சகுனி : சினிமா விமர்சனம்





தன் சொந்தப் பிரச்னைக்காக சகுனி எப்படி காய் நகர்த்தி மகாபாரதப் போருக்குக் காரணமானாரோ, அப்படி இதிலும் ஹீரோ கார்த்தி தன் குடும்பப் பிரச்னைக்காக தமிழக அரசியலைக் குழப்பி முதல்வர்களை மாற்றி வைக்கிறார்.

வந்தவர்களுக்கு வடித்துப் போட்டே எல்லா சொத்தையும் இழக்கும் கார்த்தி குடும்பத்துக்குக் கடைசியாக இருக்கும் ஒரே வீடும் ரயில்வே பாலம் கட்டுவதற்காக இடிக்கப்படவிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தும் கோரிக்கையுடன் சென்னை வரும் கார்த்தி, அடுத்தடுத்து ரயில்வே அமைச்சர், பாலம் கட்ட டெண்டர் எடுத்த முதல்வர் என்று யாரைப் பார்த்தும் பிரச்னை தீராமல் சகுனியாவது கதை.
சிரிப்பில் வெள்ளந்தித்தனமும் பார்வையில் லந்தும் இயல்பாகவே கொண்ட கார்த்தி, கேரக்டரில் அழகாகப் பொருந்தி விடுகிறார். எதிராளிகள் சொல்லும் வார்த்தைகளிலிருந்தே தனக்கு ஒரு செய்தியைப் பிடித்து, அதை வைத்தே அவர்களைக் கவிழ்க்கும் நோக்கில் அவர் பார்க்கும் கழுகுப் பார்வையையும் ரசிக்கலாம். ஆனால் அது மட்டுமே படம் முழுமைக்கும் போதும் என்று நினைத்தது தவறாகப் போயிருக்கிறது. நடிக்கத் தெரிந்த கார்த்திக்கு இந்தப்பட கேரக்டர் ஒரு எச்சரிக்கை மணி.

நாயகி ப்ரணீதாவை போர்ட்டபிள் ஏர் கூலரைப் போல் அங்கங்கே தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாடல்களைத் தாண்டி நாலே நாலு காட்சிகள் வந்துவிட்டுப் போகும் ப்ரணீதா, படத்தில் கார்த்தியின் அத்தையான ரோஜாவின் மகளாம். (சாயல் இடிக்குதே..!) படத்தின் முன்பகுதி விறு விறுப்புக்குக் காரணம் சந்தானம். ஆட்டோ டிரைவரான அவர் தன்னை ரஜினியாக பாவித்துக் கொள்ள, ‘கமலக்கண்ணன்’ கார்த்தி கமலாக, இருவரின் அமளிகள் கலகலப்பானவை. ‘பிஸி சிட்டியில் பசி சிட்டிசனாக’ கார்த்தி அலைவது தெரியாமல் அவரைத் தன் ஆட்டோவில் ஏற்றி சுற்றிக் கொண்டே அவரது ஃபிளாஷ்பேக்கைக் கேட்கும் சந்தானம், அங்கங்கே ‘ஜன்னி வந்தவனுக்கு ஜமுக்காளம் கிடைச்ச மாதிரி நீ அத்தை வீட்லயே செட்டிலாயிட்டே..?’ என்றெல்லாம் அடிக்கும் பஞ்ச்சுகளை ரசிக்கலாம்.

முன்பாதியில் கதை என்று ஒன்றும் சொல்லவில்லை என்பதை அவர்களே புரிந்து, ‘இன்டர்வெல் கார்டி’ல் ‘இனிதான் ஆட்டம் ஆரம்பம்’ என்கிறார்கள். ஆனால் அதற்குப்பிறகுதான் படமே ஆட்டம் காண்கிறது. அரசியலை இத்தனை கேலிக்கூத்தாக்கி சமீபத்தில் படம் வந்ததில்லை. நகராட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எல்லாமே சிறுபிள்ளைத்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பல படங்களில் பார்த்த கார்த்தியின் மொக்கை ஐடியாக்களை வைத்து, அவர் சம்பந்தப்பட்டவர்கள் ஜெயித்துக்கொண்டே இருக்கும் காட்சிகளெல்லாம் சலிப்பை ஏற்படுத்துகின்றன. 


சொந்த வீட்டுப்பெண்ணான ரோஜாவே பரிகசிக்கும் அளவில் ஏமாளித்தனமாக சொத்துகளை இழந்துவிட்டு, அதை ஈடுகட்டும் வழியை உள்ளூரிலேயே யோசிக்காத ஒருவர், தமிழக அரசியலையே தன்னிஷ்டத்துக்கு வளைப்பதெல்லாம் கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவனின் பில்டப்புகள்தான். கார்த்தியின் போக்குக்கு எதிர்விளைவே இல்லாத பின்பாதியில், திடீர் மேயராகும் ராதிகாவின் பாத்திரம் மட்டும் விதிவிலக்கு. தன் அசத்தும் நடிப்புத் திறமையால் கைதட்டல் வாங்கிக்கொள்கிறார் அவர். பீடி சாமியார் நாசரும், தமிழகத்தின் ‘பேன்ட்’ போட்ட முதல் சி.எம். பிரகாஷ்ராஜும் தங்கள் நடிப்பில் ஸ்கோர் செய்துவிடுகிறார்கள். கோட்டா, மனோபாலா, கிரண், சந்திரமோகன் என்று கூட்டம் இருந்தும் ரசிக்கமுடியவில்லை. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு ஓகே. எல்லாமே குத்தாகிப்போன ஜி.வியின் இசையில் ‘மனசெல்லாம் மழையே’ மதிப்பெண் பெறுகிறது.
- குங்குமம்
விமர்சனக்குழு