ஏம்மா... Toxic, Rugged பாய்ஸ்தான் வேணுமா?



இதை தமிழ்ச் சினிமா சொல்லலை பாஸ்... உலகம் பூரா இதான் நிலை

தலைபோகிற பிரச்னைதான். குறிப்பாக 90ஸ், 2கே கிட்ஸ் மத்தியில் இதுதான் ஈரேழு உலகத்தின் சிக்கல்.உலகமே வெறுக்கும், வன்முறையான, மிருகமான ஆண்களையே இப்பொழுது பெண்கள் விரும்புகிறார்களாம். இப்படி ரூம் போட்டு ஆராய்ச்சி செய்து சொல்கிறது நியூயார்க் அகாடமி ஆஃப் மெடிசின் வெளியிட்டிருக்கும் ‘அர்பன் ஹெல்த் ஆய்வு’. இந்த ஆய்வில் மூன்றில் ஓர் இளம் பெண்ணாவது டாக்சிக், பேட் பாய்ஸையே விரும்புவதாகவும், அப்படிப்பட்ட ஆண்களுக்கு அடிமையாக மாறுவதையே தங்கள் வாழ்நாள் குறிக்கோளாகக் கருதுவதாகவும் சொல்லி அலர்ட் செய்திருக்கிறது. 

இதனால் சாதாரண ஆண்களும் வேண்டுமென்றே கெட்டவனாக, முரடனாக (Rugged), மிருகத்தனமாக மாறுவதாகவும் எச்சரிக்கிறது.ஹைலைட் என்ன தெரியுமா? மென்மையான ஆண்கள் தரக்குறைவாக கிண்டலுக்கு ஆளாகி ஒதுக்கப்படுவதுதானாம். 17 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் இதில் அதிகம் என்பதுதான் அதிர்ச்சி. ‘‘தனக்கு இந்த உறவு சரிப்பட்டு வராதுனு தெரிஞ்சும் அந்த உறவில் தொடர்ந்து நீடிக்க விரும்புவது ஷாக்கிங் நியூஸ்தான்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் சைக்காலஜிஸ்ட்டான ஜெயந்தி முத்தையா. 

‘‘பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இதில் அடக்கம். என்ன... ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகம். சுமுகமான உறவு, பாதுகாப்பான உறவு, எப்போதும் ஒருவருக்கொருவர் சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்து விட்டுக்கொடுத்து இருக்கும் உறவில் எல்லாம் இப்ப இளைஞர்கள் ஆர்வம் காட்டுறதில்ல. இப்படிப்பட்ட ரிலேஷன் போர் அடிப்பதா கருதறாங்க.

இதன் வெளிப்பாடுதான் டாக்ஸிக் லவ்வர்ஸ். இது இந்தத் தலைமுறை பிரச்னையில்ல. முந்தைய தலைமுறையிலயும் தன்னை கிண்டலடிச்சுக் கலாய்க்கும் ஆண்களை விரும்பும் பெண்கள் அதிகமா இருந்திருக்காங்க. அதுமட்டுமில்ல... ஆண்களை ஏடிஎம் மிஷினா, தனக்கு பாதுகாப்புத் தரும் பாடிகார்டா மட்டுமே பார்த்த பெண்களும் முன்னாடி இருந்திருக்காங்க.

என்ன... இப்ப இந்த சதவிகிதம் அதிகரிச்சிருக்கு. சினிமாவின் தாக்கம் இதுக்கு முதல் காரணம். 1970 - 80கள்ல வெளியான படங்கள்ல காலேஜுல ஹீரோயினை கலாய்ச்சு பாட்டுப் பாடற ஹீரோவை கண்டிப்பா பார்த்திருக்கலாம். இப்படிப்பட்ட ஹீரோவைத்தான் உயிருக்கு உயிரா ஹீரோயின் லவ் பண்ணுவா.

தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜில ஆரம்பிச்சு எல்லா ஹீரோக்களும் இப்படி பாட்டுப் பாடியிருக்காங்க. 90கள்ல ரவு டித்தனம் பண்ற ஆண் ஹீரோவா ஆனான். கமல் நடிச்ச ‘சத்யா’, நாகார்ஜுனா நடிச்ச ‘ஷிவா’ துவங்கி சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ வரை நீண்ட பட்டியலே உண்டு.

‘குணா’, ‘சேது’, ‘அமர்க்களம்’, ‘கே.ஜி. எஃப்’ எல்லாம் தன்னைக் கடத்திய ஆணையே காதலிக்கும் பெண்ணின் கதைதான். இதை உளவியல்ல ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’னு சொல்வோம். 

இதுக்குப் பிறகு கல்லூரியிலிருந்து ஹீரோ ப்ரொமோட்டாகி ஏரியா ரவுடி, தாதா, அடியாள், போக்கிரினு மாறினான். ‘தீனா’, ‘பகவதி’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘நந்தா’ எல்லாம் இதற்கான எக்ஸாம்பிள்ஸ்.

இப்ப அடுத்த லெவல். தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’, இந்தி ‘அனிமல்’ எல்லாம் இதற்கு உதாரணம். இப்ப இன்னும் மேம்பட்ட வடிவமா ‘டாக்ஸிக்’ பெயர்லயே ஒரு பான் இந்தியா படம் தயாராகிட்டு இருக்கு. இதெல்லாமே இந்திய, தமிழ்ப் படங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் பற்றியது. ஆனா, இன்னொரு உலகமும் இருக்கு. அது புக்ஸ்.

ஆமா... டார்க் ரொமான்ஸ் நாவல்கள், டார்க் ரொமான்ஸ் வெப் சீரிஸ், வேம்பையரை காதலிக்கும் காதலி, டிஸ்னி இளவரசிகளுக்கு பீஸ்ட், திருடன்... என சேல்ஸ் ப்ளஸ் ரீடிங்ல சக்கைப் போடுபோடும் பல நாவல்கள் இதே ‘ரக்ட்’ பாய்ஸைக் கொண்டாடும் காவியங்களாதான் இருக்கு...’’ என்றும் ஜெயந்தி முத்தையா, இதை உளவியல் ரீதியாக விளக்கினார். 

‘‘குடித்துவிட்டு வரும் அப்பா, சண்டை சச்சரவுகள் நிறைந்த குடும்பம், சிறுவயது பாலியல்  துன்புறுத்தல்னு ஆரோக்கியமான குழந்தைப் பருவம் இல்லாதவங்கதான் டீன் ஏஜ்ல, 20 வயதுக்கு மேலயும் டாக்ஸிக் லவ்ல மாட்டிக்கறாங்க. ஏன்னா அவங்க ஆழ்மனசு அவங்களையும் அறியாம அந்த டாக்ஸிக் சூழலை விரும்ப ஆரம்பிச்சுடுது.

அதாவது சாதாரண அல்லது அமைதியான சூழல் அவங்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாது. இதனாலயே திரும்பவும் அதே டெம்ப்ளேட், அதே சண்டை, பிரச்னைகள் நிறைந்த உறவைத் தேடிப் போறாங்க. ஆக்சுவலா அவங்களுக்கே இது தெரியாது. அறியாமல் செய்வது...’’ என்றவர், எது டாக்ஸிக் என்பதையும் விளக்கினார்.

‘‘ஒண்ணு தன் மேல ஆர்வமே இருக்கக் கூடாது, இல்லைனா அதீத ஆர்வத்தோடு தன் கட்டுப்பாட்டுலயே தன்னை வைச்சிருக்கணும்... இப்படி பெண்கள் நினைப்பதும் அதற்கேற்ப ஆண் இருப்பதும் டாக்ஸிக்.

நான் சொல்ற எதையும் புரிஞ்சுக்கறதில்ல... எதுக்கெடுத்தாலும் வெறித்தனமான கோபம், சிலநேரம் அது வன்முறையாக மாறும். குறிப்பா மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. தனக்கென ஒரு உலகம்... அதுல தனக்கு அடிமையா ஒரு நபர்...இப்படிப்பட்ட ரிலேஷன்தான் டாக்ஸிக். 

இதுல எதிர்காலம் பத்தியெல்லாம்... மூச். மேரேஜ்? அந்தப் பேச்சே இருக்காது. அடுத்த நிமிஷம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து என்ன செய்யப் போறோம்? அவ்வளவுதான் இவங்க கான்வர்சேஷனே இருக்கும். இதையும் யார் டாக்ஸிக் நபரோ அவர்தான் தீர்மானிப்பார். அவருக்கு ரொமான்ஸ் அல்லது காம உணர்வு வரும்போது மட்டுமே கூட இருக்கும் நபர் பத்தின சிந்தனை வரும். 

தான், தன் உலகம், தன்னை மட்டுமே விரும்பும் ஒரு நிலைதான் ஆதிக்கம். இவைதான் டாக்ஸிக். இப்படிப்பட்ட நபர்களை விரும்பும் நிலையே டாக்ஸிக் ரிலேஷன்ஷிப். 
இப்போதைய இளைஞர்களுக்கு எதிர்காலம் பத்தின சிந்தனை, அதுகுறித்த திட்டமெல்லாம் கிடையாது. இதெல்லாம் என்னைப் பெத்தவங்க வேலை. எனக்கு இன்றைய பொழுது சந்தோஷமா போகணும். என்னுடைய அட்ரினலின் மற்றும் டோபமைன் சிறப்பா வேலை செய்யணும். அவ்வளவுதான். 

நல்ல வேலை, நல்ல படிப்பு, பெண்களை / ஆண்களை மதிக்கும் குணம் கொண்ட மனிதர்... இதெல்லாம் மேரேஜுக்கு ஓகே. ஆனா, ரிலேஷன்ஷிப் அல்லது காதலுக்கு சரிப்பட்டு வராது. அட்வென்ச்சர்தான் ரிலேஷன்ஷிப்ல வேணும். எதையும் காதல்னு சொல்லி அதுக்கு அங்கீகாரம் தர நாங்க தயாரா இல்ல. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கு... இப்படித்தான் ஜென் இசட் நினைக்கறாங்க.

முன்னாடி நட்பில் டிராவல் செல்ல ஒரு குரூப், மதிய உணவுக்கு செல்ல ஒரு குரூப், சினிமாவுக்குப் போக ஒரு குரூப், பார்ட்டிக்கு ஒரு நட்பு வட்டம்னு பிரிச்சு வைச்சிருந்தோம்.
இதே நிலைதான் ரிலேஷன் ஷிப் சூழல்ல இப்ப அடாப்ட் ஆகியிருக்கு. எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் தனித்தனி நபர், தனித்தனி பெயர். 

இதுல ஒரே ஆறுதல் என்னனா... ‘திருமண உறவுக்கு அவன் / அவள் சரிப்பட மாட்டா’ என ஜென் இசட் தெளிவா புரிஞ்சு வைச்சிருப்பதுதான். முன்னாடி ஜெனரேஷன் இது தெரியாமதான் டாக்ஸிக் மேரேஜ்ல மாட்டி அவஸ்தைப்பட்டாங்க.

எவ்வளவு எவ்வளவு ஆலோசனைகள் கொடுத்தாலும், கவுன்சிலிங் கொடுத்தாலும், பலரையும் வெளிய கொண்டுவர முடியாத சூழல் இப்பவும் இருக்கு. அடிச்சாலும் புடிச்சாலும் அவன் மட்டும்தான்... என்கிற பழங்கால மனநிலை, எதிர்காலம் இல்லாத உறவிலும் இப்ப கடைப்பிடிக்கப்படுவதுதான் இதுக்குக் காரணம்.

போதாக்குறைக்கு அவனை/ அவளை நான் மாத்திக்காட்டறேன்... திருத்தறேன்னு செயல்படும் குரூப்பும் இருக்கு. இப்படிப்பட்டவங்க திருத்தப் போய் தன்னையே தொலைச்சுடறாங்க.
எந்தஒரு உறவும் நம்மை நேர்மறை எண்ணத்துடன் மாத்தணும். நம்மை நமக்கே யாரென அடையாளம் காட்டணும். அதுதான் ஆரோக்கியமான உறவு...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் ஜெயந்தி முத்தையா.

ஷாலினி நியூட்டன்