பகலில் புரூஸ் லீ இரவில் முகமுடி





‘கோ’வுக்குப் பின்னான ஜீவாவின் கிராஃப் ஏறிக்கொண்டே போகிறது. அந்த ஏறுமுகத்தில் அவரது அடுத்த அடியாக அமையவிருக்கும் ‘முகமூடி’, தமிழ் சினிமாவிலேயே முதல் முயற்சி எனலாம். யு டி.வி. தயாரிக்க, மிஷ்கின் இயக்கும் படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் வரிசையில் தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவாகிறார் ஜீவா.

‘‘மேற்படி சூப்பர் ஹீரோக்கள் எல்லாருமே அமெரிக்க சூழ்நிலைக்கும், அவங்க லைஃப்ஸ்டைலுக்கும் ஏற்றமாதிரி வடிவமைக்கப்பட்டவங்க. ஆனா இந்த ‘முகமூடி’ பாத்திரம் இந்தியத் தன்மைகளுக்கேத்த மாதிரி டிசைன் பண்ணப்பட்டிருக்கு. அதோட இந்தியாவில தயாரான கிரிஷ் உள்பட மேற்படி சூப்பர் ஹீரோக்களோட சக்திகள் எல்லாமே, சூப்பர் நேச்சுரல் பவர் அல்லது யதேச்சையா நடந்த அறிவியல் விந்தைன்னு அமைஞ்சதா இருக்கும். ஆனா இந்த முகமூடி நவீன கண்டுபிடிப்புகளின் உதவியால லாஜிக்கோட சூப்பர்மேன் ஆகிறான். அந்த வகையில் இது இந்தியாவிலேயே இந்த வகையான முதல் சூப்பர் ஹீரோன்னு சொல்லலாம்...’’ என்று சிரித்தார் ஜீவா.


‘‘முகமூடி உடைகளை அணிந்து நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்டீங்கன்னு மிஷ்கின் சொன்னார்...’’ என்று முகமூடிக்காக வெளியான அவரது ஃபர்ஸ்ட் லுக் பற்றிக் கேட்டால், ‘‘சூப்பர் ஹீரோக்களா விசேஷ உடையணிஞ்சு நடிச்ச ஹாலிவுட் ஹீரோக்கள் எல்லாருமே அதனால பட்ட கஷ்டங்களை பக்கம் பக்கமா எழுதியிருக்காங்க. ஆனா அது ஒரு தவிர்க்க முடியாத அடையாளம்’’ என்றவர், ‘முகமூடி’ பற்றி முதல்முறையாக நம்மிடம் ஸ்பெஷலாகப் பேசினார்.

‘‘எனக்கான உடை சிலிக்கான் மெட்டீரியல்ல உருவானது. அதோட எடை மட்டுமே 11 கிலோ. அந்த உடை மற்றும் மாஸ்க்கை பல ஆர்ட் டைரக்டர்களை வச்சு டிசைன் பண்ணிய மிஷ்கின், அதை உருவாக்கற பொறுப்பை உலகின் மிகப்பெரிய சர்க்கஸ் கம்பெனியான ‘சர்க்கியூ டு ஸோ லெய்ல்’ல டிசைனரா இருந்த ‘கேப்ரில்லா’ங்கிற பிரிட்டிஷ் பெண்மணிகிட்ட கொடுத்திருந்தார். ஹாலிவுட்டுக்கு நிகரா அற்புதமா அமைஞ்சது அந்த லுக். ஆனா உள்ளுக்குள்ள ஒரு டிரஸ் போட்டு, அது மேல இதை அணிஞ்சுக்கிட்டு நடிக்கும்போது உள்ளே வெந்து போகும். பாத்ரூம் பிரச்னைகளுக்காக தண்ணீர் அதிகமா குடிக்காமலும் இருக்கணும்.

ஏற்கனவே இயல்பா குனிய நிமிர முடியாத ஒரு இறுக்கத்தோட இந்த வெப்பமும் சேர்ந்து, டீஹைட்ரேஷன் ஆகிப் போகும். ஏழு சண்டைக் காட்சிகளை மட்டும் 35 நாள் எடுத்தோம். எனக்கு சண்டை கத்துக் குடுத்த டோனி லீங்கற மாஸ்டர், புரூஸ் லீ, ஜாக்கி சான் படங்கள்ல பங்கேற்றவர். சமீபத்துல வந்த ‘யிப் மேன்’ படத்தோட ஆக்ஷன் கோரியோகிராபர். பெர்ஃபெக்ஷனுக்காக எத்தனை டேக்குகள் ஆனாலும் விடாம பெண்டெடுத்தார். அதோட முடிவுலதான் எனக்கு கழுத்து பிடிச்சு ரொம்பவும் கஷ்டப்பட்டேன். இப்ப காட்சிகளைப் பார்க்கிறப்ப பிரமிப்பா இருக்கு. புரூஸ் லீ மாதிரி ஆக ஆசைப்படற ஒரு இளைஞன், பகல்ல புரூஸ் லீயாவும், இரவில முகமூடியாவும் ஆகிற இந்த ஆக்ஷன் வகையறாக்கள் தாண்டி பூஜா ஹெக்டேவோட காதல், குடும்பத்தோட சென்டிமென்ட்னு, குழந்தைகளோட ஒரு குடும்பம் ரிலேட் பண்ணிப் பார்க்கவும், மிஷ்கினோட அடையாளங்களுமா நிறைய விஷயங்கள் இருக்கு...’’
‘‘ஷூட்ல பலரோட சண்டை போட்டதா பேசப்பட்ட மிஷ்கின் உங்க விஷயத்துல எப்படி..?’’

‘‘மிஷ்கினோட கனவு இந்தப்படம். சினிமா பாணியிலயே சொன்னா, அவர் நேசிக்கிறதும், சுவாசிக்கிறதும் சினிமாதான். புத்தகங்களோடவே வாழற அவர், ஷூட்டிங்ல என்னை ஒரு குழந்தை போல பாத்துக்கிட்டார். என்னை இப்படி ஒரு அருமையான கேரக்டர்ல வெளிக்கொண்டு வந்ததுக்கு அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். முகமூடியோட ரெண்டாவது பார்ட், மூணாவது பார்ட்னு திட்டம் வச்சிருக்க அவரோட அத்தனை முயற்சிகள்லயும் நான் பங்கெடுக்கத் தயாரா இருக்கேன்றதுதான் உங்க கேள்விக்கு என்னோட பதில்..!’’
- வேணுஜி