பெரிய இயக்குநரிடம் பணி புரிந்ததை மறக்க விரும்புகிறேன்!
அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் என அப்பா, மகள் இணைந்து நடிக்கும் படம் ‘அஃகேனம்’. உதய் இயக்கியுள்ளார். குறும்பட இயக்குநரான இவருக்கு இது முதல் படம். இறுதிக் கட்ட வேலையில் பிசியாக இருந்த இயக்குநரிடம் பேசினோம்.
 குறும்பட இயக்குநரான உங்களுக்கு இந்த வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?
கீர்த்திக்காக ஒரு கதை சொல்லியிருந்தேன். அதற்காக சில தயாரிப்பாளர்களை அப்ரோச் பண்ணினேன். ஒரு கட்டத்தில் அப்படியே அருண் பாண்டியன் சாருக்கும் ஸ்கிரிப்ட் சொல்லும் வாய்ப்பு கிடைச்சது. கதை பிடிச்சதால் அவரே தயாரிக்க முன் வந்தார்.
 ‘அஃகேனம்’ எதைப்பற்றி பேசுகிறது?
அஃகேனம் என்பது... முக்கியமான மூன்று கேரக்டர்களைச் சுற்றி நடக்கும் கதை. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத மூவர் ஒரு சம்பவத்தால் இணைகிறார்கள். அதில் யார் ஜெயிக்கிறாங்க என்பதுதான் படத்தோட ஐடியா.
நேர்மறை வேடத்துல வர்ற நாயகி கால் டாக்சி டிரைவர். அவர் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தால் மற்ற இரண்டு கேரக்டர்களுடன் மோதும் சூழல் ஏற்படுகிறது. தனக்கு நேர்ந்த சிக்கலில் நாயகி எப்படி தப்பிச்சு வர்றார் என்பதை பல திருப்பங்களும், யூகங்களுமாக கலந்து சொல்லியுள்ளோம். அருண் பாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்துல நடிக்கிறார்னு கேள்விப்பட்டோமே?
ஆமா. சார் சீனியர் ஆக்டர் என்பதால் இயல்பாகவே ப்ரஷர் இருந்துச்சு. அதே நேரத்தில் அவர் ஓப்பன் மைண்டட் பெர்சனாக தன்னை வெளிப்படுத்தினார்.சீனியர், ஜூனியர் என்று பார்க்காமல் எல்லா ஐடியாக்களையும் விவாதிப்போம்.
இயக்குநரான என்னுடைய ஐடியாவை மட்டுமல்ல, உதவி இயக்குநர்கள் சொல்லும் ஐடியாவையும் பொறுமையாக காது கொடுத்துக் கேட்பார். எந்தவொரு ஐடியாவும் கதைக்கு எவ்வளவு பொருந்திப்போகும் என்பதுதான் எல்லோருடைய நோக்கமாக இருக்கும். அப்படி ஒரு ஃப்ரீடம் எனக்கு கிடைச்சது.
அதே நேரம் சினிமா என்று வரும்போது அதை எப்படி சொல்லப்போகிறோம் என்பது முக்கியம். சினிமாவைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச ஒருவர் தயாரிப்பளராக இருக்கும்போது நம்மையும் அறியாமல் பிரஷர் வந்துவிடும். அவருக்கு சினிமாவைப் பற்றி எல்லாம் தெரியும். லொகேஷன்ல நடக்கும் எல்லாத்தையும் கவனிப்பார்.
எந்த விதத்திலும் தப்பு நடக்கக்கூடாது என்று எல்லாவற்றிலும் கவனமாக இருந்தோம். பணம் அவருடையது என்பதால் வீண் விரயம் பண்ணக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். பணத்தை யூஸ்ஃபுல்லாக செலவழிக்கணும் என்ற அழுத்தத்துடன்தான் வேலை பார்த்தோம்.
ஏனெனில் தயாரிப்பாளராக மட்டுமே இருக்கிறவராக இருந்தால் பணம் இன்வெஸ்ட் பண்ணுவார். டைரக்டர் கிரியேட்டராக படம் எடுப்பார். இது அப்படியல்ல.அருண்பாண்டியன் சாருடைய எல்லா படத்தையும் பார்த்து அவருடைய பலம் எது, பலவீனம் எது என எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சு அவருடைய கேரக்டரை டிசைன் பண்ணினோம். அருண் பாண்டியன் சாருடைய ஏரியா ஆக்ஷன்.
இந்தப் படத்துல கேரக்டருக்கும், அவருடைய வயசுக்கும் செட்டாகிற மாதிரி ஆக்ஷன் பண்ணினால் எப்படியிருக்கும் என்ற ரியாலிட்டியை பார்க்கலாம். இப்போதும், தான் ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபிச்சுள்ளார். படப்பிடிப்பில் அவருடைய எனர்ஜி வேற லெவல். அவருடன் ஓடுவது எங்களுக்கு சவாலாக இருந்தது. அப்பாவைப் பற்றி சொல்லிட்டீங்க. மகள் கீர்த்தி பாண்டியன் எப்படி?
அவருடைய கேரக்டர்... படம் முழுவதும் கார் ஓட்டணும். கதை சொல்லும்போது கார் ஓட்டத் தெரியுமா என்றுதான் முதலில் கேட்டேன். அவர் என்னிடம் ‘ஸ்கூட்டர், பைக் ஓட்ட பழகுவதற்கு முன்பே கார்தான் ஓட்டிப் பழகினேன்’ என்றார். அவர் கான்ஃபிடன்ஸ் கொடுத்ததால் இந்த கேரக்டர் அவருக்கு பொருத்தமாக இருக்கும்னு தோணுச்சு. அதே மாதிரி அவருடைய பெர்ஃபாமன்ஸ் படம் பார்க்கும்போது ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.
சிட்டியில் காரை வெச்சு ஷூட் பண்ணாத இடம் கிடையாது. எல்லாமே பர்மிஷன் வாங்கிதான் எடுத்தோம். ரெகுலர் டிராஃபிக் நெரிசலில் ஷூட்டிங் எடுப்பது கஷ்டம். பெர்ஃபாமன்ஸும் பண்ணணும். அதே சமயம் காரும் ஓட்டணும். அந்தவகையில் அவருக்கு இரண்டு மடங்கு சவால் இருந்துச்சு.
கீர்த்தியைப் பொறுத்தவரை வித்தியாசமான ஆர்ட்டிஸ்ட்னு சொல்லலாம். கேரக்டரை அணுகும் விதம் வித்தியாசமாக இருக்கும். நல்ல பெர்ஃபாமர். டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட். சப்போர்ட்டிவ் பெர்சன்.சீதா, ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், ஆதித்யா ஆகியோர் இருக்காங்க. தங்கள் வேலையை கச்சிதமா, பக்காவா செய்திருக்காங்க. கதைதான் ஹீரோ என்பதால் எல்லோருக்கும் கதையில் முக்கிய பங்களிப்பு இருக்கும். படத்துல என்ன மெசேஜ் சொல்லப்போறீங்க?
ஒருவருடைய வாழ்க்கையை கர்மாதான் தீர்மானிக்கும். ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை யார் மூலமாகவும் வந்து சேரும் என்பது அடிப்படை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரு விஷயத்தை எப்படி தைரியமாக அணுக வேண்டும் என்பதை இதிலிருந்து எடுத்துக்கொள்ளமுடியும்.
அது 60 வயசு பாண்டியன் கேரக்டராக இருந்தாலும் சரி, 30 வயசு இந்திரா என்ற கேரக்டராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் வரும் பிரச்னைகளைப் பார்த்து பயப்படாமல் எதிர்கொண்டு எப்படி ஜெயிக்க வேண்டும் எனும் மன உறுதியை இதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். புது டெக்னீஷியன்களுடன் வேலை செய்த அனுபவம் எப்படி?
என்னுடைய குறும்படத்தில் ஒர்க் பண்ணியவர்கள்தான் படத்திலும் ஒர்க் பண்ணியுள்ளார்கள். டீம் என்பதைக் கடந்து நாங்கள் நண்பர்கள். சினிமாவுக்கு வந்தபிறகும் நட்பு தொடர்ந்துச்சு.
சேர்ந்து படம் பண்ணணும்னு முடிவு பண்ணினோம். பழகியவர்கள் என்பதாலும் எல்லோருடைய மனநிலையும் தெரியும் என்பதாலும் எந்தவொரு விஷயத்தையும் சுமூகமாக பண்ண முடிஞ்சது. தெரிஞ்ச டீம் என்பதால் எனக்கு அது ரொம்ப வசதியாக இருந்துச்சு.
இதெல்லாம் எனக்கான வசதி. இது தயாரிப்பாளருக்கு எவ்வளவு வசதியைக் கொடுக்கும் என்று பார்க்க வேண்டும்.
அருண் பாண்டியன் சார் எங்கள் டீமை அப்படியே ஏற்றுக்கொண்டார். அவர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் டீமாக வந்தவர் என்பதால் புது டீமுடைய பலம், டெடிகேஷன் பற்றி தெரியும். அப்படிதான் சார் எங்களுக்கு சான்ஸ் கொடுத்ததாக நினைக்கிறேன்.
கேமராமேன் விக்னேஷ் கோவிந்தராஜன். எல்லா இடங்களிலும் சேலஞ்ஜ் இருந்துச்சு. விஷுவல் பார்க்கும்போது எப்படி ஷூட் பண்ணினார் என்ற கேள்வி வரும். மியூசிக் பரத் வீரராகவன். சுயாதீன இசையமைப்பாளர். இந்தியில் சில ஆல்பம் பண்ணியவர். இதுதான் முதல் படம். நான்கு பாடல்கள். எல்லாமே கேட்கும் ரகமாக வந்துள்ளன.யார் இந்த உதய்?
சொந்த ஊர் சென்னைக்கு பக்கத் துல உள்ள திருவள்ளூர். ஸ்கூல் முடிச்சதும் சினிமா கனவுடன் சென்னைக்கு வந்தேன். காலேஜ்ல சேர்ந்தாலும் கவனமெல்லாம் சினிமா மீது இருந்துச்சு.
ஒரு பெரிய இயக்குநரிடம் ஒர்க் பண்ணினேன்.
அவர் நடத்திய விதமான்னு தெரியவில்லை... அந்த சூழல் எனக்கு செட் ஆகவில்லை. இரண்டு நாளில் வெளியே வந்துவிட்டேன். இண்டிபெண்டன்ட்டாக சில குறும்படங்கள் எடுத்தேன். படம் பார்த்ததும் நானே அழிச்சுட்டேன். ‘யாக்கை திரி’ குறும்படம் பேசப்பட்டது.
எஸ்.ராஜா
|