Must Watch
 ஆச்சாரி பா
சமீபத்தில் ‘ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘ஆச்சாரி பா’. குஜராத்தில் உள்ள சிறு நகரத்தில் வாழ்ந்து வருகிறார், ஜெய்ஸ்னவி. கணவனை இழந்த ஜெய்ஸ்னவிக்கு வயது 65.
மும்பையில் வசித்து வரும் மகன் கேட்டனை சில வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் ஜெய்ஸ்னவி. அம்மாவுக்கும், மகனுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இந்நிலையில் தன்னுடன் மும்பையில் வந்து தங்கும்படி அம்மாவுக்கு அழைப்பு விடுக்கிறான் மகன்.
மும்பைக்கு வந்து பார்த்தால் ஜெய்ஸ்னவிக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம்; ஜெய்ஸ்னவியின் மகன் தனது குடும்பத்துடன் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா சென்றிருக்கிறான். வீட்டில் நாய் மட்டுமே இருக்கிறது. நாயைக் கவனித்துக்கொள்ளத்தான் அம்மாவை வீட்டுக்கு அழைத்திருக்கிறான் மகன். உடைந்து போகிறார் ஜெய்ஸ்னவி.
இந்த தர்மசங்கடமான சூழலிலிருந்து எப்படி ஜெய்ஸ்னவி மீண்டு வருகிறார் என்பதை நெகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. சம காலத்தில் முதியவர்கள் தனித்து விடப்படுவதையும், குழந்தைகளால் கைவிடப்படும் பெற்றோர்களைப் பற்றியும் மென்மையாக சித்தரித்திருக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ஹர்திக் கஜ்ஜார். ஸ்னோஒயிட்
கடந்த 1937ம் வருடம் வெளியாகி, சக்கைப்போடு போட்ட அனிமேஷன் படம், ‘ஸ்னோஒயிட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ்’. இப்படத்தின் லைவ் - ஆக்ஷன் ரீமேக்தான் ‘ஸ்னோஒயிட்’. ‘ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். மக்கள் மத்தியில் நல்ல குணங்கள் கொண்ட ராணி என்று பெயரெடுத்தவர் அவர். பனிப்புயல் வீசுகின்ற ஒரு நாளில் மகளைப் பெற்றெடுக்கிறார் அந்த ராணி.
பனிப்புயல் வீசிய நாளில் மகள் பிறந்ததால் ராஜாவும், ராணியும் சேர்ந்து ஸ்னோஒயிட் என்று மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். ராஜாவும் ராணியும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஊரும் செழிப்பாக இருக்கிறது. திடீரென நோய்வாய்ப்பட்டு ராணி இறந்துவிடுகிறார். எல்லாமே தலைகீழாக மாறுகிறது.
ராஜா இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார். புதிதாக வந்திருக்கும் ராணியோ கெட்ட குணம் படைத்தவள். அரியணையை அபகரிக்கிறாள். அந்த அரியணையில் அமர வேண்டிய ஸ்னோஒயிட் என்ன செய்கிறாள் என்பதே மீதிக்கதை. தேவதைக் கதை வாசிப்பதைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம். இதன் இயக்குநர் மார்க் வெப்.
வேலியன்ட் ஒன்
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஆங்கிலப் படம், ‘ வேலியன் ட் ஒன்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியைக் கண்காணித்து வருகிறது அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று. இராணுவ முகாம் இல்லாத இடங்களில் உள்ள ரேடார் யூனிட்டைச் சரி செய்வதும் கண்காணிப்பின் போது நடக்கும் முக்கியப் பணி.
கண்காணிப்பின் போது வட கொரியாவின் எல்லைப் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் ஹெலிகாப்டர், எல்லையைத் தாண்டி வட கொரியாவுக்குள் போய் விழுந்துவிடுகிறது. ஓரிருவர் மட்டுமே பிழைத்திருக்க, முக்கியமான அதிகாரிகள் விபத்தில் இறந்துவிடுகின்றனர். ஹெலிகாப்டரிலிருந்து அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புகொள்ளும் முக்கியமான சாதனமும் விபத்தில் அழிந்துவிடுகிறது.
விபத்திலிருந்து தப்பித்த அதிகாரிகள் வட கொரியாவிலிருந்து தப்பித்து, தென் கொரியாவுக்குச் செல்ல முயல்கின்றனர். விபத்தில் தப்பித்தவர்கள் உயிர் பிழைப்பதற்கான போராட்டம்தான் மீதிக்கதை. ஆக்ஷன், திரில்லிங் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் தவறவிடக்கூடாத படம் இது. படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டீவ் பர்நெட்.
புல்லட் டிரெய்ன் எக்ஸ்ப்லோஷன்
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜப்பானிய மொழிப்படம், ‘த புல்லட் டிரெய்ன்’. இதன் இரண்டாம் பாகம்தான், ‘புல்லட் டிரெய்ன் எக்ஸ்ப்லோஷன்’. சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியான இந்த ஜப்பானியப் படம், தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
டகாய்ச்சியின் மேற்பார்வையில் சின் - அமோரியிலிருந்து டோக்கியோ வரை செல்கிறது ஒரு புல்லட் ரயில். புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் ஒரு போன் அழைப்பு வருகிறது. ரயிலில் அணுகுண்டு வைத்திருப்பதாகவும், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் செல்ல வேண்டும். வேகம் குறைந்தால் அணுகுண்டு வெடித்து விடும் என்று போனில் அழைத்தவன் சொல்கிறான். ரயிலில் அணுகுண்டு இருப்பது பயணிகளுக்குத் தெரியாமல் ரகசியம் காக்கப்படுகிறது. இந்த ரயில் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் மற்ற ரயில்கள் செல்லும் பாதைகள் மாற்றப்படுகின்றன. உண்மையிலுமே ரயிலில் அணுகுண்டு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள படத்தை ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்.எங்கேயும் பிரேக் போட்டு நிற்காமல், ரயில் வேகத்தில் செல்லும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் சிஞ்சி ஹிகுச்சி.
தொகுப்பு: த.சக்திவேல்
|