மார்க்கெட்டில் புதுசு!



ஃபேஷன்!

கடந்த ஐந்தாறு வருடங்களாகவே சூழலுக்கு நண்பனாகத் திகழும் துணிகள்தான் அதிகம் விற்பனையாகின்றன. பொதுவாக காட்டன், லினென், தோல் துணிகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஃபேஷன் கழிவுகளையும் குறைக்க மறுசுழற்சி முறை, ரீசேல், ஷேரிங் போன்ற டிரெண்ட் இளம் தலைமுறையிடம் காண முடிகிறது. 

பிரிண்டுகளில் இந்த வருடம் அதிகம் அனிமல் பிரிண்ட்களான புலி, சிறுத்தை, வரிக்குதிரை போன்ற விலங்குகளின் தோல் டிசைன் அதிகம் பயன்படுத்தப்படும் என்கிறார்கள்.
இதற்கான துவக்கம் 2025ம் ஆண்டு இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டது! இதனுடன் கலந்த கொரியன் ஃபேஷன், வெப் தொடர்கள் தாக்கத்தால் ரெட்ரோ ஸ்டைல் 80ஸ், 90ஸ் கால உடைகள், ஸ்டைல் மீண்டும் வருகை தரத் துவங்கியுள்ளன.

நகைகள்

அதிகம் சில்வர் நகைகள், டெரகோட்டா, ஃபேப்ரிக் நகைகள் போன்றவை இந்த வருட சாய்ஸாக இருக்கலாம் என உறுதியாகச் சொல்கிறார்கள். கடந்த ஓரிரு வருடங்களாகவே லைட் வெயிட் நகைகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. காரணம், இந்தியாவைப் பொருத்தவரை அதிக வெப்பமும், அதிக குளிரும் மாறி மாறி கடந்த இரண்டு வருடங்களாகவே தொடர்வதால் கனமான உலோக நகைகள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. 

மேலும் உலக நாடுகளிலும் குளிர் பிரதேசங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் அதீத பனிப் பொழிவை சந்தித்து வரும் நிலையில் உலோகம் அதிக குளிரையும் வெப்பத்தையும் ஈர்க்கும் என்பதால் இந்த மெட்டல் நகைகள் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. 

எல்லாவற்றுக்கும் மேலாக தங்கத்தின் விலையும் ஒரு பவுன் ரூ.1.25 லட்சம் வரை கூட இந்த வருடம் செல்லும் என்கிற நிலையில் நடுத்தர மக்கள் தங்க நகைகள் மீதான ஆர்வத்தைக் குறைத்து வருகின்றனர்.

ஹேண்ட்பேக் & காலணிகள்

இங்கேயும் மறுசுழற்சி முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. பாலியெஸ்டர் அல்லாத தோல், ஃபேப்ரிக் போன்ற மெட்டீரியலில் பேக், காலணிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பண்டிகை கால ஆஃபர்கள் என எப்படியேனும் பிராண்ட் பொருட்களின் பயன்பாடு அவசியம் என்கிற மனநிலையும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. 
ரூ.1000க்கு நாலு சட்டை என்கிற நிலை எல்லாம் இல்லை... ரூ.2000 ஆனாலும் பரவாயில்லை... பிராண்ட்தான் நம் அந்தஸ்தை உயர்த்தும்... நீண்டகாலம் இதுவே உழைக்கும் என்கிற புரிதல் ஜென் இசட் தலைமுறையிடம் காண முடிகிறது.

காஸ்மெட்டிக்ஸ்

ஸ்கினிமலிசம் டிரெண்ட்... என எதுவும் அளவுடன் இருப்பதே அழகு என்ற மனநிலை அதிகரித்திருக்கிறது. அதாவது மேக்கப்பே இல்லாமல் மேக்கப் என்கிற பழக்கம் பரவலாகியுள்ளது. 

ஒரே சன் ஸ்க்ரீன்... அதிலேயே ஃபவுண்டேஷன், டின்ட், க்ளோ, மாய்ஸ்சுரைசர் என அனைத்தும் வேண்டும் என்பதால் காஸ்மெட்டிக் மார்க்கெட் கைப்பை நிறைய காஸ்மெட்டிக் சுமக்கும் பழங்கால ஸ்டைலுக்கு குட்பை சொல்லிவிட்டது. 
சருமத்தை சிவப்பாக்கும் க்ரீம்கள் முற்றிலும் தங்களது விற்பனையை நிறுத்திவிட்டன. ஒரு லிப்ஸ்டிக், காஜல், சன் ஸ்க்ரீன் போதும் என்கிறார்கள் இளசுகள். 
இந்திய ப்ராடக்ட்களான மாமா எர்த், பிளம், வாவ், இண்டூஸ்வேலி போன்ற பிராண்டுகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது. காரணம், நம் காலநிலைக்கு இங்கே கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு இங்கே நிலவும் வெப்பநிலையில் உருவாக்கப்படும் காஸ்மெட்டிக்ஸ்தான் குறைந்த பட்சம் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் என்கிற புரிதல். இது இந்தாண்டு இன்னும் அதிகரிக்கலாம். 

ஆட்டோ மொபைல்

நகரங்களில் மட்டுமல்லாமல், சிற்றூர்களிலும் EV சார்ஜிங் வசதிகள் வாகனங்கள் அதிகரிப்பதால் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மக்கள் வேகமாக மாறும் சூழல் உருவாகலாம். 

எனவே பேட்டரி வாகனங்கள் இந்தாண்டு அதிகம் விற்பனையாலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ம் ஆண்டு பேட்டரி வாகனங்களின் மொத்த விற்பனை 20% அதிகரித்திருக்கிறது. 

இந்த சதவிகிதம் 2026ல் இருமடங்காகலாம் என கணித்துள்ளனர் . ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லக்கூடிய பேட்டரி தொழில்நுட்பம், வேகமான சார்ஜிங் வசதி ஆகியவை 2026 வாகனங்களில் சிறப்பு அம்சங்களாக இருக்கும்.  வாகனம் ஓட்டும் அனுபவமும் முற்றிலும் மாறும். டிரைவருக்கு உதவிசெய்யும் ADAS (Advanced Driver Assistance Systems) தொழில்நுட்பங்கள், ஆட்டோமெட்டிக் பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் பட்ஜெட் கார்களிலும் வரவிருக்கின்றன. 

‘ஸ்மார்ட் கார்’ வசதிகள் சொகுசு கார்களில் மட்டுமல்லாமல் இனி ஆட்டோக்களிலும் வந்துவிடும். ஆட்டோ மொபைலின் அடிப்படை வசதிகளாக இந்த வருடம் வெளியாகும் வாகனங்களில் மாறும்.  AI அடிப்படையிலான டச் ஸ்கிரீன், வாய்ஸ் கட்டுப்பாடு, ஓட்டுநரின் பழக்கத்திற்கு ஏற்ப மாறும் செட்டிங்ஸ் போன்றவை இடம்பெறும்.எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்டைல், அதிக பவர்... உள்ளிட்டவை நீண்ட ரேஞ்சுடன் வரவிருக்கின்றன. 

நகரப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு லைட் வெயிட் வடிவமைப்பு, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, மொபைல் ஆப்புடன் இணைக்கும் வசதிகள் இந்த வருடம் வெளியாகும் இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலும் இடம்பெறும். 

இளம் தலை

முறையைக் கவரும் வகையில் ஸ்போர்ட் லுக் கொண்ட EV பைக்குகள் 2026ல் முக்கிய கவனத்தை பெறும். SUV மற்றும் காம்பாக்ட் SUV கார்களின் ஆதிக்கமும் தொடரும். 
இப்போதும் நீண்ட தூர டாக்ஸி பயணங்கள், சுலபமாகக் கிடைக்கும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட காரணங்களால் டாக்ஸி தொழிலில் பேட்டரி கார்களின் பங்கேற்பு இந்த வருடமும் குறைந்தே காணப்படும்.

இந்தியச் சந்தையை கருத்தில் கொண்டு Affordable Hybrid மாடல்கள் அதிகம் அறிமுகமாகும் வாய்ப்பும் உள்ளது. அதிக ஏர்பேக்குகள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ISOFIX, வாகனத்தின் உடலமைப்பில் மேம்பட்ட ஸ்ட்ரெங்த் மெட்டீரியல்கள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் ஆட்டோமொபைல் உலகம் வேகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், அதனுடன் இணைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இயங்கும்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் 

அனைத்திலும் ஸ்மார்ட் மற்றும் AI தொழில்நுட்ப வசதி நீக்கமற நிறைந்திருக்கும். ஸ்மார்ட் கிச்சன் வசதிகளில் வாய்ஸ் கட்டுப்பாடு, ரிமோட் வசதிகள் இணைந்த வீட்டு உபயோகப் பொருட்கள் அறிமுகமாகவிருக்கின்றன. சூழல் பாதுகாப்பு, பயன்படுத்த எளிமை, டச் ஸ்க்ரீன் வசதிகள் அதிகம் இடம் பெறும். Google Gemini-யின் உதவியுடன் AI திறனுடைய ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் மற்றும் சமைக்கும் சாதனங்கள் உள்ளிட்ட புதிய அறிமுகத்தை சாம்சங் பிராண்ட் இந்த வருடம் திட்டமிட்டுள்ளது.  

LG CLOiD Home Robot , வீட்டுப் பணிகளை செய்வதில் உதவும் AI ரோபோட் சாதனத்தை இந்த வருடம் LG நிறுவனம் வெளியிட இருக்கிறது. MicroLED, Micro RGB TV, OLED உள்ளிட்டவை இந்த வருடம் டிரெண்ட். கேமிங் தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய டிவி மற்றும் ஸ்மார்ட் போன்கள் வருகை அதிகமாக இருக்கும். iPhone 18 சீரீஸ் கவனம் பெறும் மொபைலாக இருக்கும். மேலும் iPhone Air 2 பெரிய பேட்டரி, Dual-camera வசதி இன்னும் அப்டேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆண்ட்ராய்டு போன்கள் அதிக சேமிப்பு, அதிக RAM கொண்ட கேமிங் சிறப்பு மொபைல்களாக வரவிருக்கின்றன. குறிப்பாக கூகுள் 11 பிக்சல், சாம்சங் எஸ் சீரீஸ்கள் satellite connectivity, improved GPU வசதிகள் கொண்டிருக்கும். முழுமையான AI வசதிகள் கொண்ட அதிவேக இணைய சேவை கொண்ட போன்கள்தான் 2026ம் ஆண்டின் எதிர்பார்ப்பாக மாறியிருப்பதால் அதனை அடிப்படையாகக் கொண்ட போன்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஷாலினி நியூட்டன்