குறும்படத்திற்காக ஜெர்மனி சென்ற அரசுப் பள்ளி மாணவர்!
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை முன்னெடுத்து வரும் சிறந்த திட்டங்களில் ஒன்று, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு சிறார் திரைப்படங்களைத் திரையிடுதல்.

அதாவது மாணவர்கள் வாழும் சூழலைப் புரிந்து கொள்ளவும், பல்வேறு கலாசாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளவும், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணவும், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணரச் செய்தலும் இத்திரையிடுதலின் முக்கிய நோக்கம்.  இதில் மாநில அளவில் தேர்வாகும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்படியாக திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் லோக ராஜேஷ், தன் பள்ளி சக மாணவ நண்பர்களுடன் இணைந்து செல்போனால் ஏற்படும் தீங்கு குறித்து எடுத்த குறும்படம் மாநில போட்டிக்குத் தேர்வானது.  இதற்காக சென்னை வந்தவருக்கு இங்கே ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதில் எடிட்டிங்கில் லோக ராஜேஷ் ஜொலிக்க, ஜெர்மனி செல்லும் 22 பேர் குழுவில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஜெர்மனி சென்று திரும்பியுள்ளார்.
இது மற்ற மாணவர்களுக்கு பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே கருப்பகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த லோக ராஜேஷிடம் பேசினோம். ‘‘இப்ப நான் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறேன்.
கருப்ப கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்ப எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறார் திரைப்படங்கள் போட்டுக் காட்டுவாங்க. படங்கள் முடிஞ்சதும் கேள்விகள் கேட்பாங்க. அப்போ குறும்பட போட்டிகள் இருக்குதுனு சொன்னாங்க. அதனால், நானும் என் சக பள்ளி மாணவ -மாணவிகளும் ‘நிலா’னு ஒரு குறும்படம் பண்ணினோம். இதில் என் பள்ளி நண்பர்கள் அனைவரும் நடிச்சோம். அது மாவட்ட அளவில் தேர்வாச்சு.
அடுத்ததாக எங்களுக்குத் தனியாக தலைப்பு எடுத்து பண்ணலாம்னு சொன்னாங்க. பிறகு நாங்க எல்லோரும் டிஸ்கஸ் பண்ணி, ‘செல்போன் என்னும் அரக்கன்’ என்ற தலைப்புல குறும்படம் பண்ணினோம்.செல்போனால் விளையும் தீங்குகள் பத்தின கான்செப்ட் இது.
இதை ஆறு மாணவர்கள், நான்கு மாணவிகள்னு மொத்தம் பத்து பேர் சேர்ந்து செய்தோம். நான் படத்தை இயக்கினேன். மற்றவங்க நடிச்சாங்க...’’ என உற்சாகமாகச் சொல்லும் லோக ராஜேஷ், இந்தக் குறும்படத்தை செல்போன் மூலமே எடுத்துள்ளார்.
‘‘எனக்கு குமார் தங்கவேலுனு மாமா இருக்கார். அவர்தான் குறும்படம் எப்படி எடுக்கணும்னு எல்லாம் சொல்லித் தந்தார். இதை நாங்க ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது செய்தோம். இந்தக் குறும்படம் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாச்சு.
பரவலான கவனமும் பெற்றது. இதனால் நான் சென்னைக்குப் போனேன். அங்கே மற்ற பள்ளி மாணவ - மாணவிகளும் வந்திருந்தாங்க. எங்களுக்கு, ‘நூலகத்தில் ஒருநாள்’னு ஒரு கான்செப்ட் கொடுத்தாங்க. அந்தத் தலைப்புக்கு ஏற்றமாதிரி படம் எடுக்கணும்னு சொன்னாங்க.
இதுல என்னை எடிட்டிங் பிரிவில் போட்டாங்க. நான் எடிட்டிங் பண்ணினேன். இதுக்கு பெஸ்ட் எடிட்டர் விருது கொடுத்தாங்க. அப்படியாக எனக்கு ஜெர்மனி செல்கிற வாய்ப்பு அமைஞ்சது. முதல்முறையாக விமானத்தில் பறந்தேன்.
என் அப்பா கிருஷ்ணன் ஆட்டோ டிரைவராக இருக்காங்க. அம்மா அலுமேலுமங்கை ஹவுஸ்வொஃய்ப். ஒரு தங்கை படிக்கிறாள். எல்லோருக்கும் நான் ஜெர்மனி போனது ரொம்ப சந்தோஷம்.ஜெர்மனியில் நான்கு நாட்கள் இருந்தோம்.
அங்க மூனிச் நகரில் உள்ள பி.எம்.டபிள்யு கார் கம்பெனிக்கு அழைச்சிட்டுப் போனாங்க. பிறகு அறிவியல் ஆய்வகம், அறிவியல் பல்கலைக்கழக அருங்காட்சியகம் எல்லாம் காட்டினாங்க.
தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள், ஆட்டோமெட்டிக் ரோபோஸ் எப்படி இயங்குதுனு எல்லாம் சொன்னாங்க. அப்போ கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார் வந்திருந்தாங்க. பிறகு அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு பஸ்ல அழைச்சிட்டுப் போனாங்க. அதுவும் ரொம்ப அருமையாக இருந்தது. இதுக்கிடையில் சினிமா ஃபீல்டு சம்பந்தமாக நிறைய பேசினாங்க. இப்படியொரு ட்ரிப் நான் எதிர்பார்க்கல...’’ என அத்தனை சந்தோஷமாகவும் நெகிழ்வாகவும் சொல்கிறார் மாணவர் லோக ராஜேஷ். தொடர்ந்து கருப்பகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் பேசினோம். ‘‘மாணவர்களின் கிரியேட்டிவிட்டியை மேம்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்த சிறார் திரைப்பட நிகழ்வை பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக முன்னெடுத்து வர்றாங்க.
இதில் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு தந்தாங்க. எங்க பள்ளியில் கணித ஆசிரியர் கணேஷ்குமார் சார், நான், அப்போது தலைமையாசிரியராக இருந்த நந்தகோபாலன் சார் எல்லோரும் இதற்காக மாணவர்களுக்கு உதவினோம்.
அத்துடன் குமார் தங்கவேல்னு பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக இருக்கார். அவருக்குக் குறும்படம் எடுப்பதில் நிறைய அனுபவம் உண்டு. இப்பவும் எடுத்திட்டு இருக்கார். பள்ளி ஆசிரியர்கள் என்ற முறையில் நாங்க அவரை அழைச்சோம்.
அவர்தான் எப்படி எடுக்கணும், எப்படி எடிட்டிங் செய்யணும்னு எல்லாம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அதனை மாணவ - மாணவிகள் புரிஞ்சுக்கிட்டு ஒரு குழுவாக இருந்து சிறப்பாக செயல்பட்டாங்க.
இதில் மாணவர் லோக ராஜேஷிற்கு ஜெர்மனி போகும் வாய்ப்பு கிடைச்சது.தொடர்ந்து வரும்காலங்களிலும் மாணவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட ஆசிரியர்களாலான நாங்கள் எங்கள் பணிகளைச் செய்வோம்...’’ என்றார் ஆசிரியர் வாஞ்சிநாதன்.
பி.கே.
|