40 + பெண்கள் இனி ஹேப்பி... Pelvic organ prolapse பிரச்னைக்கு தீர்வு வந்தாச்சு!



இடுப்பு உறுப்பு சரிவு பிரச்னை பற்றி பலருக்குத் தெரிந்திருக்காது. ஆனால், இந்தப் பிரச்னையை இந்தியாவில் பல பெண்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.
அதாவது இடுப்புப் பகுதியில் உள்ள கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை உள்ளிட்ட உறுப்புகள் இயல்பான இடத்திலிருந்து கீழிறங்குவதே, ‘Pelvic organ prolapse’ எனும் இடுப்பு உறுப்பு சரிவு பிரச்னையாகும்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மாதவிடாய் நின்ற 30 சதவீதப் பெண்கள் இந்த உறுப்பு சரிவால், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தானாகவே சிறுநீர் வெளியேறும் பிரச்னையையும் சந்தித்து வருகின்றனர். இது, ‘சிறுநீர் அடங்காமை’ எனப்படுகிறது.   

இந்நிலையில்தான் இதற்கென ஒரு நிரந்தரத் தீர்வை கண்டறிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் காரைக்காலைச் சேர்ந்த மும்பை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ப்ரீத்தி அருள்முருகன்.

அவர் கண்டறிந்துள்ள, ‘பெல்விக் ஃப்ளோர் சப்போர்ட் மெஷஸ்’ என்ற பொருள் தற்போது மருத்துவ உலகில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேசினோம்.  
‘‘சொந்த ஊர் காரைக்கால். அப்பா அருள்முருகன் பொறியாளராக இருக்கார்.

நான் காரைக்காலில் பள்ளிப் படிப்பு முடித்ததும் பாண்டிச்சேரியில் பி.டெக் படித்தேன். பின்னர் அசாம் மாநிலம் கௌகாத்தி ஐஐடியில் எம்.டெக் பண்ணினேன். தொடர்ந்து மும்பை ஐஐடியில் பிஹெச்.டியும், அதற்கு அடுத்த நிலையான பி.டி.எஃப்பும் முடித்தேன். பிஹெச்.டி பண்ணும்போது இந்தியாவில் உள்ள பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. குறிப்பாக, அவர்களின் உடல்நலத்தை காக்கும் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினேன்.

அப்படியாக சிறுநீர் அடங்காமை பிரச்னையால் பாதிக்கப்படும் பெண்கள் என் கவனத்திற்குள் வந்தனர். அங்கிருந்து அவர்களுக்கான என் ஆய்வு பயணமும் தொடங்கியது...’’ என்கிற ப்ரீத்தி, இந்த ஆய்வில் சுமார் ஐந்தாண்டுகள் ஈடுபட்டுள்ளார். ‘‘பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். அப்போது அவர்களின் இடுப்பெலும்பு தசைகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையும். 

அந்நேரம் கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை உள்ளிட்ட உறுப்புகள் கொஞ்சமாகக் கீழிறங்கும். இதனால், சிறுநீரை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

சிலருக்கு அந்த உறுப்பே வெளியே கீழிறங்கிகூட வந்துவிடும். இதுகுறித்த புரிதல் இல்லாத பெண்கள் தயக்கப்பட்டு வெளியே சொல்வதில்லை. ஒருகட்டத்தில் கட்டுப்படுத்தவே முடியாது என்கிற நிலை வரும்போது மருத்துவர்களை நாடுவார்கள்.

மருத்துவர்களும் அறுவை சிகிச்சை வழியே ஒரு மெஷ் அதாவது வலை மாதிரியான ஒரு பொருளை உள்செலுத்தி அதனைக் கொண்டு உறுப்பைத் தூக்கிப் பிடிப்பதுபோல் செய்து உறுப்பைப் பழையபடி அதே இடத்தில் நிறுத்துவார்கள். இதில் பிரச்னையே, உள்ளே செலுத்தப்படும் வலை போன்ற பொருள்தான். ஏனெனில், அந்தப் பொருள் பிளாஸ்டிக் கலந்த சிதைக்க முடியாத பாலிப்ரொப்பிலீன் மெட்டீரியல் ஆகும்.

இதனால், இதுபோன்ற வலையை உடல் ஏற்க மறுத்து எதிர்வினையாற்றும். சிலருக்கு மெஷ் இன்ஃபெக்‌ஷன் ஏற்படும். தவிர, வேறு சில உடல் உபாதைகளையும் கொண்டு வரும்.
ஆக, ஒரு பிரச்னையை தீர்க்கப்போய் வேறு ஒரு பிரச்னையில் சிக்கி பெண்கள் அவதிப்படுவதைப் பார்த்தேன். 

இதனைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே என்னுடைய ஆய்வில் மிகுந்த கவனம் செலுத்தினேன். நிறைவில் நான், டிகிரேடபிள் (Degradable) மெட்டீரியலில் ஒரு வலையைக் கண்டறிந்தேன்.

அதாவது இந்த வலை மென்மையானது. இது ஓராண்டு வரை உடலில் இருக்கும். பிறகு உடலில் இருக்கிற செல்கள் இதன்மேல் அடுக்குகளை உருவாக்கும். பின்னர் பழையபடி உறுப்பைத் தூக்கிப்பிடிப்பதுபோல் மாற்றி பிரச்னையை சரிசெய்துவிடும்.மேலே சொன்னதுபோல் இந்த வலை, டிகிரேடபிள் என்பதால் உள்ளுக்குள்ளே கரைந்து உடலில் கலந்துவிடும். இதனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் வராது...’’ என்கிற ப்ரீத்தி, இதற்கான காப்புரிமையையும் பெற்றுவிட்டார்.

‘‘இதற்காக என் பேராசிரியர் ஜெயேஷ் பெல்லாரேவுக்கும் மும்பை ஐஐடிக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் கண்டுபிடிப்பிற்கு ரொம்பவே உதவி செய்தனர். தற்போது என் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமையும் பெற்றுவிட்டோம்.  

 அந்தக் காப்புரிமையுடன்தான் சமீபத்தில் புதுச்சேரி வந்தபோது முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பேரவைத் தலைவர் செல்வம் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அதுமட்டுமல்ல, எனது ஆராய்ச்சிக்காக மத்திய அரசும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது.

தற்போது இந்த பெல்விஸ் மெஷ்ஷை முதல்கட்டமாக விலங்குகளில் பொருத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளோம். இனி அடுத்த கட்ட கிளினிக்கல் ட்ரையலில் மனிதர்களுக்கு பொருத்தி சோதனை செய்ய இருக்கிறோம். அதுவும் வெற்றிபெறும் பட்சத்தில் இது மருத்துவ பயன்பாட்டுக்கு வரும்.

எதிர்காலத்தில் குடலிறக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு என் கண்டுபிடிப்பான பெல்விக் சப்போர்ட் மெஷ் பயனுள்ள தீர்வாக இருக்கும்...’’ என நம்பிக்கையுடன் புன்னகைக்கும் ப்ரீத்தி, தொடர்ந்து பெண்களின் உடல் பிரச்னைகளை அறிந்து அவர்களின் நலன் காக்கும் கண்டுபிடிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

இது புதுச்சேரி மாணவியின் சாதனை