இந்தியாவிலேயே மிகப்பெரிய ஹாரர் செட் இதுதான்!



பிரபாஸ் நடிக்கும் த ராஜா சாப் படத்தின் Exclusive ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்டப்!

ஹைதராபாத் அசிஸ் நகரில் அமைக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் நம்மை பிரம்மாண்டமாக வரவேற்கிறது. பல ஏக்கர் நிலத்தில் படப்பிடிப்புக்காகவே உருவாக்கப்பட்ட சிறிய நகரம் அது.

சிறிய காலனி, தெருக்கள், கோயில், பள்ளிக்கூடம் , பஞ்சாயத்து கூடுமிடம், ஒயின்ஷாப்... என அத்தனை செட்டுகளும் அங்கே போடப்பட்டு படப்பிடிப்புக்காக தயார் நிலையில் உள்ளன.
இதற்கிடையில் கம்பீரமாகவும், கதி கலங்கச் செய்யும் பங்களாவாகவும் நிமிர்ந்து நிற்கிறது ‘த ராஜா சாப்’ படத்தின் ஹாரர் பங்களா. தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வ பிரசாத்துக்கு சொந்தமான படப்பிடிப்புத் தளம் இது.

‘‘இந்தியாவில் இதுவரை போடப்பட்ட ஹாரர் திரைப்படங்களுக்கான ஷூட்டிங் ஸ்பாட்டில் இதுதான் மிகப்பெரியது...’’ பெருமையாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் டி.ஜி.விஸ்வ
பிரசாத்.உள்ளே நுழைந்ததும் பெரிய வரவேற்பு நுழைவாயில், அதைக் கடந்தால் வரவேற்பறை, அங்கே இருந்து மேலே செல்லும் பிரம்மாண்ட படிக்கட்டுகள், அதன் நடுவில் சுமார் இரண்டு ஆள் உயர சஞ்சய் தத் கம்பீரத் தோரணையுடன் ராஜாவாக நிற்கும் புகைப்படம்.

வேர்களும் முடிச்சுகளுமாக, ஒரு காடு மொத்த பங்களாவையும் சுற்றி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வடிவமைப்பு. ஒளிரும் அலங்கார விளக்குகள், சிவப்பு நிற திரைச்சீலைகள்.அவ்வளவு விளக்குகள் சுற்றி ஒளிர்ந்தாலும் மொத்த பங்களாவும் இருள் சூழ்ந்து திக்கென உணர்வு கொடுக்கும்.  பார்த்தாலே பயம் கொள்ளச் செய்யும் சிலைகள் ஒரு பக்கம் எனில் படிக்கவா, பயப்படவா ரக நூலகம் மறுபக்கம், அரை இருட்டில் சிறிய மேசை விளக்கில் உயிர் பெற்றிருந்தது.

அந்தப் படிக்கும் அறை முழுக்க புத்தகங்கள். அதன் ஓர் ஓரத்தில் வயதான கெட்டப்பில் சஞ்சய் தத் மர்மப் புன்னகையுடன் சிரிக்கும் புகைப்படம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய அமைப்பில் சமையலறை, அதற்கு எதிரே பலி கொடுக்கும் கிணற்றுடன் கூடிய பூஜை அறை.‘‘இதுதான் படுக்கை அறை. இங்கேதான் டீசரில் பிரபாஸ் ஓடி வந்து மறைந்து கொள்வார்...’’ என இயக்குநர் மாருதி காட்டிய அறையில் கப்போர்டு கூட மிரட்டும் பெரிய டிராகன் தலையுடன் காட்சி கொடுக்கிறது.

பொதுவாக சினிமா காட்சிக்கான பங்களாக்கள் எனில் பகுதி பகுதியாக செட் போடுவதுதான் வழக்கம். ஒரு பக்கம் வரவேற்பறை எனில் இன்னொரு பக்கம் படுக்கையறை, சமையலறை... என தனித்தனியாக போட்டால் மட்டுமே பட்ஜெட்டுக்கு கட்டுப் படியாகும்.‘‘பான் இந்தியா கமர்ஷியல் நாயகன் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் இருக்கும்பொழுது என்ன கவலை! அவருடைய மார்க்கெட்டை நம்பி எவ்வளவு பணத்தையும் கொட்டலாம்.

இந்த பங்களாவுக்கு மட்டும் மூன்று விதமான செட்டு போட்டிருக்கோம். ஒன்னு இப்போ நீங்க இங்கே பார்க்கறது, இன்னொன்னு ஹைதராபாத்தில் இன்னொரு முனையில் இதே பங்களா அப்படியே தலைகீழாக திருப்பிப் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு செட்டும் அமைச்சிருக்கோம். 

அது ஒரு ஸ்டண்ட் காட்சிக்காக உருவாக்கப்பட்டது. டீசரில் மூன்று நாயகிகளும் அதன் கூரையில் நின்று பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அதேபோல் இங்கே இருக்கும் செட் பங்களாவின் உள்கட்டமைப்பு, இதற்கான வெளிப்புற முகப்பு மற்றும் முழு கட்டடத்தின் அமைப்பு ஹைதராபாத்தில் அலுமினியம் ஃபேக்டரி பகுதியில் அமைச்சிருக்கோம்...’’ டி.ஜி.விஸ்வ பிரசாத் முடிக்க தொடர்ந்தார் இயக்குநர் மாருதி.

‘‘நம்ம டார்லிங் பிரபாஸ்கிட்ட ஒரு காமெடி சென்ஸ் இருக்கும். அவருடைய பழைய படங்களில் கூட துறுதுறுன்னு இருப்பார். சமீப காலமா அவருடைய படங்கள் எல்லாமே ரொம்ப சீரியஸாகவே வந்துட்டிருக்கு. அந்த பிரபாஸ் திரும்ப வேணும்னு நினைச்சேன். அதனால் என்னதான் ஹாரரா இருந்தாலும் அதைத் தாண்டிய காமெடி, கலகலப்பு இந்தப் படத்தில் இருக்கும்...’’ என்ற மாருதி, ‘என்ன கதை’ என்றதும் பதறினார்.‘‘ஆத்தி... படம் டிசம்பர் மாதம்தான் ரிலீஸ்.

அப்போ கேளுங்க, முழுக் கதை மட்டுமில்ல, யார் யார் என்னென்ன கேரக்டர்னும் சொல்றேன். இந்த செட் அமைக்க மட்டுமே எங்களுக்கு நான்கு மாதங்கள் ஆனது. இதில் இதேபோல இன்னொரு ரிவர்ஸ் செட், முன்பக்க பங்களா அமைப்பு இப்படி நிறைய மெனக்கெட்டிருக்கோம். எல்லா கிரெடிட்டும் ஆர்ட் டைரக்டர் சிக்கா பிஷ்த்துக்குதான். அதேபோல் எங்கேயும் செலவு அதிகமா இருக்குன்னு விஸ்வ பிரசாத் சார் சொல்லவே இல்லை...’’ சொல்லும்போதே முகம் மலர்கிறார் இயக்குநர் மாருதி.

‘‘எப்பவும் ஒரு செட் போட்டுட்டு அப்படியே பிரிச்சிடுவோம். ஆனால், ‘இந்த செட் உள்ளே இருக்கும் உள்கட்டமைப்பை மட்டும் மாத்திட்டு அப்படியே விட்டுடுங்க... மற்ற படங்களுக்கு தேவைப்படும்போது பயன்படுத்திக்கலாம்’ என விஸ்வா சார் சொல்லிட்டார். 

ஒவ்வொரு செட்டையும் போட்டுட்டு பிரிக்கும்போது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும். ஆனால், இந்த செட் ஸ்பெஷல். இந்தியாவிலேயே இது வரை ஹாரர் படத்துக்கு இவ்வளவு பெரிய ஹான்டட் பேலஸ் செட் போட்டதில்லை. ராஜாக்கள் பயோகிராஃபிக்குதான் இவ்வளவு பெரிய அரண்மனை எல்லாம் செட் போடுவோம்.

அதுவும் மொத்த பங்களாவிலும் நடிகர்கள் நடந்து நடிக்க முடியாது. ஆனால், இந்த பங்களாவில் நீங்க எங்கே வேண்டுமானாலும் தைரியமா நடந்து மேலே ஏறிப் போகலாம். உண்மையான கட்டடத்துக்கு பயன்படுத்தும் டைல்ஸ், சிமெண்ட் இதையெல்லாம் பயன்படுத்திதான் பேஸ் அமைச்சிருக்கோம்...’’ வேர்கள் சுற்றிய தூண்களை தடவிப் பார்த்தபடியே சொல்கிறார் ஆர்ட் டைரக்டர் ஷிக்கா பிஷ்த். இவர் இந்தியில் வெளியான ஹாரர் திரைப்படமான ‘முன்ஜா’, ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களுக்கு ஆர்ட் டைரக்‌ஷன் பணி செய்தவர்.

டீஸர் ஐந்து மொழிகளில் வெளியாகி பல மில்லியன் கடந்து டிரெண்டாகி வருகிறது. பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் டிசம்பர் மாதம் பான் இந்தியா சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படமாக வெளியாக இருக்கிறது இந்த ‘த ராஜா சாப்’.

ஷாலினி நியூட்டன்