பாலா அறிமுகம் to Pan India நடிகை
இயக்குநர் பாலாவின் அறிமுகமாக ‘வணங்கான்’ படத்தின் வழியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோஷினி பிரகாஷ்.தமிழிலும், கன்னடத்திலும் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனித்து நிற்கிறார். அவருடைய சமீபத்திய வெளியீடான ‘மார்க்’ அதற்கு சான்றாகும்.‘‘2026ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல படங்கள் செய்து பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் எனது புத்தாண்டு சபதம்...’’ என்கிறார் ரோஷினி பிரகாஷ்.  ‘மார்க்’ படம் செய்ய தூண்டுதலாக அமைந்த அம்சம் எது?
என்னுடைய சினிமா பயணத்தில் மறக்க முடியாத படம் ‘மார்க்’. காரணம், பான் இந்தியா படமாக வெளியாகியதோடு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்ல, இந்த படத்தில் இதுவரை செய்யாத வேடம் கிடைத்தது.புதிதாக ஏதாவது முயற்சி செய்யும்போது, அது ஆர்வத்தை மட்டுமல்ல, நடிகையாக அடர்ந்த நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
 அந்த வகையில் ‘மார்க்’ படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க எனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு அது.எனது கதாபாத்திரம் வழியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருந்தது. சுதீப் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
 உங்கள் சினிமா பயணத்தில் உங்கள் மீது நம்பிக்கை எப்போது ஏற்பட்டது?
எல்லா நடிகைகளுக்கும் அதுபோன்ற சூழ்நிலை உடனே ஏற்படாது. எனது பயணத்திலும் சில கடினமான காலங்களை சந்தித்துள்ளேன். ஆனால், ஒரு நடிகையாக எனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய படங்களில் நடிக்க விரும்பினேன்.அந்த நேரத்தில், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் முக்கியம். நமது திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு வரும்வரை பொறுமையாக இருப்பது முக்கியம். அந்த நேரத்தில் சோர்வு வரும்.
 நாம் விரும்பும் வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எண்ணங்கள் தோன்றும். அப்போது தொடர்ந்து உழைத்து நம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் வெற்றிக்கான நேர்மறை எண்ணங்கள் குறைவாகவே இருந்தது. அப்போது பொறுமையாக இருக்கவும், தொடர்ந்து உழைக்கவும் தயாராக இருந்ததால் நான் செய்ய விரும்பிய வேடங்களைப் பண்ண முடியும் என்பதை கற்றுக் கொண்டேன். அப்படி பாலா சார் இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்கும்போது என் நம்பிக்கை அதிகமானது. கன்னட சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்குமிடையே வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்களா?
அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு இடங்களிலும் உணவு, கலாசாரம், வாழ்வியல் எல்லாம் ஒரே அலைவரிசையில் இருப்பதாகத்தான் எண்ணுகிறேன்.
அத்துடன் தமிழ் சினிமாபோல் கன்னட சினிமாவிலும் இப்பொழுது கதை சார்ந்த தனித்துவமான படங்களை எடுக்கிறார்கள்.படைப்பு ரீதியாக இரு மொழிகளிலும் என்னால் ரசித்து நடிக்க முடிகிறது. இந்த இரண்டு மொழிகளிலும் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்.
உங்கள் படத்தேர்வு எப்படி இருக்கும்?
கதைகளை கவனமாக கேட்டு தெரிவு செய்து நடிக்கிறேன். நிச்சயமாக எனது தெரிவுநிலை நன்றாக இருப்பதாகவே நினைக்கிறேன். ஆழமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால், அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நீண்ட காலத்திற்கு ரசிகர்களின் மனதில் இருக்கும்.எனது நோக்கம், வெறும் எண்ணிக்கையில் மையமாக இருப்பதைவிட, ரசிகர்களின் மனதில் தங்கி நிற்கும் அர்த்தமுள்ள படங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான்.
கதாபாத்திரத்துக்காக உங்களை எப்படித் தயார் செய்வீர்கள்?
கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவேன். அப்படி செய்யும்போது அதன் செயல்முறை எப்போதும் மிகவும் எளிமையாக இருக்கும்.கதாபாத்திரத்தின் உணர்வுகள், முரண்பாடுகள் மற்றும் சிக்கல்கள் பற்றி சிந்திக்கும் பிராசஸ் இதில் அடங்கும்.
திரையில் இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, என் உணர்ச்சிகளுடன் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க விரும்புகிறேன்.நிஜ வாழ்க்கையிலும் கூட, நான் என் எண்ணங்களை எளிதாகவே பிரதிபலிப்பேன். எனவே நான் கதாபாத்திரத்தை அணுகும் போது, அதை வெளிப்படுத்துவதில் கடினம் இருப்பதாக நினைத்ததில்லை. சினிமாவைப் போல் வெப் சீரிஸ் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறதா?
ஓடிடி. வந்தபிறகு வெற்றி பற்றிய யோசனை வேறு விதமாக உருவாகிவிட்டது. எனது ஆரம்ப காலத்தில் நான் வெற்றி பெறுவதை பிஸியாக இருப்பதற்கு சமமாகக் கருதினேன். ஆனால், இப்போது நான் அதைப் பற்றி யோசிக்கும்போது, அது பிஸியாக இருப்பதை விட திருப்தி அடைவதில் இருப்பதாக நினைக்கிறேன். சினிமாவில் ஆண்டுக்கு சில படம் செய்யலாம். அது திருப்திப்படுத்தக்கூடும்.
அந்தவகையில் ஓடிடியில் பணிபுரிவது நிச்சயமாக என்னை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனெனில் ஓடிடியில், பெண்களுக்கு வலுவான வேடங்கள் கிடைக்கின்றன. இதுவரை சினிமாவில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயமாக எதைச் சொல்வீர்கள்?
நான் நிச்சயமாக ஓர் இயக்குநரின் நடிகை. அவர்களின் கட்டளையின்படி நடிக்க பிடிக்கும். ஒரு நடிகையாக எனது வளர்ச்சிப் பயணத்தில் இது எப்போதும் மிகவும் உதவியாக இருந்துள்ளது. சினிமா நட்சத்திரமாக இருப்பதால், அழுத்தங்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?
எதிர்பார்ப்புகள் ஒரு வகையில் நல்லது. ஏனெனில், மக்கள் உங்களை நேசிக்கிறார்கள், போற்றுகிறார்கள். அவர்கள் சினிமா நட்சத்திரங்களிடமிருந்து அற்புதமான ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அது படங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்கின்ற எச்சரிக்கையை தருகிறது. அப்படி எல்லாவற்றிலும் சிறந்து விளங்க விரும்புகிறேன்.
எந்த வேடங்களில் நடிக்க ஆர்வத்துடன் இருக்கிறீர்கள்?
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட வேடம் மட்டும் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ரசிகர்கள் பன்முக நடிகையாக என்னைப் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
எஸ்.ராஜா
|