இது சினிமா தியேட்டர்... உன் இஷ்டத்துக்கு வந்து போக வீடு இல்ல..!



கொட்டு வைக்கும் பிரபல சினிமா கலைஞர்கள்!

மார்ட்டின் ஸ்கார்சிஸ்... அமெரிக்க திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் புதிய ஹாலிவுட் திரை வரலாற்றாசிரியர். ஹாலிவுட்டின் பல திரைப்படம் சார்ந்த சங்கங்கள், தொழில்நுட்ப சம்மேளனங்கள் என பல குழுக்களின் தலைவராகவும் இவர் விளங்குகிறார். 
மட்டுமல்ல, திரைப்படத்திற்குத் தாம் அளித்த பங்களிப்பிற்காக ஏஎஃப்ஐயின் வாழ்நாள் விருதினை அவர் பெற்றுள்ளார். ஒரு ஆஸ்கார், நான்கு கோல்டன் குளோப், மூன்று பாஃப்தா மற்றும் அமெரிக்காவின் இயக்குநர் கழகம் ஆகியவற்றின் விருதுகளையும் வென்றுள்ளார்.

ஸ்கோர்செசி திரைப்பட அறக்கட்டளை என்னும் திரைப்படக் காப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன்னார்வலர் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். புகழ்பெற்ற ‘த ஷட்டர் ஐலேண்ட்’, ‘த வுல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ படங்களின் இயக்குநரும் இவரே. இப்படி சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்த மார்ட்டின் கடந்த சில வருடங்களாகவே சினிமா தியேட்டர்களுக்கு செல்வதையே தவிர்த்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?

நம்பித்தான் ஆக வேண்டும். இதற்கு இவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

பார்வையாளர்கள்தான் சினிமா திரையரங்கம் மீதான ஆர்வத்தையே கெடுத்து வருகிறார்கள்! ‘‘ரீல் மேக்கிங் பழக்கமும், ஒளிரும் மொபைல் போன்களின் வெளிச்சமும், படம் பார்க்கும் ஆர்வத்தையே முற்றிலுமாக சிதைக்கிறது. அதனால் பல வருடங்களாகவே சினிமா திரையரங்கங்களுக்கு நான் செல்வதில்லை...’’ என பகிரங்கமாகவே பார்வையாளர்கள் மேல் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் மார்ட்டின் ஸ்கார்சிஸ்.

மொபைல் பயன்பாடு மட்டும்தான் பிரச்னையா?

இல்லை. இன்னும் மெத்தனமான பார்வையாளர்கள் சினிமா ரசிகர்களுக்கு ஏராளமான இடையூறுகளை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என மார்ட்டினைத் தொடர்ந்து பல சினிமா கலைஞர்களும் நிபுணர்களும் இதே குற்றச்சாட்டை வைக்கிறார்கள் அல்லது விரிவுபடுத்துகிறார்கள். யாருக்குமே பொது இடம் என்கிற பொறுப்பு துளியும் கிடையாது. சரியான நேரத்திற்குக் கூட வருவதில்லை என்கிறார்கள்.

‘‘இருட்டான திரையரங்கிற்குள் ஒளிரும் மொபைல் போன்களின் திரைகள், சினிமாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்’’ எனவும், ‘‘இது கிட்டத்தட்ட ஒரு இருட்டான கவிதை வாசிப்பு அரங்கத்திற்குள் சிகரட்டை பற்றவைக்கும் அளவிற்கு கொடூரமான மனநிலை...’’ என்றும் 80 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளர் மகேஷ் பட் வருத்தமாகத் தெரிவிக்கிறார்.

‘‘முழுவதுமாக மார்ட்டினின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு நல்ல படம் எந்தப் பார்வையாளனையும் திசை திருப்ப விடாமல் நிச்சயம் தன் பக்கம் ஈர்க்கும்.
சினிமா திரையரங்கங்கள் ஒன்றும் கோயில் கிடையாது. அதற்கு இவ்வளவு புனிதம் கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை. காலம் காலமாகவே பாப்கார்ன் நொறுக்குகளுக்கும், கிசுகிசு பேச்சு சப்தங்களுக்கும் இடையேதான் படங்கள் பார்க்கிறோம்.

ஆனால், இந்த ரீல்ஸ் ஸ்க்ரோலிங் மக்கள் எல்லையைக் கடக்கிறார்கள். ஓர் இரண்டரை மணி நேரம் மொபைலுக்கு ஓய்வு கொடுக்க முடியவில்லை எனில் - அவசர அழைப்புகள் தவிர - நீங்கள் ஏன் திரையரங்கங்களுக்கு வருகிறீர்கள்?’’ என கேள்வி எழுப்புகிறார் மகேஷ் பட்.‘‘மார்ட்டினின் கூற்று அதிர்ச்சியாக இருந்தாலும் உண்மை நிலை அதுதான். 

இது திரைப்படக் கலைஞர்களுக்கு கடினமான காலம்தான். குறுகிய காலத்தில் விளக்கக் கூடிய கதைகளை மக்கள் விரும்பத் துவங்கிவிட்டனர். அதனால்தான் இன்ஸ்டன்டான இன்ஸ்டா ரீல்ஸ்கள் இன்று மக்களால் அதிகம் பார்க்கப்படுகிறது.

பார்த்துக் கொண்டிருக்கும் படம் கொஞ்சம் சலிப்பைக் கொடுத்தால் கூட அடுத்த கணம் கையில் இருக்கும் மொபைலில் ரீல்ஸ்களை ஸ்க்ரோல் செய்யத் தொடங்குகிறார்கள்...’’ என்கிறார் அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஒரிஜினலான ‘பிங்க்’ திரைப்படத்தின் இயக்குநரான அனிருத்தா ராய் சௌத்ரி.LGBTQ+ அடிப்படையிலான பல கதைகளை இந்திய சினிமாவில் கொடுத்த இயக்குநர், கதையாசிரியர் ஓனீர், இதை வேறுவிதமாகச் சொல்கிறார்.

‘‘படம் பார்ப்பதைக் காட்டிலும், நான் ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உலகுக்கு சொல்வதைத்தான் ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் இக்கால பார்வையாளர்கள்.
படம் துவங்கிய சிறிது நேரத்தில் அத்தனை பேரும் மொபைலை உயர்த்தி வீடியோ எடுக்கிறார்கள். இந்த நிலையை உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கூட காண முடிகிறது.

மக்கள் மல்டி டாஸ்க்கிங் பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டனர் என்பதுதான் உண்மை. கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து கொண்டே வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை பார்த்துக்கொண்டே அருகில் ஓடிக் கொண்டிருக்கும் டிவி உட்பட அனைத்தையும் ‘பார்த்து’ப் பழகியவர்கள் இன்று ஒரே நேரத்தில் சினிமா, மொபைல், ஸ்நாக்ஸ் என அத்தனையும் செய்துவிட துடிக்கிறார்கள்.

விளைவு-திரையரங்கத்தின் முழுமையான அனுபவம் கிடைப்பது அரிதாகி விடுகிறது...’’ என்கிறார் ஓனீர்.‘‘கோயிலுக்குள் காலணியுடன் செல்வதற்கு சமம் சினிமா தியேட்டர்களில் மொபைலுடன் செல்வது. அதனால்தான் வெளிநாடுகளில் பல திரையரங்குகளில் மொபைல் போன்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வந்து விட்ட சினிமா இப்போது திரையரங்குகளில் இருக்கும் சினிமாவை குப்பை போல் மாற்றிவிட்டது. சினிமா தியேட்டர்களுக்கு வருவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி குடும்பத்துடன் வெளியே வருவதற்குமான இடமாக மாறிவிட்டது.

படம் துவங்கியதுமே ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளுடன் உள்ளே வரும் பார்வையாளர்கள் பாக்கெட்டை பிரிக்கும் சப்தம் முதல் பாப்கார்ன் சாப்பிடும் சத்தம் வரை அத்தனையும் படம் பார்க்கும் அனுபவத்தையே முழுமையாகக் கெடுத்து விடுகிறது...’’ என்கிறார் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான ஆனந்த் மகாதேவன்.

இந்தி தயாரிப்பாளரும் படத் தொகுப்பாளருமான அமித் அகர்வால், ‘‘ஓய்வு நேரத்தில் பலவிதமான வேலைகளைச் செய்து மக்கள் பழக்கப்பட்டு விட்டனர். இப்பொழுது மல்டி டாஸ்க்கிங் மிகவும் எளிது என்கையில் அதையே திசை திருப்பும் அளவிற்கு படங்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இன்று சினிமா கலைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். 

பார்வையாளர்களை எங்கேஜ் செய்யும் விதத்தில் ஒரு படத்தை கொடுக்க முடிபவன்தான் உண்மையில் வெற்றியாளன். இப்போதும் மிகச்சில படங்கள், மிகச் சில கலைஞர்கள் அந்த வேலையை எந்தத் தடையும் இல்லாமல் செய்கிறார்கள்.

அவர்களைப் போலவே பார்வையாளனைக் கட்டிப்போடும் கலையை இந்திய சினிமா கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது. வேறு வழியே இல்லை. இந்த நிலையை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்...’’ என்கிறார் அமித் அகர்வால்.‘‘திரையரங்கங்கள் பொது இடம். இது உனக்கானது மட்டுமல்ல என்பதனாலேயே 1910ம் வருடங்களிலேயே வசனம் இல்லாமல் வெளியான மௌனத் திரைப்படங்களில் இடையூறு குறித்த விளம்பரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

அக்காலத்தில் ஆண்கள் / பெண்கள் பெரிய அளவிலான தொப்பிகள் அணிவதுண்டு. அதனை அடிப்படையாகக் கொண்டு ‘ரிமூவ் யுவர் ஹேட்’, பெண்களைக் குறி வைத்து நடக்கும் சீண்டல்களுக்கான பேனர்கள் உட்பட 100 வருடங்களுக்கு முன்பே இந்த டிஸ்க்ளைமர்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டன.

இப்போதும் சில நாடுகள் இந்தத் திரையரங்க கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதங்களை விதிக்கின்றன.சீனா, ஜப்பான், ஐரோப்பாவில் சில நாடுகள், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் பொது இடங்களில் சில முக்கியக் கட்டுப்பாடுகளை கடுமையாகவே கடைப்பிடிக்கிறார்கள். 

அவற்றில் சினிமா திரையரங்கங்களுக்கு என கட்டுப்பாடுகள் Terms & conditions அடிப்படையில் டிக்கெட்டுகளிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு கொடுக்கப்படுகின்றன.படம் துவங்கி விட்டால் அதன் பிறகு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு... விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் நேரம் வரைதான் கால அவகாசம் கொடுக்கப்படும்.

நான்கு வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை அழைத்து வர அனுமதி கிடையாது. அப்படியே அழைத்து வர வேண்டும் எனில் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட திரையரங்குகளுக்கு மட்டும்தான் செல்ல வேண்டும். 

அல்லது அது குழந்தைகளுக்கான திரைப்படமாக இருக்க வேண்டும்.சென்சார் தரப்பு இந்த வயதினருக்கு மட்டும்தான் என பரிந்துரைக்கப்பட்ட படங்களுக்கு அதற்குக் கீழ் குறைந்த வயதில் உள்ளவர்களுக்கு அனுமதி மறுப்பு. மீறி அழைத்து வந்து பிரச்னை செய்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் பாப்கார்ன் உள்ளிட்டவற்றை சப்தம் எழுப்பாமல் சாப்பிட வேண்டும். பாக்கெட்களை வெளியில் இருந்தே பிரித்துவிட்டு உள்ளே வரவேண்டும்.
மொபைல் போன்களை நிச்சயம் பயன்படுத்தவே கூடாது. 

குறிப்பாக வீடியோ பதிவு செய்தால் அபராதம் மற்றும் தொடர்ந்து சினிமா பார்ப்பதற்கும் தடை.திரையரங்கத்தில் வெளிச்சம் இல்லை என்பதற்காக இது உங்களுக்கான அந்தரங்க இடம் கிடையாது. காதல் அத்துமீறல்களுக்கு இங்கே அனுமதி இல்லை. பேசுவதும் கூடாது.

இருக்கையில் இருந்து எழுந்து செல்லும் பொழுது திரையைப் பார்த்த வண்ணம்தான் செல்ல வேண்டும். உங்களது உடலின் பின்பகுதி முன்னிருக்கையில் உட்கார்ந்திருப்பவர் தலையில் இடிக்கவே கூடாது. அப்படி இடித்து ஒருவேளை முன்னிருக்கையில் இருப்பவர் புகார் தெரிவித்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் அல்லது உடனடியாக அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவர்.

படம் முடியும் வரையிலும் இருக்கையில் காத்திருந்து எழுந்து செல்ல வேண்டும்... இதனை பொதுவாக அமெரிக்கர்கள் அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களின் காத்திருப்புக்கு அன்பளிப்பாகத் தான் மார்வெல் மற்றும் டிசி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் எண்ட் கிரெடிட் என்னும் கான்செப்ட்டை உருவாக்கினார்கள்.

டிக்கெட்டாக இருந்தாலும் சரி ஸ்நாக்ஸ் ஆக இருந்தாலும் சரி எப்போதும் வரிசையைக் கடைப்பிடித்தாக வேண்டும். அவசரம் கூடாது.‘உன்னுடைய இருக்கை உனக்கானது’ என்றாலும் அதுவும் படம் துவங்கி முடியும் வரை மட்டுமே என்பதால் திரையரங்க பொருட்கள் மேல் கவனம் தேவை. ஏதேனும் சேதாரம் எனில் சேதார செலவு மட்டுமின்றி அபராதமும் சேர்த்து கட்ட வேண்டும்...

இப்படி பலவிதமான திரையரங்க கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு உலகின் பல நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. எனவேதான் அங்கே சினிமா தொழில் தடை இல்லாமல் நடக்கின்றது.

இங்கே ரஜினி, விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படம் ஒரு நாள் வெளியானாலே அடுத்து இன்சூரன்ஸ் பெறும் அளவிற்கு திரையரங்குகள் அடித்து நொறுக்கப்படுகின்றன.

என்கையில் இங்கே எப்படி இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் கடைப்பிடிப்பது? எனினும் கடுமையான நடவடிக்கைகளுடன் இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால்தான் நம்மை மகிழ்விக்கும் திரையரங்கத் தொழில் தொடர்ந்து தடையின்றி நடக்கும்...’’ என்கிறார்கள் திரைப்பட ரசிகர்கள்.

ஷாலினி நியூட்டன்