குறைந்த விலையில் காற்றை சுத்தப்படுத்தும் சிறுவன்!
உலகிலேயே காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்று, தில்லி. இதன் காற்றின் தரத்தை ‘மிக மோசம்’ என்ற வகைமையில் சேர்த்திருக்கின்றனர். அதாவது, தில்லியில் உள்ள பல பகுதிகளில் காற்று தரக்குறியீட்டு எண் 300க்கும் மேல் இருக்கிறது. காற்று தரக்குறியீட்டு எண் 301லிருந்து 400 வரையிருந்தால், அந்தக் காற்றின் தரத்தை மிகவும் மோசம் என்று வகைப்படுத்தியுள்ளனர். நல்ல காற்றின் தரக்குறியீட்டு எண் 0 முதல் 50க்குள் இருக்கும்.
 தில்லியின் காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தி, சுவாசக் கோளாறு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் தில்லியில் வசிக்கும் பெரும்பாலானோர் வெளியில் வருவதற்கே அஞ்சுகின்றனர். மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் காற்று மாசுபாட்டின் காரணமாக 17 லட்சம் முதல் 21 லட்சம் பேர் மரணமடைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. தில்லியின் சாலைகளில் ஓடுகின்ற மில்லியன் கணக்கான வாகனங்களிலிருந்து வெளியாகும் புகைதான் காற்று மாசுபாட்டுக்கு முதன்மைக் காரணம் என்கின்றனர். தவிர, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயக் குப்பைகளை எரிக்கின்றனர். இதன் மூலமும் தில்லியின் காற்று மாசுபடுவதாகச் சொல்கின்றனர். கட்டுமானப் பணிகளின் போது வெளியாகும் தூசுக்களும் காற்றை மாசுபடுத்துகிறது. இதுபோக தொழிற்சாலைகளில் வெளியாகும் கெமிக்கல் புகை, தில்லியின் காற்றை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது.
தில்லியின் காற்று மாசுபாடு எப்போது சரியாகும் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் மாசடைந்த காற்றைத் தொடர்ந்து சுவாசித்துக்கொண்டே இருந்தால் உடல் ஆரோக்கியம் நலிவடையும். அதனால் தில்லியைக் காலி செய்துவிட்டு வெளியூர்களுக்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இன்னொரு பக்கம் வீட்டுக்குள்ளாவது நல்ல காற்று கிடைக்கட்டும் என்று காற்றைச் சுத்தப்படுத்தும் ‘ஏர் ப்யூரிஃபையர்’ எனும் சாதனத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதன் விலை அதிகம் என்பதால் பொருளாதார வசதி குறைந்தவர்களால் இதை வாங்குவது கடினம்.
இந்நிலையில் மலிவான ‘ஏர் ப்யூரிஃபையரை’க் கண்டுபிடித்து அசத்தியுள்ளார் கிரிஷ் சாவ்லா. எப்படி கோடைகாலம் ஏசி விற்பனையை அதிகரிக்கச் செய்ததோ, அதே மாதிரி தில்லியின் காற்று மாசுபாடு ஏர் ப்யூரிஃபையரின் விற்பனையை எகிறச் செய்திருக்கிறது. அதனால் கிரிஷின் ஏர் ப்யூரிஃபையருக்கு நல்ல மவுசு.
கடந்த 2016ம் வருடத்தின் குளிர்காலம். ஓர் அதிகாலையில் தூக்கத்திலிருந்து எழுந்த கிரிஷுக்கு தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று பல பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு, காற்று மாசுதான் மூச்சுப் பிரச்னைக்கு காரணம் என்று தெரியவந்தது. அதனால் அவர் வீட்டில் முதன்முறையாக ‘ஏர் ப்யூரிஃபையரை’ப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அப்போது கிரிஷின் வயது 14தான். ‘‘எனக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும். காற்று மாசுபாடுதான் அதற்குக் காரணம் என்று தெரிந்தபிறகு, என்னுடைய அறையில் பிரத்யேகமாக ஏர் ப்யூரிஃபையரை வாங்கி வைத்தோம். அப்போது அதன் விலை 30 ஆயிரம்.
ஒரு நாள் ஏர் ப்யூரிஃபையருக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வ மிகுதியால் ஸ்குரூட்ரைவர் கொண்டு அதை திறந்து பார்த்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆம்; அதற்குள் ஒரு ஃபேனும், ஃபில்டரும்தான் இருந்தன. இதற்குப் போய் இவ்வளவு விலையா...’’ என்ற ஆதங்கம்தான் கிரிஷை மலிவான விலையுள்ள ஏர் ப்யூரிஃபையரைக் கண்டுபிடிக்கத் தூண்டியிருக்கிறது.
உடனே ஆராய்ச்சியில் இறங்கினார் கிரிஷ். மலிவான விலையில் ஏர் ப்யூரிஃபையரை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அடுத்த சில வருடங்களில் 320 விதமான முன்மாதிரிகளை உருவாக்கினார். தான் உருவாக்கிய கருவி எப்படி காற்றோட்டத்தை உள்வாங்குகிறது, உள்வாங்கிய மாசான காற்றை அது எப்படி வடிகட்டுகிறது, கருவி இயங்குவதற்கு எந்தளவு மின்சாரம் தேவைப்படுகிறது என்று ஒவ்வொரு முன்மாதிரியையும் சோதனை செய்து பார்த்தார். இதற்காக சில வருடங்கள் உழைத்திருக்கிறார் கிரிஷ்.
நூற்றுக்கும் மேலான பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு கிரிஷ் உருவாக்கிய ஏர் ப்யூரிஃபையர், வீட்டுக்குள் காற்றின் தரக்குறியீட்டு எண்ணை 4 என்ற அளவுக்குக் குறைத்தது. இது தூய்மையான காற்றின் அடையாளம். மட்டுமல்ல; ஏர் ப்யூர்ிஃபையரை உருவாக்குவதற்கான மூலப்பொருட்கள் மற்றும் குறைந்த லாபத்தை மட்டுமே கண்க்கிட்டு விலையை 4000 என்று நிர்ணயித்தார்.
கல்லூரி மாணவர்களின் விடுதி, சின்னச் சின்ன அலுவலகங்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் என அனைவரும் கிரிஷின் வாடிக்கையாளர்களானார்கள்.
விலை மலிவு மட்டுமல்லாமல், சூழலியலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு இந்த ஏர் ப்யூரிஃபையரை வடிவமைத்திருக்கிறார் கிரிஷ்.
ஆம்; குப்பைகளை மறு சுழற்சி செய்து உருவாக்கிய பொருட்கள்தான் முக்கியமான மூலப்பொருட்கள், ஒரு சதவீதம் மட்டுமே பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். மற்ற விலையுயர்ந்த ஏர் ப்யூரிஃபையர்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம்.
பொதுவாக ஏர் ப்யூரிஃபையர்கள் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் காற்றை மட்டும்தான் சுத்தம் செய்யும். ஆனால், வெளியில் உள்ள காற்றின் மாசுபாடு அப்படியே இருக்கும்.
அதனால், தான் உண்டாக்கிய ஒவ்வொரு ஏர் ப்யூரிஃபையரும் விற்பனையாகும்போது, ஒரு மரக்கன்றை நட்டு வைக்கிறார் கிரிஷ்.
‘‘இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்குத் தகுதியானவர்கள். ஆனால், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சுத்தமான காற்று கிடைக்கிறது. அதனால் எல்லோருக்குமான ஒரு கருவியை உருவாக்கினேன்...’’ என்கிற கிரிஷின் செயல்பாடு தொடர்கிறது.
த.சக்திவேல்
|