பிரபல நடிகர்கள்தான் சோஷியல் மீடியாவில் ஆள் வைத்து தங்களுக்கு வேண்டாத ஆக்டர்ஸ் குறித்து நெகடிவ் கமெண்ட் போட வைக்கிறார்களா?
மனம் திறக்கிறார் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன், பிசினஸ்மேன் என எந்த கேரக்டர் செய்தாலும் இவருடைய நடிப்பு தனித்துவமானது. நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்தில் கால் செஞ்சுரியைக் கடந்து பிசி நடிகராக கோலிவுட்டில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துள்ளார்.  இப்போது ‘மார்கன்’ ரிலீஸ். சமுத்திரக்கனி, அஜய் திஷான், பிரிகிடா தீப்ஷிகா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை பிரபல எடிட்டர் லியோ ஜான்பால் இயக்கியுள்ளார். ப்ரொமோஷன், படப்பிடிப்பு என பிசி ஷெட்யூலில் இருந்த விஜய் ஆண்டனியிடம் பேசினோம்.  ‘மார்கன்’ அனுபவம் எப்படி இருந்துச்சு?
மும்பை போலீஸ் ஆபீசர் கேரக்டர். ஒரு கொலை நடக்கிறது. கொலையாளியை கண்டுபிடிக்கணும். க்ளைமாக்ஸ் வரை கொலையாளி யார்னு தெரியாது. நிறைய திருப்பங்கள் நிறைந்த கதை. ஏராளமான படங்கள் செய்திருந்தாலும் முற்றிலும் புது அனுபவமாக இருந்துச்சு.
படத்தில் கடினமான காட்சி இருந்ததா? அதற்கு எப்படி தயாரானீங்க?
ஒரு படத்தைப் பொறுத்தவரை எல்லா கன்ட்ரோலும் டைரக்டர் கையில்தான் உள்ளது. எந்த ஆர்ட்டிஸ்டும் டஃப்பா இருந்துச்சுன்னு சொல்ல முடியாது. டைரக்டர் அதற்கான தளம் அமைத்துக் கொடுக்கும்விதமாக லொகேஷன், காஸ்டியூம்ஸ், கேரக்டருடைய தன்மை என எல்லாத்தையும் செட் பண்ணி வெச்சிருப்பாங்க.
அதன் பிறகுதான் ஆர்ட்டிஸ்ட்டை கேமரா முன்னாடி நிற்க வைப்பாங்க. ஸ்பாட்ல ஆர்ட்டிஸ்ட் சரியா பெர்ஃபாமன்ஸ் பண்ணவில்லை என்றாலும் கதை வலுவாக இருக்கும்போது படம் பேசப்படும்.
அப்படி இயக்குநர் லியோ ஜான்பால் இதுல எனக்கு எல்லாவற்றையும் சரியாக அமைச்சுக் கொடுத்தார். கதையும் வலுவாக இருந்துச்சு. அவர் சொன்னதை உள்வாங்கி பண்ணியிருக்கிறேன்.
எல்லாவற்றையும் எளிதாக அணுக முடிஞ்சது. கேரக்டர் எளிதாக இருக்கணும் என்பது என் நோக்கம் கிடையாது. டைரக்டர் ஸ்ட்ராங்காக இருக்கும்போது ஆர்ட்டிஸ்ட்டுக்கு டென்ஷன் இருக்காது.
நீங்களே தயாரிப்பாளர் என்பதை எந்தளவுக்கு சாதகமாகப் பார்க்கிறீங்க?
டைரக்டருக்கான வசதிகளை உடனுக்குடன் செய்து தரமுடிகிறது. ஒரு போன் வந்தாலே ஆர்ட்டிஸ்ட், மியூசிக் என ஒவ்வொரு துறைக்கான முடிவுகளையும் உடனடியாக எடுக்க முடிகிறது. நானே டெக்னீஷியனாக இருப்பதால் புதுப்புது இயக்குநர்கள் மீது நம்பிக்கை வெச்சு வாய்ப்பு தரமுடிகிறது.
தயாரிப்பாளரைக் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று யாருடைய பதிலுக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கதை கேட்டு முடிச்சதும் முடிவு எடுக்க முடிகிறது.கடன் வாங்கி கஷ்டப்பட்டுதான் படம் எடுக்கிறேன்.
அதை கஷ்டமாகச் சொல்ல முடியாது. ரிலீஸ் நேரத்தில் தேதி அறிவுப்பு, வியாபாரம், அக்ரிமெண்ட் போன்றவைதான் கஷ்டங்களாகத் தெரியும். என் மீதான நம்பகத்தன்மை வந்தபிறகு அதுவும் ஈசியாகிவிடும். ‘சக்தி திருமகன்’ உங்களுடைய 25வது படம். இப்போது உங்களை தொழில்முறை நடிகர் என்று சொல்லலாமா?
சொல்ல முடியாது. வேண்டும் என்றால் நல்ல கதைகளை தேர்வு செய்யக்கூடிய ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லலாம். தொழில் முறை நடிகர் என்று சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கு.
இப்போது ‘லாயர்’ ஷூட்டிங்ல இருக்கிறேன்.
ரவீணா டான்டன் முக்கியமான ரோல் செய்கிறார். அவருடைய பெர்ஃபாமன்ஸ் ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு. ‘சக்தித் திருமகன்’ல ஹீரோயின் திருப்தி ரவீந்த்ராவின் பெர்ஃபாமன்ஸ் பிரமிப்பை கொடுத்துச்சு. அவர்களுடன் சேர்த்து என்னை தொழில்முறை நடிகன்னு சொல்லமாட்டேன். நான் எப்படியென்றால், திறமையானவர்களை ஒன்று சேர்க்கிறேன். அதேசமயம் ஏற்கக்கூடிய அளவுக்கு நியாயமான நடிப்பைக் கொடுக்கிறேன். அந்த இடத்தில்தான் நான் இருக்கிறேன். என்னை தொழில்முறை நடிகர் என்று சொல்லமாட்டேன்.
நீங்கள் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. சினிமா உங்களை திருப்தியடைந்தவராக மாற்றியுள்ளதா?
நான், பிச்சை எடுத்தாலும் சந்தோஷமாகத்தான் இருப்பேன். சினிமாதான் எனக்கு சந்தோஷம் கொடுக்கணும், ஆஸ்கர் விருதுதான் குறிக்கோள் என்று எந்த லட்சியத்தையும் நான் செட் பண்ணிக்கவில்லை. அந்தந்த நாளுக்கு உண்மையாக இருக்கிறேன்.திருப்தி என்பது ஒவ்வொரு நொடியிலும் இருக்கிறது.
நீங்க ஒரு வேலையை சின்சியராக செய்வீங்க. நாலுபேர் ஒத்துக்கமாட்டாங்க. அதுக்காக நீங்க தப்பானவராக இருக்க முடியுமா? உங்க வேலையை சரியாதான் பண்ணியிருப்பீங்க. நான் என்னுடைய லெவலுக்கு சரியாகப் பண்ண டிரை பண்ணுகிறேன். தவறுகள் இருக்கலாம். ஆனால் குழப்பிக் கொள்ளமாட்டேன். இசையமைக்கும் வேலையை விட்டுவிட்டு முழு கவனத்தையும் நடிப்பு பக்கமாக ஏன் திருப்புனீங்க என்ற நிகழ்வு ஞாபகம் இருக்கிறதா?
என்னுடைய கரியர் ஆரம்பத்திலேயே நல்ல, நல்ல படங்களுக்கு மியூசிக் பண்ணினேன். ஆனால், எனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற மனஅழுத்தம் இருந்துச்சு.
‘சுக்ரன்’, ‘டிஷ்யம்’, ‘காதலில் வீழ்ந்தேன்’ என எல்லா படங்களிலும் பாடல்கள் ஹிட்டாச்சு. அந்த நிலையில் எதுவுமே சரியாக அமையவில்லை.
அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சு, நல்ல கதை தேர்வு பண்ணி நடிக்கலாம்னு நினைக்கும்போதுதான் ‘வேட்டைக்காரன்’ பட வாய்ப்பு வந்துச்சு. ஆனால், அதற்கு முன்பே நடிக்கணும்னு முடிவு பண்ணி இருந்தேன். அதுவும் எப்படி? அடுத்த ரெண்டு வருஷத்துல நான் உயிருடன் இருந்தால் ஆக்டராக இருப்பேன்னு அதீத நம்பிக்கையில் ஒருவரிடம் சொல்லியிருந்தேன். அதை நிறைவேற்றவே நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுச்சு. நடிக்க வந்த பிறகு மியூசிக்கையும் சேர்த்து கவனிக்க விரும்பவில்லை. ஏனெனில், சொந்தப் பணம் போட்டு படம் எடுக்கிறோம். சினிமா முழுமையாகத் தெரியாது. முழு கவனம் இருந்தால் நடிக்க முடியும் என்பதால் மியூசிக்கை விட்டுவிட்டு நடிக்க வந்தேன்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம், நடிகர் விஜய் ஆண்டனிக்கு கேள்விகள் இருக்கிறதா?
அப்படிப் பார்க்கவில்லை. எல்லோரும்போல்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நடைமுறை வாழ்க்கையில் எப்படி ஒருவர் ஒரு வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலைக்குப் போகிறார்களோ அப்படிதான் நானும் இருக்கிறேன். ஆக்டிங்கையும் பிரமிப்பாகப் பார்க்க ஆரம்பிக்கவில்லை.
நான் செய்ய வேண்டிய வேலை எதுவோ அதைச் செய்கிறேன். ஒரு பெண் அம்மாவாகவும், மனைவியாகவும் பொறுப்பு வகிக்கிறார். அதை மோதலாகப் பார்க்கமாட்டோம். நீங்க கேட்டதற்கு பதில் சொல்வதாக இருந்தால் மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனி, நடிகர் விஜய் ஆண்டனியிடம் ‘தப்பிச்சுட்டே... உன்னுடைய ஒர்க் கொஞ்சம் ஈசி’ன்னு சொல்லலாம். அந்த வகையில் மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனி, நடிகர் விஜய் ஆண்டனியைப் பாராட்டலாம். சினிமாவில் உங்கள் நட்பு வட்டாரங்கள் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதா?
நான் ஹேப்பியாக இருக்கிறேன். என் வேலைகளை முடிந்தளவுக்கு லேப் டாப்ல சுருக்கிக் கொள்கிறேன். என்னைச்சுற்றி பல நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் பல வருடங்களாக இருக்கிறார்கள். பிரிட்டிஷார் இந்தியாவைப் பிடிக்க வரும்போது குடும்பத்தைப் பிரிந்து பல வருட கப்பல் பயணத்துக்குப் பிறகுதான் இங்கு வரமுடிஞ்சது.
கஜினி முகமது 7 தடவை படை எடுத்தார்ன்னு சொல்றோம். அவர் 7 முறையும் காட்டில்தான் இருந்திருப்பார். ராஜாவாக எங்கு இருந்திருப்பார்ன்னு தெரியலை. நம் வாழ்க்கை அப்படியல்ல. இப்போது நினைத்த நேரத்தில், இருந்த இடத்திலிருந்து ஒருவரை தொடர்பு கொள்ள முடிகிறது. வீடியோ காலில் முகம் பார்த்து பேசுகிறோம். சமீப காலமாக சோஷியல் மீடியா ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை மிகையாகவும் அல்லது திட்டமிட்டு படம் சரி இல்லை என்றும் பரப்புரை செய்வதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் தொழில் போட்டி காரணமாக பிரபல நடிகர்களே அந்த வேலையை செய்வதாக சொல்லப்படுகிறதே?
ஒரு நடிகருக்கு எதிராக இன்னொரு நடிகர் அப்படி பண்ணமாட்டாங்க. அப்படி பண்ணினால் அது கேவலமான விஷயம். முதலில் மனசாட்சி இடம் கொடுக்காது. அந்த விஷயத்தை தனியாகப் பண்ண முடியாது. டீம் வெச்சு பண்ணணும். அப்படி அந்த டீமிடம் சொல்லும்போது அந்த நடிகருக்கு அது அவமானமாக இருக்கும். எனக்குத் தெரிஞ்சு அதற்கு வாய்ப்பு இல்லை. ‘பிச்சைக்காரன் 1’க்கு அப்படி நடந்துச்சு. ஒவ்வொரு படத்துக்கும் நெகடிவ் கமெண்ட் போட பத்து பேர் கிளம்பி வருவாங்க.
இந்த நேரத்தில், வைரமுத்து சார் எழுதிய பாடல் ஞாபகத்துக்கு வருகிறது. ‘வாழ்க்கையே போர்க்களம். வாழ்ந்துதான் பார்க்கணும்’ என்று எழுதியிருப்பார். இப்போது நாகரீக உலகில் வாழ்கிறோம். சமூகக் கட்டமைப்புல நியாயம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அநியாயமும் நடக்கத்தான் செய்கிறது.எல்லாருமே நல்லா இருந்தால் போலீஸ், கோர்ட், பாஸ்போர்ட், அரசாங்கம் என எதுவுமே தேவையில்லை.
மனுஷங்களுக்கு மனுஷங்கள்தான் பிரச்னை. தப்பான விஷயம் பேசுகிறவங்க, எழுதுகிறவங்க இருந்தால் அது கண்டிப்பாக அவர்களையே பாதிக்கும். பாதிக்கப்படக்கூடியவர் நாமாக இருக்கமாட்டோம். தப்பா யோசிக்கிறவனுக்குதான் பாதிப்பு அதிகம். அவன் சிந்தனை வேறுபடும். உடல்நிலை பாதிக்கப்படும். குடும்பம் பாதிக்கப்படும். அவன் நிம்மதியாக இருக்கமாட்டான்.
எஸ்.ராஜா
|