ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்... ஒரு கிலோ வெள்ளி 2 லட்சம் ரூபாய்!
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன தங்கமும் வெள்ளியும். தங்கம் ஒரு சவரன் 1,00120 ரூபாயையும், வெள்ளி ஒரு கிேலா 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் எனவும்
எட்டியுள்ளன.கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை ரூ.60 ஆயிரம் வரை உயர்ந்தபோதே, அடுத்த ஆண்டின் நிறைவில் அது ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டுவிடும் என, ‘குங்குமம்’ பேட்டியில் தெரிவித்திருந்தார் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ‘கோல்டு குரு’ சாந்தகுமார். அவர் சொன்னது போலவே தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிட்டது. அநேகமாக இந்தக் கட்டுரை வெளியாகும் நேரத்தில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும்.
இதனுடன் கூடவே வெள்ளியின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருப்பது வாடிக்கையாளர்களை விழிபிதுங்க வைத்துள்ளது. இந்நிலையில் டாப் கியரில் செல்லும் தங்கமும் வெள்ளியும் இனி எப்படி ஏறும், ஏன் இந்த விலையேற்றம் உள்ளிட்ட கேள்விகளுடன் ‘கோல்டு குரு’ சாந்தகுமாரிடம் பேசினோம். ‘‘இந்த ஆண்டு ஆரம்பத்துல ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,150 ரூபாயாக இருந்தது. ஒரு சவரன் 57,200 ரூபாய் வந்தது. ஆனா, இன்னைக்கு ஒரு கிராம் ரூபாய் 12,515னு வந்திருக்கு. இப்போ ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த ஓராண்டுல மட்டுமே கிராம் ஒண்ணுக்கு 5,365 ரூபாய் கூடியிருக்கு.
 இந்த விலையேற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. குறிப்பாக, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமான போர்ச் சூழல். இதனால் தங்கத்தின் விலையேறியது. அப்புறம், ஒருபக்கம் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைஞ்சிட்டு வருது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு வரிகள் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கும் வரி விதிச்சார். இதன் தாக்கத்தால் தங்கத்தின் விலை கூடியது.
அடுத்து டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறதால் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பிச்சாங்க. அதேநேரம், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைச்சாங்க.
இதனால், தங்கத்தில் முதலீடு செய்ய விலையும் கூடிடுச்சு. அப்புறம், மற்ற நாடுகள் எல்லாமே தங்கத்தைப் போட்டி போட்டு வாங்க ஆரம்பிச்சாங்க. அதுஒரு விலையேற்றத்தைக் கொடுத்தது.
அடுத்து எச்1பி விசாவை 90 லட்சம் ரூபாயாக உயர்த்தினாங்க. இது ஐடி துறையைப் பாதிக்கும் காரணி. இதன் தாக்கத்தால் தங்கத்தின் விலை உயர்ந்தது.
இப்போ, ஷேர் மார்க்கெட்டும், ரியல் எஸ்டேட்டும் டவுன்ல போயிடுச்சு. அதனால், முதலீட்டாளர்களுடைய பார்வை தங்கம் மீது வந்திருக்கு. அதனால், தங்கம் பக்கம் நிறைய முதலீடு பண்றாங்க. இதனால், தங்கம் விலை இன்னும் ஏற ஆரம்பிச்சிருக்கு. இதுக்கிடையில் தங்கத்தின் விலை நடுவுல கொஞ்சம் குறைஞ்சது. அதுக்குக் காரணம், பிரா ஃபிட் புக்கிங். அதாவது விலை ஏறிட்டே இருக்கும்போது தங்கத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் லாபம் பார்ப்பதற்காகப் பணத்தை எடுத்தாங்க.
இதனால், ஒரு தேக்க நிலை ஏற்பட்டு தீபாவளி நேரம் விலை ஏறாமல் அப்படியே நின்னது. நான் ‘குங்குமத்’துல கடந்த ஆண்டு பேட்டி கொடுத்தப்பவே இந்த ஆண்டுக்குள்ள ஒரு லட்ச ரூபாய் என்கிற இலக்கை அடைஞ்சிரும்னு சொல்லிருந்தேன். அதேபோல் வந்திடுச்சு. தங்கத்தின் தேவைகளும் நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருப்பதால் வரக்கூடிய நாட்கள்ல ஒரு லட்ச ரூபாையயும் தாண்டி தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொடும்.
அதேபோல் பூமியில் தங்கம் அரிதாகி வருது. இதனால் தங்கம் எடுக்கிறதும் நாளுக்கு நாள் குறைஞ்சிட்டே இருப்பதால் இனி தங்கத்தின் விலை உயரவே செய்யும். அடுத்த 2026ம் ஆண்டு மட்டும் தங்கம் விலை 30 சதவீதம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கு.
அதாவது ஒரு சவரன் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை போகும். இப்போ மக்களைப் பொறுத்தவரை தேவைக்கேற்ப தங்கம் வாங்குறாங்க. பணம் இருக்கிறவங்க நல்ல ரிட்டன்ஸ் இருக்கும்னு தங்கத்தில் முதலீடு செய்றாங்க...’’ என்றவரிடம், ‘ஏன் வெள்ளி விலை உயர்கிறது?’ எனக் கேட்டோம். ‘‘கடந்த ஆண்டு ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாயாக இருந்துச்சு. இப்ப ரூ.213 வரை வந்திருக்கு. பொதுவாக வெள்ளியும் தங்கமும் ஒரே மாதிரி டிராவல் பண்ணக்கூடிய உலோகங்கள். அது விலை உயர்ந்தால் இதுவும் விலை உயரும். அது விலை குறைந்தால் இதுவும் குறையும். அப்படி பார்க்கிறப்ப இன்னைக்கு ஒரு லட்சம் ரூபாய் தங்கம் விலை வந்திருக்கு. அதுல மூன்று மடங்கு என்கிற விகிதத்தில்தான் இதுவரை வெள்ளி வந்திட்டு இருக்கு.
அதாவது 1994ல் இருந்து 2000ம் ஆண்டு வரைக்கும் பார்த்தீங்கன்னா ஒரு சவரன் தங்கம் 4,000 ரூபாயாக இருந்துச்சு. அப்போ, ஒரு கிலோ வெள்ளி 12,000 ரூபாய்தான். அதாவது மூணு சவரன் தங்கத்தின் விலை. மூணு மடங்கு விகிதத்தில் பயணிக்கும். ஆனா, இந்தமுறை மூன்று சவரன் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கு. ஆனா, வெள்ளியின் விலை ஒரு கிலோ இரண்டு லட்ச ரூபாயாகவே உள்ளது. அந்த விகிதத்தின்படி பார்த்தால் வெள்ளி இன்னும் உயர்ந்திருக்கணும்.
அதனால், வெள்ளி இன்னும் விலை ஏறும். அப்போ, ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கு.
இது ஒரு கணக்குதான். ஆனா, வெள்ளி உயர்வுக்கு இதுமட்டுமே காரணமல்ல. தற்போது வெள்ளியின் தேவை நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு. முதல்ல வெள்ளியை ஒரு பொருளாகவும், அணிகலனாகவும், வீட்டு உபயோகப் பொருட்களாகவும் மட்டுமே பார்த்தோம்.
அப்புறம், அதிகபட்சமாக அது ஃபிலிம் இண்டஸ்ட்ரிக்கு தேவைப்பட்டுச்சு. அதாவது ஃபிலிம் நெகட்டிவ் உருவாக்கத்தில் வெள்ளி பயன்பட்டது. அப்புறம் பல்மருத்துவத் துறைக்குத் தேவையாக இருந்துச்சு. ஆனா, இப்போ வெள்ளியின் பயன்பாடு நிறைய துறைகளுக்கு அவசியமாகியிருக்கு. குறிப்பா, ராக்கெட் ஏவுகணைகள் தயாரிக்கிறதுக்கு வெள்ளி தேவைப்படுது. செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் தயாரிப்பிலும் பயன்படுது.
அன்னைக்கு செல்போனே கிடையாது. இன்னைக்கு சராசரியாக ஒருவர் ரெண்டு செல்போன் பயன்படுத்துறார். இதுதவிர, சோலார் பேனல், எலக்ட்ரிக்கல் வண்டிகள் தயாரிப்பிலும் வெள்ளி பயன்பாடு நிறைய இருக்கு. இன்னைக்கு மாற்று எரிசக்தியை நோக்கி பயணிக்கிறோம். இனி சோலாரும், எலக்ட்ரிக்கல் வண்டிகளும் அதிகரிக்கவே செய்யும். அதனால், வெள்ளியின் விலையும் அதிகரிக்கும்.
இதன்படி அடுத்த ஆண்டு 30 சதவீதம் வரை வெள்ளியின்விலை உயரும். அதாவது, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாய் என்ற அளவில் அடுத்த ஆறு மாச காலத்திலேயே வந்திடும். இப்ப மக்களும் தங்கம் விலை அதிகமாக இருப்பதால் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுறாங்க...’’ என்கிறார் ‘கோல்டு குரு’ சாந்தகுமார்.
பேராச்சி கண்ணன்
|