99 வயது கிழவனும் 95 நிமிட கடலும்!



சமீபத்தில் வெளியாகியிருக்கும் முக்கியமான ஆவணப்படம், ‘ஓஷன் வித் டேவிட் ஆட்டன்பரோ’. ‘ஹாட்ஸ்டாரி’ல் பார்க்கலாம்.ஸ்கூபா டைவிங் அடிக்காமலேயே கடலின் அடியாழம் வரை இழுத்துச் செல்கிறது, இந்த ஆவணப்படம். 99 வயதில், 95 நிமிடங்களில் கடல் குறித்த பிரமாண்ட சித்திரத்தையும், ஆழமான விழிப்புணர்வையும் பார்வையாளனுக்குள் கடத்துகிறார், டேவிட்.
கடல் குறித்த தனது பார்வையையும், அனுபவங்களையும் டேவிட் எளிமையாக பதிவு செய்ய, காலின் பட்ஃபீல்ட், டோபி நௌலான், கெயித் ஸ்காலே ஆகிய மூவரும் இணைந்து இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கின்றனர்.  

இதுவரைக்கும் கடல் குறித்து நாம் அறிந்திடாத புதுப்புது விஷயங்களைப் பகிர்கிறார் டேவிட். அது கடல் மீது நாம் கொண்டிருக்கும் பார்வையையே முற்றிலும் மாற்றுகிறது.  
‘‘100 வயதுக்குப் பக்கத்தில் வந்த பிறகுதான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். இந்தப் பூமியில் மிக முக்கியமான இடம் நிலத்தின் மீது இல்லை; அது கடலில் இருக்கிறது. ஒருமுறை கடலை, உண்மையாகப் பார்த்துவிட்டால், பூமியைப் பார்க்கும்விதமே உங்களுக்கு மாறிவிடும்...’’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார் டேவிட்.  

உயிரியலாளர், இயற்கை வரலாற்றாசிரியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இயற்கை நிபுணர் இவர். “பல ஆயிரம் வருடங்களாக கடலுடன் மனிதனுக்குத் தொடர்பிருந்தாலும், சமீப வருடங்களாகத்தான் இந்த உலகுக்குக் கடல் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருக்கிறோம். கடலைப் பார்க்கும் திறனும் மாற்றமடைந்திருக்கிறது. பலருக்கும் கடற்கரைக்கு அப்பால் உள்ள இடம் இருளும், அச்சுறுத்தலும், ஆபத்தும் நிறைந்த பார்வைக்குப் புலப்படாத ஓர் மர்மமாகத்தான் இருந்தது.

ஸ்கூபா கியரின் கண்டு

பிடிப்பு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கடலுக்கடியில் உள்ள அற்புதமான, ஆச்சர்யம் மிகுந்த உலகத்தைக் காண்பதற்கு ஸ்கூபா உதவியது.கடைசியாக மிச்சமிருக்கும் மாபெரும் வனாந்திரம்தான் ஆழ்கடல். அது எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை...’’ என்கிற டேவிட், ஆழ்கடல் குறித்தும் ஆவணப்படத்தில் பகிர்கிறார். 

“ஆழ்கடலின் பெரும்பாலான பகுதிகளை மனிதன் இதுவரை பார்க்கவில்லை. அதுதான் நம்முடைய இறுதி எல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை ஆழ்கடலை ஒரு வெற்றுப் பாலைவனம் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தோம். ஆனால், அதுவொரு சோலை...” என்கிற டேவிட், ஆழ் கடலில் உள்ள மலைகளைப் பற்றி விவரித்தார்.

“சுறா, டூனா மாதிரியான மீன்கள் உணவுக்காக பூமி முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் இடம் பெயர்ந்துகொண்டே இருப்பதை  கண்டுபிடித்திருக்கின்றனர். அவை எப்படி பயணிக்கிறது என்பது குறித்து சமீபத்தில்தான் தெரியவந்திருக்கிறது. அவைஉலகம் முழுவதும் இருந்து வந்து, ஒரு விசேஷமான இடத்தில் ஒன்று கூடுகின்றன. அந்த இடம்தான் நீர்மூழ்கி மலைகள்.
ஆம்; ஆழ் கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. 

இந்த நீர்மூழ்கி மலைகள் 4.5 கிலோ மீட்டர் வரை உயரம் கொண்டவை. சுறா, டூனாவுக்கான உணவுகள் இந்த மலையில்தான் கிடைக்கின்றன.இந்த மலைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. சுறா மீன்களின் கடற் பயணங்களில் இறுதி நிறுத்தங்களாக நீர்மூழ்கி மலைகள் இருக்கின்றன...” என்கிற டேவிட், ஆழ் கடலில் உள்ள காடுகள் குறித்தும் விளக்கினார்.

“நிலத்தில் இருக்கும் காடுகளைவிட, பெரிய காடுகள் ஆழ் கடலுக்குள்தான் இருக்கின்றன. மட்டுமல்ல, ஆழ் கடலுக்குள் மாபெரும் புல்வெளியும் இருக்கிறது. கடலுக்குள் உள்ள காடுகளும், புல்வெளிகளும் நிலத்தில் இருக்கும் மழைக்காடுகளைவிட, அதிகமான கார்பனை உறிஞ்சுவதை நாங்கள்  கண்டுபிடித்தோம். 

தவிர, இவற்றிலிருந்து வெளிப்படும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகம். இந்தக் காடுகளால் நிலத்தில் ஏற்படும் பருவநிலை பேரழிவுகளைக்கூட தடுக்க முடியும்...” என்கிற டேவிட், “ஆழமற்ற கடலோரப் பகுதிகள்தான் ஒட்டுமொத்த கடலுக்குமே அடித்தளம்...” என்கிறார்.

‘‘நான் இதுவரை நிலத்தில் பார்த்த எதுவும், இந்தளவுக்கு அதிக உயிர்களையும், பன்முகத் தன்மையும் கொண்ட உணர்ச்சிக் குவியலை என் கண் முன்பு கொண்டு வந்ததில்லை...’’ என்று பவளப்பாறைகள் குறித்து வியக்கும் டேவிட், பவளப்பாறைகள் ஒரு விலங்கு என்று அதிர்ச்சியும் அளிக்கிறார்.“ஒவ்வொரு வருடமும் 2000 புதிய கடல் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் சுறாக்களைப் பவளப்பாறையிலிருந்து நீக்கிவிட்டால், இங்கே அதிக மீன்கள் இருக்கும் என்று நம்பினோம்.

ஆனால், அது எவ்வளவு தவறு என்று இப்போது தெரிந்துகொண்டோம். பவளப்பாறையிலிருந்து ஒரு மீனையோ அல்லது வேறு ஒரு உயிரினத்தையோ நீக்கினால் எல்லா உயிர்களும் சிக்கலுக்கு உள்ளாகலாம். ஒரு மெல்லிய சமநிலை இங்கே நிலவுகிறது...” என்று கடலின் சிறப்புகளைப் பகிர்ந்த டேவிட், சம காலத்தில் கடலுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் அழுத்தமாக இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

“ஒவ்வொரு வருடமும் அமேசான் மழைக்காடுகள் அளவுள்ள கடலின் அடிப்பகுதி டிராலர் வகை மீன்பிடிப்பு முறையினால் பாதிப்புக்குள்ளாகிறது. கடலின் அடிப்பகுதி பாதிப்பால் கார்பன் வெளியீடு அதிகமாகிறது. இது புவிவெப்பமயமாகுதலுக்குக் காரணமாகிறது.

தினமும் ஒரு காட்டை புல்டோசர் கொண்டு அழித்தால் சட்டரீதியாக நிறைய பிரச்னைகள் வரும். அதே அளவுக்குக் கடல் சுரண்டப்படுவதைக் குறித்து யாருமே கேள்வி கேட்பதில்லை. 100 வருடங்கள் பழமையான கடற்பாசி பூங்காங்கள் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. பல்லாயிரம் வருடங்களாக இருந்த கடல் புல்வெளிகள் வண்டல் மண்ணாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுறா மீன்களைப் பிடிக்கின்றனர். இதற்காக பிரத்யேகமாக 80 கிலோமீட்டர் நீளம் கொண்ட தூண்டில்களைப் பயன்படுத்துகின்றனர். இப்போது மனிதர்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரிய வேட்டை மீன்களைக் கொன்றுவிட்டார்கள். டைனோசர் போல சுறா மீன்களும் அழிந்துபோகலாம். 

400 வருடங்களுக்கு முன்பு கடலோரத்தில் உள்ள நீரில் படகுகள் செல்ல முடியாத அளவுக்கு அங்கே மீன்கள் நிறைந்திருக்கும். ஒரு காலத்தில் உணவுக்காக கரையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே மீன் பிடித்தோம்.

ஆனால், இன்று கடலின் எல்லா பகுதிகளிலும் மீன் பிடிக்கின்றனர். பெரிய மீன் பிடிக்கும் நிறுவனங்களின் கப்பல்கள் செல்லாத கடல் பகுதிகளே இல்லை. பனிப்பிரதேசங்களில் வாழும் பெங்குவின் போன்ற உயிரினங்களின் உணவான கிரில் வகை மீன்களைக் கூட விட்டு
வைப்பதில்லை.

இப்போது கடலில் வெகு சில மீன்கள் மட்டும்தான் இருக்கின்றன. உலகத்தில் உள்ள ஒவ்வொரு கடலிலும் இந்த அட்டூழியம் ஒரே மாதிரிதான் நடக்கிறது. உணவுக்காகவும், வருமானத்துக்காகவும் கடலை 300 கோடிப்பேர் சார்ந்திருக்கின்றனர்.

சில பணக்கார நாடுகள் அனுப்புகின்ற கப்பல்கள் கடலோர சமூகங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக சார்ந்திருக்கிற அந்தக் கடல் உணவைக் கிடைக்க விடாமல் செய்கின்றன. இது கடலில் நடக்கிற நவீன காலனியாதிக்கம். கடலின்ஒவ்வொரு மூலையையும் 4 லட்சம் கப்பல்கள் வேட்டையாடுகின்றன. உண்மையில் கடலின் உயிரை உறிஞ்சிவிட்டோம்...” என்றவர் கடலைப் பாதுகாப்பதற்கான வழிகளைப் பகிர்ந்தார்.

“நாம் கடலைத் தொந்தரவு செய்யாமல் இயற்கைக்கு வழிவிட்டால் போதும். கடல் தன்னைத்தானே காத்துக்கொள்ளும். சில கடல் பகுதிகளில் மீன் பிடிக்க தடை உட்பட கடலுக்குத் தொந்தரவு தருகின்ற அனைத்தையும் தவிர்த்து, சோதனை செய்து பார்த்தோம். 

ஐந்தே வருடங்களில் நாங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு கடல் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டது. காணாமல் போன பல உயிரினங்கள் திரும்பி வந்தன. மீன்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எந்த வகையிலும் கடலைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்...” என்று அழுத்தமாக டேவிட் பதிவு செய்ய, ஆவணப்படம் நிறைவடைந்தது.

த.சக்திவேல்