மத்திய கிழக்கு...சன்னி Vs ஷியா!
ஈரானின் பலம்தான் என்ன?
அது ஒருங்கிணைக்கும் போராட்டக் குழுக்கள்தான். மத்திய ஆசியா முழுவதுமே இருக்கிற எல்லா போராட்டக் குழுக்களின் தலைமையகமே ஈரான்தான் என்று சொல்லத்தக்க அளவுக்கு வலுவான கட்டமைப்பைக் கொண்டது அந்நாடு .
 இன்று வரை இஸ்ரேலுக்கும், இஸ்ரேலின் ஆதரவாளர்களாக இருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் போராட்டக் குழுக்களை ஒருங்கிணைப்பதும், அதன் மூலம் தனது சொந்த பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுமே ஈரானின் வழிமுறையாக இருக்கிறது. இந்தப் போரைப் பயன்படுத்தி அதில் மிகப்பெரிய உடைப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்று முயல்கிறது இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டணி.

ஈரானின் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் தாக்கப்படுகின்றன. தமது ஹேக்கர்களை ஏவி ஈரானின் வங்கி மற்றும் பொதுச் சேவைகளை முடக்கியிருக்கிறது இஸ்ரேல். இணையாக, முக்கிய ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த சூழலில் ரஷ்யா இதன் உள்ளே நுழைய முடியாதவாறு அது உக்ரைன் விவகாரத்தில் கடுமையாக சிக்கியிருக்கிறது.
மத்திய கிழக்குக்கு வெளியே இருந்து இந்த விவகாரத்தைப் பார்ப்பவர்களுக்கு இஸ்லாமியர்கள் Vs யூதர்கள் என்பது மட்டுமே தெரியும். இப்பார்வை பிழையானது.
மத்திய கிழக்கின் முக்கியமான பிரச்னை இஸ்லாமியர்களின் சன்னி Vs ஷியா முஸ்லிம்களுக்கு இடையேயான பிளவுதான்.
இரண்டு தரப்பும் தங்களுக்கு இடையே கடுமையான துவேஷமும், பாரபட்சமும் கொண்டவர்கள். இந்திய சமூகத்தில் எப்படி சாதி என்கிற கருத்தாக்கம் உளவியல் ரீதியான ஆதிக்கம் கொண்ட மேல் X கீழ் கட்டுமானமோ அதே போல இஸ்லாமிய சமூகத்தில் சன்னி Vs ஷியா பிளவும் மத ரீதியான ஆழமான பூசலைக் கொண்டது.
ஷியாவின் வழிபாட்டு முறைமையே கடவுளுக்கு எதிரான சாத்தானிய வழிமுறை என்று சன்னிகள் நம்பும் அளவுக்கு அது உளவியல் ரீதியான பிளவு கொண்டது. எண்ணெய் கண்டுபிடிக்கப்படாத, சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மத்திய ஆசியாவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே இந்தப் பிளவின் வேரை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
சவுதியின் பெரும்பாலான எண்ணெய் வயல்கள் இருக்கும் இடம் வரலாற்றுக் காலத்தில் ஷியா பிரபுக்கள் வசம் இருந்தவை. இன்று சன்னி ராஜாவின் ஆளுகைக்குள் இருக்கும் சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம்கள் இரண்டாம் தர குடி மக்கள்.
ஷியா மக்களை பெரும்பான்மையாக் கொண்ட பஹ்ரைன், கிட்டத்தட்ட சவுதி அரேபியாவின் காலுக்குக் கீழே இருக்கும் நாடு. பஹ்ரைனின் அரசர் சன்னி வகுப்பைச் சேர்ந்தவர். ஷியா மதகுருவையே தூக்கிலிடும் அளவுக்கு சன்னி Vs ஷியா பிளவு கொண்டது சவுதி அரேபியா.
ஏமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் கடும் சண்டையில் ஈடுபட்டு அந்த நாட்டைக் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கியிருக்கிறது சவுதி அரேபியா. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதற்கு உதவி புரிகின்றன.
ஆனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பின்னால் நிற்பது ஈரான்தான். கிட்டத்தட்ட ஏமனில் சவுதி அரேபியாவின் தோல்வியை ஈரான் உறுதி செய்தது. ஹவுதிகள்தான் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியர்களின் தாக்குதலைக் கண்டித்து, மத்திய ஆசியாவின் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர்கள். சரக்குக் கப்பல் போக்குவரத்தில், குறிப்பாக எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்தில் இஸ்ரேல் முக்கியமான நாடு. அதன் பொருளியல் நலனைப் புரிந்துகொள்ளுங்கள்.
சிரியாவிலும் இதேதான். அத்தனை ஆண்டுகள் அங்கு ஆஸாத் தாக்குப்பிடித்தார் என்றால் அதற்குக் காரணம் ஈரான் + ரஷ்யா அவருக்குச் செய்த உதவிகள்தான்.
அந்தப் பின்புலத்தில்தான் ஐஎஸ்ஐ உருவாக்கத்தையும் அதன் வளர்ச்சியையும், அதன் உருவாக்கத்தில் அமெரிக்காவின் பங்களிப்பையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தத் தகவல் எல்லாம் எதனால் முக்கியம் என்றால், மத்திய ஆசியாவின் பிரச்னையை வெறுமனே அமெரிக்காவின் - மேற்கு நாடுகளின் - அணுகுமுறை + இஸ்ரேலியர்களின் முரட்டுத்தனம் என்று மட்டும் ஒற்றைப்படையாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்.
அங்கு இருக்கும் சன்னி Vs ஷியா பிளவு, இஸ்லாமிய மக்களை எப்படிப் பிரித்து வைத்திருக்கிறது... அதை மேற்கு நாடுகள் எங்ஙனம் நுட்பமாகக் கையாள்கின்றன என்று விரிந்த அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்காவின் தலையீட்டால் நிகழ்ந்த மனித அவலத்தை விட இஸ்லாமிய மக்களுக்கு இடையே இருக்கும் இந்தப் பிளவு கொண்டு வந்திருக்கும் துயரமே அதிகம்.சென்ற மாதம் நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் அமெரிக்காவிடம் இருந்து போர்த் தளடவாடங்களை வாங்கிக் குவித்திருக்கிறது சவுதி அரேபியா.
சென்ற ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்திலும் இதே அளவு ஆயுதங்களை வாங்கினார்கள். அவர்களுக்கு யார்தான் இத்தனை அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்? ஈரான்தான்.
கிட்டத்தட்ட வரலாற்றில் முதல் முறையாக ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை சவுதி அரேபியா தொடங்கிய போதுதான் இஸ்ரேலியர்கள் மீதான பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தொடங்கியது.
இந்தப் பேச்சு வார்த்தையை சீனா தலைமை தாங்கியது என்பது முக்கியம். மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா என்கிற விவாதம் உலக அளவில் எழுந்தது. இஸ்ரேல் - பாலஸ்தீன தாக்குதலுக்குப் பின் சவுதி - ஈரான் பேச்சுவார்த்தை முட்டுச் சந்துக்குள் முடங்கியது. அதே சமயம், ஈரான் மீதான இப்போதைய இஸ்ரேலின் தாக்குதலை, அந்நாட்டின் சீர் குலைவை சவுதி அரேபியா எப்படிப் பார்க்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். வெளிப்படையாக ஆதரிக்காது. ஆனால், உள்ளூர அதை விரும்பவே செய்யும். அதுவே மத்திய கிழக்கின் யதார்த்தம். புறப்பார்வைக்குத்தான் சவுதியும் ஈரானும் இஸ்லாமிய நாடுகள். ஆனால், உள்ளுக்குள் அவர்கள் ஆழமாகப் பிளவுண்ட சன்னிகள் மற்றும் ஷியாக்கள்.
ஈரான், ஈராக், ஏமன், சவுதி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பிரச்னையை வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முயன்றால், ஒரு கையில் துப்பாக்கி, இன்னொரு கையில் மதம், உடல் முழுக்க எண்ணெயும் ரத்தமும் கலந்த சகதியில் மூழ்கியிருக்கும் அதன் உடல் என்கிற சித்திரமே கிடைக்கிறது.போரால் உடல் உறுப்புகள் இழந்த மத்திய கிழக்கின் குழந்தைகளை அதன் ஆன்மாவுக்கு ஒப்பிடலாம்!
கார்ல் மார்க்ஸ் கணபதி
|