லேடி ஜேம்ஸ்பாண்ட்!
இங்கிலாந்தின் முதல் பெண் புலனாய்வுத்துறை தலைவர் இவர்தான்...
சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இங்கிலாந்தின் இரகசிய புலனாய்வுத் துறையான, எம்16-ன் தலைமைப் பொறுப்புக்கு பிளேஸ் மேட்ரெவேலி என்ற பெண் வரப்போகிறார் என்பதுதான் பிரதமரின் அறிவிப்பு.  எம்16-ன் 116 வருட வரலாற்றில் ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வருவது இதுவே முதல்முறை. அதனால் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டார், பிளேஸ். அவர் எப்படி புலனாய்வுத்துறையை வழிநடத்தப் போகிறார் என்று இப்போதே விவாதங்களும் கிளம்பிவிட்டன. 
இங்கிலாந்துக்கு எதிரி நாடுகளால் ஏதாவது ஆபத்துகள் இருக்கிறதா என்பதை உளவு பார்த்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது, எம்16. அவசர காலங்களில் பிரமதருக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் இருக்கிறது இந்தத் துறை.
வெளிநாடுகளில் சேகரிக்கும் உளவு விஷயங்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்புவது இத்துறையின் முக்கியமான பணி. மட்டுமல்ல, சைபர் மற்றும் தீவிரவாத தாக்குதல் உட்பட நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் அனைத்து விஷயங்களையும் தடுப்பது இதன் இலக்கு. யார் இந்த பிளேஸ் மேட்ரெவேலி?
பிளேஸ் ஃபளாரன்ஸ் மேட்ரெவேலி, 1977ல் பிறந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவர். பிளேஸின் தந்தை ஹாங்காங்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்ததால், பிளேஸின் குழந்தைப்பருவத்தின் ஒரு பகுதி ஹாங்காங்கில்தான் கழிந்தது.
படிப்பில் திறமையுடன் இருந்த பிளேஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பட்டம் பெற்றார். சிறு வயதிலிருந்தே பிளேஸுக்குப் புலனாய்வுத் துறையின் மீது பெருங்காதல்.
ஆனால், பெண்கள் அதிகமாக பங்குபெறாத துறை இது. இருந்தாலும் புலனாய்வுத்துறையில் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட ஆரம்பித்தார் பிளேஸ்.
கடந்த 1999ம் வருடம் எம்16-ல் இணைந்தார். சில வருடங்கள் ரகசியமான புலனாய்வுத்துறை அதிகாரியாக மட்டுமே இயங்கி வந்தார். அவர் என்ன வேலை செய்கிறார் என்பது அவரது குடும்பத்துக்குக் கூட தெரியாது.
மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்தான புலனாய்வுதான் அவரது முக்கியப் பணியாக இருந்தது.
ரஷ்யாவின் சைபர் தாக்குதல், சீனாவின் பயோ மெட்ரிக் கண்காணிப்பை எல்லாம் கண்டறிந்து, இங்கிலாந்தின் வெளியுறவுத்துறையை உஷாராக்கினார். பிளேஸின் செயல்பாடு எம்16-ன் உயரதிகாரிகளைப் பிரமிக்க வைத்தது.
ஆங்கிலம் போல அரபு மொழியிலும் சரளமாகப் பேசக்கூடியவர் பிளேஸ். 26 வருடங்கள் புலனாய்வுத் துறையில் இருந்திருந்தாலும், ஒரே ஒருமுறைதான் ‘த டெலிகிராப்’ நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். அதுவும் ‘டைரக்டர் கே’ என்ற குறிப்புப் பெயரில். ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ என்று இங்கிலாந்து பத்திரிகைகளால் புகழப்படும் பிளேஸ், இப்போது எம்16-ன் தொழில்நுட்பம் மற்றும் இன்னொவேஷன் துறையின் இயக்குனராக இருக்கிறார்.
இப்போது எம்16-ன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சர் ரிச்சர்ட் மூர் ஓய்வு பெறுவதையொட்டி, வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து பதவியை ஏற்று, இங்கிலாந்தின் ரகசிய புலனாய்வுத் துறையை வழிநடத்தவிருக்கிறார் பிளேஸ். இனிமேல் அவரை ‘C’ என்று அழைப்பார்கள்.
எம்16-ன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை ‘C’ என்று அழைப்பது வழக்கம். எம்16-ன் முதல் தலைவராக இருந்த கேப்டன் சர் மேன்ஸ்ஃபீல்ட் ஸ்மித் கம்மிங் என்பவர் ‘C’ என்று கையொப்பம் இடுவது வழக்கம்.
அவரைப் போற்றும் விதமாக அந்தப் பதவிக்கு வருபவர்களை ‘C’ என்று அழைக்கின்றனர். இந்த ‘C’ மட்டுமே யார் என்பது வெளி உலகுக்கு வெளிப்படையாகத் தெரியும். இவருக்குக் கீழே பணிபுரிபவர்களைப் பற்றிய எந்த விவரமும் வெளி உலகுக்குத் தெரியாது.
த.சக்திவேல்
|