92 வயது IRON MAN
உலகில் நடக்கும் ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளில் மிகக் கடினமான ஒரு போட்டியாக கருதப்படுகிறது, அயர்ன் மேன் டிரையத்லான். 3.9 கிலோ மீட்டர் நீச்சல், 180.2 கிலோ மீட்டர் சைக்கிளிங், 42.2 கிலோ மீட்டர் மாரத்தான் என மொத்தமாக 226.3 கிலோ மீட்டர் தூரத்தை நீச்சல், சைக்கிளிங், ஓட்டத்தின் வழியாக கடக்க வேண்டும்.  அதுவும் தொடர்ச்சியாக ஒரு நாளுக்குள் செய்ய வேண்டும் என்பது விதி. பெரும்பாலான போட்டியாளர்கள் பந்தய தூரத்தை 16 முதல் 17 மணி நேரங்களில் கடக்கின்றனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அயர்ன் மேன் டிரையத்லானுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 92 வயதான ஹிரோமு இனாடா கலந்துகொண்டு, அயர்ன் மேன் டிரையத்லானின் பந்தய தூரத்தைக் கடந்த அதிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்.
இத்தனைக்கும் கடுமையான வெப்பச் சூழலில் நீச்சல் அடித்து, சைக்கிள் ஓட்டி, ஓடி 226.3 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருக்கிறார் ஹிரோமு. ஜப்பானில் பிறந்து, வளர்ந்த ஹிரோமு, அதிகாலையில் எழுந்து நீச்சல், சைக்கிளிங், ரன்னிங் பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு வருடம் தொடர்ந்து பயிற்சி செய்த பிறகே அயர்ன் மேன் டிரையத்லானில் கலந்துகொண்டார். இதற்கு முன்பு ஜப்பானில் நடந்த ஏராளமான மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகளை அள்ளியிருக்கிறார்.
அயர்ன் மேன் டிரையத்லான் போட்டியைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, எப்படியாவது போட்டியில் கலந்துகொண்டு, பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும் என்பது அவரது இலக்காக மாறிவிட்டது. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியின் பந்தய தூரத்தை 19 மணி நேரத்தில் கடந்திருக்கிறார் ஹிரோமு.
பொதுவாக அயர்மேன் டிரையத்லானில் கலந்துகொள்கிறவர்களில் 80 சதவீதம் பேர் பந்தய தூரத்தை முழுமையாக கடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் 92 வயதில் ஹிரோமு பந்தய தூரத்தைக் கடந்ததே மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
‘‘ஓய்வு பெற்ற பிறகும், வயதான பிறகும் கூட உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றக்கூடிய செயல்களைச் செய்யுங்கள்..’’ என்கிற ஹிரோமு, அடுத்த வருடமும் அயர்ன் மேன் டிரையத்லானில் கலந்துகொள்ளப் போவதாக உற்சாகமாகத் தெரிவித்திருக்கிறார்.
த.சக்திவேல்
|