பெயர்: யோகி, வயது: 10, ஊர்: பொள்ளாச்சி, தாத்தாவின் பெயர்: கலீம் (கும்கி யானை) பொழுதுபோக்கு: காடுகளில் சுற்றுவது!



‘‘காடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் செடி, கொடிகள், மரங்கள் மட்டுமல்ல... புழு, பூச்சிகள், ஊர்வன, பறப்பன, தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள், அனைத்துண்ணிகளும் காட்டில் அடக்கம். 
அந்தக் காட்டின் ஒரு பகுதிதான் பழங்குடிகள். காட்டை யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்களையும் எனக்குப் பிடிக்கும்...’’ என்று மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்தார் யோகேஸ்வரன் எனும் யோகி. இயற்கையின் மீது பெருங்காதல் கொண்டவராக இருக்கும் யோகியின் வயது 10. இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த இளம் இயற்கை ஆர்வலர்களில் இவரும் ஒருவர். 
ஒரு பத்து நிமிடம் யோகியிடம் பேச்சுக் கொடுத்தாலே போதும்; காடு, காட்டுயிர்கள், பழங்குடிகள் குறித்து அவருக்கிருக்கும் அக்கறையையும் காதலையும் உணர்ந்து கொள்ளலாம். 

இவ்வளவு சிறிய வயதிலேயே காடு மற்றும் காட்டுயிர்கள் குறித்த பரந்த அறிவுடன் இருக்கிறார். இயற்கை ஆர்வலர் மட்டுமல்லாமல் நாடகக் கலைஞர், இசைக் கலைஞர் என்று பன்முகத் திறமையாளராகவும் மிளிர்கிறார் யோகி.  

மட்டுமல்ல; பல முறை காடுகளுக்குப் பயணம் செய்ததன் மூலம் கிடைத்த அனுபவங்களை வைத்து, ‘கஜராஜன் கலீம் தாத்தா’, ‘அப்போது நான் வரையாடாக இருந்தேன்’ ஆகிய சூழலியல் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அடுத்து இருவாட்சிப் பறவை குறித்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார் யோகி. தவிர, காட்டின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பெரியவர்களிடமும், தன்னைப் போன்ற குழந்தைகளிடமும் ஏற்படுத்தி வருகிறார். 

ஆம்; பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் மாணவர்கள் மத்தியில் இயற்கைப் பாதுகாப்பு குறித்து உரையாடுவது யோகியின் முக்கியப் பணி. இப்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்திருக்கும் டாப்ஸ்லிப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் யோகி, காட்டுக்குள்  ஒரு கானகனாகவே இருக்கிறார்.

‘‘யோகி பிறந்து 26 நாட்களான உடனே அவனைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுவிட்டோம். அதன்பிறகு, எப்போது நாங்கள் காட்டுக்குள் சென்றாலும்  யோகியையும் உடன் அழைத்துச் செல்வோம். அதனால், அவனுக்குக் காடு பற்றி எந்த பயமும் இல்லை. இயல்பாகவே அவனுக்குக் காடு பிடித்துப்போனது...’’ என்கின்றனர் யோகியின் பெற்றோர்களான சுரேஷ்வரனும் நிவேதிதாவும். ‘‘நான் புத்தகம் எழுதுவதற்கான தூண்டுதலே என்னுடைய பெற்றோர்கள்தான்.

அப்பாவும் அம்மாவும் போகிற இலக்கியக் கூட்டங்களுக்கு எல்லாம் என்னையும் அழைத்துப் போவார்கள். அங்கே வருபவர்கள் புத்தகம் குறித்துப் பேசும்போது எனக்கும் புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசையாக இருக்கும். 

அந்த இலக்கியக் கூட்டத்தில் என்னோட புத்தகம் குறித்தும் பேச வேண்டும் என்று நினைப்பேன். ‘எனக்கு வைல்டு லைஃப்னா ரொம்ப பிடிக்கும். காட்டுக்குள்ள நான் பார்த்தது, கேட்டது, அனுபவித்தது பற்றி புத்தகம் எழுதட்டுமா?’ என்று பெற்றோரிடம் கேட்டேன். 

அவர்கள் என்னை உற்சாகப்படுத்த, ‘கஜராஜன் கலீம் தாத்தா’வும், ‘அப்போது நான் வரையாடாக இருந்தேன்’னும் தயாராகிவிட்டது...’’ என்கிற யோகியின் அப்பாவான சுரேஷ்வரன் ஒரு நாடகப் பயிற்றுநர், அம்மா நிவேதிதா ஒரு ஆசிரியை. பொள்ளாச்சியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பல பழங்குடி மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு நிவேதிதா அளித்த கற்றல் பயிற்சிதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.   

‘‘என்னோட தாத்தா கலீமை முதன் முதலாக நேரில் பார்த்தபோது, தரையில் படுத்துக்கிடந்தார். அப்போது கலீம் தாத்தாவோட உடல் முழுவதும் மண் அப்பியிருந்தது. கலீம் தாத்தா மீது ஒட்டியிருந்த மண்ணை தன்னுடைய துண்டால் மணி தாத்தா சுத்தம் செய்துகொண்டிருந்தார். 

மணி தாத்தாவும், கலீம் தாத்தாவும் நண்பர்கள் போல இருந்தனர். அதற்குப் பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலீம் தாத்தாவைப் பார்க்கப் போவேன்...’’ என்கிற யோகியின் காடு சார்ந்த அனுபவங்களினூடாக, கலீமுடனான நெருக்கத்தையும் பேசுகிறது, ‘கஜராஜன் கலீம் தாத்தா’. 

இந்தப் புத்தகம் ஃபிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. யானைகளைப் பற்றி நாம் அறிந்திடாத பல அரிய தகவல்களை நெகிழ்வாகக் கொடுத்திருக்கிறது இப்புத்தகம். யானையின் மீதும், காடுகளின் மீதும் யோகிக்கு இருக்கும் பேரன்பும், பேரார்வமும் இப்புத்தகத்தில் அசத்தலாக வெளிப்படுகிறது. 

ஆம்; புகழ்பெற்ற கும்கி யானையின் பெயர்தான், கலீம். மணி என்பவர் அதன் பாகன். இதுவரை 99 முறை காட்டு யானைகளை விரட்டியும், பிடித்துமிருக்கிறது கலீம். 
டாப்ஸ்லிப்பில் இருக்கின்ற ஒவ்வொரு கும்கி யானைக்கும் ஒரு பெயர் இருக்கிறது. 

யானையைப் பார்த்தவுடனே, அதன் தோற்றத்தை வைத்து சரியான பெயரைச் சொல்லும் அளவுக்கு யானைகளுடன் நெருக்கமாக இருக்கிறார், யோகி. அந்த யானைகளும் யோகியைச் சரியாக அடையாளம் கண்டுகொள்கின்றன. தவிர, ஏராளமான பறவைகளை அடையாளம் காண்பதோடு, அதன் பெயர்களையும் சரியாகச் சொல்கிறார் யோகி.

‘‘‘நீ கலீமைத் தாத்தா மாதிரி பார்க்குறே, அவர் எப்போதாவது பேரன் மாதிரி உன்னைப் பார்த்திருக்கிறாரா?’ என்ற கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் இந்த நிகழ்வைச் சொல்வேன். ஒரு நாள் நான் கலீம் தாத்தாவுக்கு நெருக்கமாக வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன். நான் நின்றுகொண்டிருப்பதை அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை. என்னைவிட பல மடங்கு உயரமானவர் கலீம் தாத்தா. அவர் பக்கத்தில் நான் நின்றுகொண்டிருந்ததைக் கவனிப்பது அவருக்குக் கடினம்.

திடீரென கலீம் தாத்தா பின்னாடி நகர்ந்தார். அவருடைய தந்தம் என் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக மிகுந்த கவனத்துடன் நகர்ந்தார். அப்போதுதான் அவர் நான் அருகில் இருந்ததைக் கவனித்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். எனக்கு அடிபடக்கூடாது என்று நினைப்பவர் தாத்தாதானே...’’ என்கிற யோகி, அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டே, சூழலியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனது இரண்டாம் புத்தகத்தைப் பற்றியும் பகிர்ந்தார்.

‘‘ஒரு நாள் அம்மா தனது வகுப்பில் ‘தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?’ என்று கேட்டார். பெரும்பாலான மாணவர்கள் ‘புலி’ என்று பதில் சொன்னார்கள். ‘இல்லை’ என்று தலையசைத்த அம்மா, ‘வரையாடு’ என்ற சரியான பதிலையும் சொன்னார். அப்போதுதான் என் வயதுகொண்ட பெரும்பாலானவர்களுக்கு வரையாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அதே நேரத்தில் வரையாடுகள் வேகமாக அழிந்து வருகிறது; வரையாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அப்பாவிடமிருந்து அறிந்துகொண்டேன்.
 
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வரையாடுகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்றேன். பல மணி நேரங்கள் வரையாடுகளின் அருகிலேயே இருந்தேன். வரையாடுகள் எதைச் சாப்பிடுகிறது, எப்படித் தூங்குகிறது, எங்கெல்லாம் செல்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தேன். கலீம் தாத்தாவைப் போலவே வரையாடுகளுக்கும் எனக்கும் இடையில் ஆழமான பந்தம் ஏற்பட்டது. வரையாடுகள் குறித்து நான் அறிந்தவற்றை எல்லாம் மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். 

அந்தப் பகிர்தல்தான் ‘அப்போது நான் வரையாடாக இருந்தேன்’...’’ என்கிற யோகியின் இந்தப் புத்தகம் வரையாடுகள் குறித்த ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் மத்தியில் வரையாடுகள் குறித்த அறிமுகத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு இந்தப் புத்தகம் உதவும்.  ‘‘ஒவ்வொரு நாளும் நான் காட்டுக்குள் போகும்போதெல்லாம் முதலில் காண்பது பிளாஸ்டிக் குப்பைகளைத்தான். நமக்கு அது குப்பைகள் என்று தெரியும். 

ஆனால், காட்டில் வாழும் உயிர்களுக்கு அதைப்பற்றித் தெரியாது. அதனால் காட்டுயிர்கள் பிளாஸ்டிக் குப்பைகளைச் சாப்பிட்டுவிடும். அந்த அப்பாவிக் காட்டுயிர்களின் உயிரை பிளாஸ்டிக் குப்பைகள் பறித்துவிடும். தயவுசெய்து யாரும் காட்டுக்குள் பிளாஸ்டிக் குப்பைகளைப் போடாதீர்கள்...’’ என்ற வேண்டுகோளுடன் அழுத்தமாக முடித்தார் யோகி.

செய்தி: த.சக்திவேல்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்