இந்தியாவில் First... தமிழ்நாடுதான் Best!



சொல்கிறது ஒன்றிய பாஜக அரசு!

இது கப்சா செய்தி அல்ல. வாட்ஸ்அப் புரளியுமல்ல. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறப் போவதால் அதற்காக இட்டுக்கட்டி வெளியிடும் நியூஸும் அல்ல.

அக்மார்க் உண்மை நிலவரம். இதை ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைப்பதும் ஊர் பெயர் தெரியாத ஆராய்ச்சி நிறுவனமல்ல. 
ஒன்றிய பாஜக அரசுதான்.இந்தியாவின் முக்கியமான பொருளாதார மாநிலங்களில் ஒன்று, தமிழ்நாடு. தொழில்துறை, சேவைத் துறை, மனித வளம், நகர்மயமாக்கல், கல்வி உள்கட்டமைப்பு ஆகிய அனைத்திலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 

இதெல்லாம் முன்பே பிறந்த குழந்தைக்கும் தெரிந்த செய்திதான். லேட்டஸ்ட் என்ன தெரியுமா?

2024 - 25 நிதியாண்டில் வெளியான சமீபத்திய புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு பொருளாதாரம் இந்தியாவின் பெரிய மாநிலங்களில், மிகமிக வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதுதான்! காதில் பூ சுற்றவில்லை. 

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, ஒருவருக்கு வருமானம், துறைகள் வாரியான பங்களிப்பு, வேலைவாய்ப்பு, முதலீடுகள், சவால்கள் என அனைத்திலும் தமிழகம்தான் ஃபர்ஸ்ட் & பெஸ்ட் என கன்னத்தில் அறைந்து சொல்கிறது சமீபத்திய புள்ளிவிவரம்.

முதலில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்னும் GSDP வளர்ச்சி குறித்து பார்ப்போம்.2024 - 25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, கணிசமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது கடந்த 2023 - 24 நிதிஆண்டில், சுமார் ₹26.9 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 25 நிதியாண்டில் சுமார் ₹31.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு சுமார் 16% நாமினல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது எந்தளவுக்கு மகத்தானது என்பதை இந்தியாவின் மற்ற பெரிய மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெரிகிறது. வியக்க, மலைக்க வைக்கிறது. ஏனெனில் இந்த வளர்ச்சி விகிதம் உயர்ந்தது என்பது மட்டுமல்ல... மிகவும் உயர்ந்தது என்பதுதான் மனதில் பதியவைக்க, வேண்டிய செய்தி. இது தமிழ்நாட்டின் பொருளாதாரம் விரைவாக விரிவடையும் நிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த வளர்ச்சி ஒரே ஒரு துறையின் காரணமாக அமையவில்லை என்பதும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ப்ளஸ். பல துறைகள் ஒருங்கிணைந்து வளர்ந்ததன் விளைவாக உருவான உயர்வு இது என்பது ஒவ்வொரு தமிழரும் காலரை உயர்த்த வேண்டிய விஷயம்.பெர் காப்பிடா இன்கம் என்கிற ஒருவருக்கு வருமானம் என்பது பொருளாதாரத் துறையில் முக்கியமான அளவீடு. இதை வைத்துதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல... ஒரு நாட்டின் ஏற்றத்தையே உலகம் முடிவு செய்கிறது.

அந்த அடிப்படையில் 2024 - 25 காலகட்டத்தில், தமிழ்நாட்டில் வாழும் தொழில் செய்யும், பணிபுரியும் ஒருவரது ஆண்டு வருமானம் ₹3.6 லட்சத்தை கடந்துள்ளது. இது இந்திய தேசிய சராசரியை விட அதிகம்.இதிலிருந்து தெரிய வரும் உண்மைதான் முக்கியமானது. தமிழ்நாட்டில் உருவாகும் பொருளாதார வளம், பொதுமக்கள் வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே இதன் பொருள். கல்வி, சுகாதாரம், நுகர்வு, சேமிப்பு ஆகிய துறைகளில் இதன் நேரடி விளைவுகளைக் காண முடிவதாக இந்தியப் பொருளாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள். 

மட்டுமல்ல... தமிழ்நாடு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சேவைத் துறை என்னும் சர்வீஸ் செக்டார் விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், வர்த்தகம், போக்குவரத்து, சுற்றுலா... ஆகியவை உயர்ந்த நிலையில் மட்டுமல்ல, முன்னோக்கிய பாய்ச்சலிலும் இருக்கின்றன.உலகளாவிய திறன் மையங்கள் என்பவை சர்வதேச அளவில் முக்கியமானது. இந்தத் துறை, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய பங்கை வகிக்கிறது. 

இந்த அடிப்படையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் சேவைத் துறையின் முக்கிய மையங்களாக சர்வதேச அளவில் வளர்ந்து வருகின்றன.
சேவைத் துறைக்கு அடுத்தபடியாக தொழிற்துறையிலும் ஜெட் வேகத்தில் தமிழ்நாடு வளர்வதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒன்றிய பாஜக அரசால் மறுக்க முடியாத உண்மை இது. 

தமிழ்நாடு, இந்தியாவின் முக்கியமான தொழிற்துறை மாநிலங்களில் ஒன்று என்பது ஏற்கனவே அறிந்த உண்மைதான். இந்நிலையில் இந்த திமுக ஆட்சியில் வாகன உற்பத்தி, மின்னணு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, துணி மற்றும் ஆடைத் தொழில், இரசாயனம், மருந்து உற்பத்தி ஆகியவை எல்லாம் பல நூறு ஹார்ஸ் பவரில் சீறிப் பாய்கின்றன.

அதாவது ‘மேக் இன் தமிழ்நாடு’ கொள்கை, தொழிற்பூங்காக்கள், தொழில் எளிதாக்கல் நடவடிக்கைகள் போன்ற இன்றைய திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு உதவுவதாக ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டுள்ளது! 

சேவைத்துறை, தொழிற்துறையைத் தொடர்ந்து எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு, நடுத்தர தொழில்கள், கம்பீரமாக தமிழகத்தில் நடைபோடுகின்றன. மொத்தம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழியாக 2.5 கோடி நபர்களுக்கு மேல் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் வழங்குகின்றன.

எல்லாவற்றுக்கும் சிகரமாக சிறு, நடுத்தர தொழில்கள், தமிழகத்தின் கிராம மற்றும் நகர்ப்புற பொருளாதாரத்தை இணைக்கும் பாலமாகச் செயல்படுகின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்தத் துறை முக்கிய பங்காற்றுவதாக டேட்டாக்கள் தெரிவிக்கின்றன; இந்தியாவையே மிரள வைக்கின்றன. எல்லாருக்கும் தெரிந்ததுதான். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இலக்கு, வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான். 

இதை மனதில் கொண்டு இன்றைய தமிழகத்தை ஆளும் திமுக அரசு, தொழிற்துறை முதலீடுகளைப் பெற்று புதிய வேலைகளை உருவாக்குகின்றது; சேவைத் துறை திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றது; தமிழக அரசு மேற்கொள்ளும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் வேலைவாய்ப்பு தகுதியை உயர்த்துகின்றன; தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வி அடித்தளம், மனித வளத்தை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு பயன்படுத்த உதவுகின்றது... என்றெல்லாம் பட்டியலிடுகிறது சர்வதேச பொருளாதார அமைப்பு. 

வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் பெருநிறுவன முதலீடுகளும் தமிழ்நாட்டில் குவிவதால் உலகளாவிய உற்பத்திச் சங்கிலியுடன் தமிழகம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றை அதிகரித்துள்ளன.

இதற்கேற்ப மாநில திமுக அரசு, சாலை மற்றும் போக்குவரத்து திட்டங்கள், துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ், தொழிற்பூங்காக்கள், நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகச் செயல்படுகிறது...இதையெல்லாம் கசப்பை விழுங்கியதுபோல் ஒப்புக் கொள்ளும் ஒன்றிய பாஜக அரசு, இன்னொரு அம்சத்தையும் ஆமோதிக்கிறது.

அதாவது தமிழ்நாடு அரசு முன்வைக்கும் முக்கிய இலக்குகள், இனிவரும் காலத்திலும் தமிழ்நாட்டை மற்ற இந்திய மாநிலங்களை விட... அவ்வளவு ஏன்... மற்ற உலக நாடுகளை விட உயர்த்தியபடியே இருக்கும் என்கிறது.

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம், இப்பொழுதிருப்பதை விட ஒருவருக்கு வருமானம் உயர்த்தல், தொழிற்துறை மற்றும் சேவைத் துறையில் சமநிலை வளர்ச்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இணைப்பு... என இன்றைய தமிழகத்தை ஆளும் திமுக அரசு முன்வைத்துள்ள இலக்குகள் மாநில முன்னேற்றத்துக்கு பெருமளவு உதவக் கூடியவை என்பதை இந்தியப் பொருளாதார வல்லுனர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த தேசிய பொருளாதார வல்லுனர்களில், பாஜக சார்பான அறிஞர்களும் அடக்கம் என்பதுதான் ஹைலைட்.  மொத்தத்தில் டேட்டாக்கள் உரக்கச் சொல்கின்றன-இந்தியாவில் first... தமிழ்நாடுதான் Best!  

என்.ஆனந்தி