங்களாகவும் அநேக கோடி அண்டங்களையும் அந்த ரோமங்களில் உள்ள பேன்களாகவும் ஈருகளாகவும் கொண்டு கோடி சூரியர்களுக்கு ஒப்பானதும் கோடி சந்திரர்களுக்கு சமமான குளிர்ச்சி வாய்ந்ததும் கோடிப் பிரளய காலாக்னி ருத்ரர்களின் பிரகாசம் வாய்ந்ததுமான அதி அற்புதமான அழகு வடிவாக முருகன் பேரழகு காட்டினான்.

இந்திரன் முதலான தேவர்கள் இந்த எழில் வடிவை போற்றித் தொழுது நின்றார்கள் என்கிறது ஸ்ரீ ஸ்காந்த புராணத்தின் ஸம்பவ காண்டத்தின் 31ம் அத்தியாயம். அதில் 20தாவது ஸ்லோகத்தில் ‘தத் தேஜோ மண்டலஸ்யைதே ஸஹஸ்ராம்சம் அலோகயன்’ என்கிற வரிகளில் வரும் தேஜோ மண்டலம் என்கிற வார்த்தையை எடுத்துக்கொண்ட பாம்பன் சுவாமிகள், ‘‘முருகப்பெருமானை முழுமுதல் கடவுளாக ஏற்று வழிபடும் யாராக இருந்தாலும் எந்த தேசத்தவராக இருந்தாலும் எந்தக் குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மஹா தேஜோ மண்டலத்தார் ஆவார்’’ என்று அறிவித்தார்.
‘செக்கர் வேள் செம்மாப்பு’ என்னும் நூலில்,

‘‘அவனருள் ஒன்றே வேட்டு,
அரந்தைவந் துறினும் நிற்போர்
எவணுறு பதியில் தோன்றி
எங்கிருந் திடினும் சாதி
எவனெனெ வினவுவார் முன்
யாதுரைத் திடினும் அன்னோர்
கவனமின் மாதே சோமண்
டலத்தாராய் களிப்பார் மன்னோ’’ என்று உறுதிப்படுத்துகிறார்.

தனக்கு ஆசிரமமோ மன்றமோ, நிறுவனமோ அமைத்துக்கொள்ள விரும்பாத பாம்பன் சுவாமிகள் உலகெங்கும் உள்ள முருக பக்தர்களுக்காக உருவாக்கிக் கொடுத்த ஆன்மிக பாலமே, ‘மஹா தேஜோ மண்டல சபை’. 1921 துர்மதி ஆண்டில் ஸ்ரீமத் குமார சுவாமியம் எனும் ஸ்கந்த காவியத்தை எழுதத் தொடங்கிய தருணத்தில் ஒரு லீலைக்குத் தயாரானான் முருகன்.
1923 டிசம்பர் 27ந்தேதி வியாழக்கிழமை நண்பகல்.

பாம்பன் சுவாமிகள் வைத்தியநாத முதலி தெருவில் இருந்து தம்பு செட்டி தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த குதிரைவண்டி பாம்பன் சுவாமிகள் மீது மோதி அவர் காலில் ஏறி இறங்கியது. ‘‘முருகா’’ என அலறிச் சரிந்தார் பாம்பன் சுவாமிகள். பக்தனின் வலி பொறுக்க முடியாத முருகன் கண்களை இறுக மூடிக் கொண்டான்!

தாய் போல காக்கிறார்!

‘‘அது 1986. மின்சார வாரியத்தில் உதவி நிர்வாக அலுவலராக பணி செய்து கொண்டிருந்தேன். என் அலுவலக நண்பர் பாம்பன் சுவாமிகள் மடாலயத்திற்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்று பார்த்த எனக்கு ஆச்சரியம். சிலையாக இல்லாமல் ஒரு முனிவராகவே சுவாமிகள் எனக்கு காட்சி தந்தார். கண்களைக் கசக்கிக் கொண்டேன். கனவா? நனவா எனத் தெரியாமல் வியர்த்துப் போனேன்.

பின்னால்தான் அது அவரது கருணைக் காட்சி என உணர்ந்து கொண்டேன். நீண்ட காலமாக குழந்தை இல்லாத என்னை மனைவியுடன் வந்து வாரந்தோறும் எலுமிச்சை பழ விளக்குப் போடச் சொல்லி உத்தரவிட்டார் பாம்பன் சுவாமிகள். அவர் கருணையால் 1993ல் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. பல்வேறு ஆபத்துகளில் இருந்து என்னை காத்தருளும் அவர் எனக்குத் தாய் போன்றவர்’’ என நெகிழ்கிறார், சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கருணாநிதி.

நோய் நீக்கும் மந்திரம்

தவனமா ரோகம் வாதஞ் சயித்திய மரோச கம்மெய்
சுவறவே செய்யு மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோ யண்டவா தங்கள் சூலை
எவையுமென் னிடத்தெய் தாம லெம்பிரான் றிணிவேல் காக்க
-பாம்பன் சுவாமிகள் அருளிய இந்தப் பாடலை தினமும்
12 முறை பாராயணம் செய்ய வாதம், சீதளம், உணவில் வெறுப்பு, மூலச் சூடு, இளைப்பு, விக்கல், வயிற்று உபாதைகள், வாத நோய்கள், சூலை நோய் முதலானவை நீங்கும்; அணுகாது.

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்