ACயின் கூலிங் அளவை கட்டுப்படுத்தினால் புவி வெப்பமயமாதலில் இருந்து தப்பிக்கலாமா?
அடிக்கிற வெயிலுக்கு ஏசி ரிமோட்டில் உள்ள 16ம் இலக்கத்தை அமுக்கினால்தான் பலருக்குத் தூக்கமே வரும். இந்த 16ம் நம்பர்தான் ஒரு ஏசி-யின் உச்சபட்ச கூலிங் எண்.
ஆனால், இனிமேல் 20ம் எண்ணிலிருந்து 28 வரைதான் ஏசியில் எண் இருக்கும். மற்ற பட்டன்களை எல்லாம் தூக்கிவிடுவார்கள்.  இது தொடர்பாக ஏசி உற்பத்தியாளர்களிடம் பேசிவரும் ஒன்றிய அமைச்சகத்தின் மின் துறை அமைச்சகம், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கொளுத்திப் போட்ட இந்தப் பேச்சுதான் மண்டை காயும் சிட்டிசன்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.  இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே வெப்பத்தின் அளவு வருடந்தோறும் உயரும் சூழ்நிலையில் பல ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து வாங்கும் ஏசி-யில் அதிகபட்ச கூலிங் தரும் இந்த 16ம் நம்பர் பட்டனை தூக்கிவிடப் போவதாக சொல்லும் ஒன்றிய அமைச்சகத்தின் ஆலோசனை சரியானதுதானா எனும் ரீதியில் சில டேட்டாக்களைப் பார்த்தோம். இந்தியாவில் சுமார் 30 கோடி வீடுகள் இருக்கின்றன. இதில் 6 சதவீதத்தினர் வீடுகளில்தான் ஏசி உள்ளது. ஆனால், இது வருடந்தோறும் உயர்ந்துகொண்டே வருகிறது என்பது முக்கியம்.

காரணம் ஆண்டுதோறும் உயரும் வெப்பம். இப்படியே போனால் வரும் 2037ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பாதி மக்களும், 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த மக்களும் ஏசி வைத்திருக்கும் சூழ்நிலை உருவாகும் என ஆருடம் சொல்கிறார்கள் நம்பத்தகுந்த ஆராய்ச்சியாளர்கள்.  அதாவது இந்தியாவில் வருடந்தோறும் ஏசி விற்பனை 35 சதவித வளர்ச்சியில் இருப்பதாக சொல்கிறார்கள் விற்பனையாளர்கள். சென்ற வருடம் 4 ஏசி விற்பனையானது என்றால் இந்த வருடம் 6 ஏசி விற்பனையாகிறது. இதோடு ஏசி பயன்பாட்டால் ஒரு நுகர்வோனின் பாக்கெட்டுக்கும் வேட்டு என்பதோடு 16 இலக்கம் போன்ற உயர் கூலிங் எண்கள் எல்லாம் உடல் நலத்துக்கும் கேடு என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. உதாரணமாக சளித் தொல்லை, ஆஸ்துமா பிரச்னை, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தொற்றுநோய் உள்ளவர்கள் எல்லாம் உயர் கூலிங்கில் உறங்குவது அந்த நோயாளிகளை மட்டுமல்ல... அவர்களுடன் உறங்குபவர்களுக்கும் ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
உண்மையில் ஒன்றிய அரசின் மின் துறை அமைச்சகம் 2020ம் ஆண்டில் ஒரு ஏசி-யின் உயர்பட்ச கூலிங் எண்ணாக 24 டிகிரி செல்சியஸ் எனும் வரையறையைத்தான் முதலில் வைத்திருந்தது.
ஆனால், பல நுகர்வோரிடமிருந்தும், ஏசி உற்பத்தியாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு வரவே இப்போது 20 முதல் 28 வரை என எல்லையை நிர்ணயித்திருக்கிறது.
பொதுவாக ஒரு ஏசி-யின் உயர்ந்தபட்ச கூலிங் 24 முதல் 28 வரையே போதுமானது. உடல்நலம், மின்சார செலவு, மின்கட்டணம் எல்லாம் கணக்கிட்டால் இந்த 24 அளவுகோல்தான் சரி என்று பலரும் சொல்கிறார்கள்.
ஆனால், 20 டிகிரிக்கு மேல் ஏசி-யின் அளவை உயர்த்தமுடியாத சூழ்நிலையில் வருடந்தோறும் உயரும் வெப்பத்தை தாக்குப்பிடிக்கமுடியுமா என்ற சந்தேகங்களும் பீதியும் நுகர்வோரிடையே அதிகரித்து வருகிறது.
அதிலும் 20ம் எண்தான் அளவுகோல் என்று வந்தால் ஏசி விற்பனை சரியலாம் எனும் அச்சமும் உற்பத்தியாளர்களிடையே வேர்விட்டுள்ளது. அதேநேரம், வெப்பத்துக்கான ஆபத்பாந்தவனாக இருக்கும் ஏசி-யே சுற்றுச்சூழலுக்கான ஆபத்தாகவும் இருப்பதையும் பல சூழலியல்வாதிகள் அறிவுறுத்துகிறார்கள்.
ஏசி-யின் 16ம் இலக்கம் என்பது அதிக மின்சாரப் பயன்பாட்டை கோருவது. மின்சாரப் பயன்பாடு மீண்டும் பூமியில் வெப்பத்தை உமிழும். ஆகவே 20 முதல் 28 வரையிலான எண் / அளவுகோல் என்பது ஓரளவு சூழலைக் கெடுக்காமல் இருக்கும் என்பது பரவலாக இருக்கும் கருத்து. இதுகுறித்து என்ன நினைக்கிறார்கள் சூழல்வாதிகள் என்றறிய ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவின் செயல்பாட்டாளரான ஜீயோ டாமினிடம் பேசினோம்.
‘‘புவி வெப்பமயமாதல் என்பது 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தம், பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்... இல்லையேல் வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும் என எச்சரித்திருந்தது.
இந்த 1.5 டிகிரி செல்சியஸ் என்ற எல்லையை கடந்த வருடமே நாம் தாண்டிவிட்டோம் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம். இதைச் சுட்டிக்காட்டி சென்ற வருடமே சூழல்வாதிகள் எச்சரித்தார்கள்.
புவி வெப்பமயமாதலால்தான் நாம் க்ளைமேட் சேன்ஜ் எனும் காலநிலை / பருவநிலை மாற்றத்தையும் அதன் விளைவுகளான வெயில், மழை, வெள்ளம் போன்றவற்றையும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இச்சூழலில் பூமி வெப்பமயதலைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன...’’ என்று சொல்லும் டாமின் அவற்றையும் விளக்கினார்.‘‘புவி வெப்பமயமாதலை இரு வழிகளில் அணுகலாம். ஒன்று ‘மிட்டிகேஷன்’ எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதலுக்கான காரணங்களைக் களைவது.
மற்றது பிரச்னையைத் தீர்க்கமுடியாவிட்டாலும் அதனுடன் எப்படி வாழ்வது என்று திட்டம் போடுவது. இதை ‘அடாப்டேஷன்’ என்று சொல்வார்கள். இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில் பிரச்னைக்கான காரணங்களைக் கண்டு உடனடியாகத் தீர்த்துவிடமுடியாது. காரணம் இங்கே பிரச்னைக்கான காரணமே ஒரு குறிப்பிட்ட சிறு பிரிவினர்தான்.
புவி வெப்பமயமாதலுக்கான முக்கியமான காரணம் என்ன? முதல் பெரிய காரணம் எனர்ஜி எனும் ஆற்றல். பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவற்றை இதில் சொல்லலாம். இரண்டாவது அணுமின் நிலையங்கள். அடுத்து குப்பை எரிப்பு. இந்த மூன்றுமே புவி வெப்பமயமாக்கலுக்கான அதிகமான கரியமில வாயுக்களை காற்றில் உமிழ்கிறது.
இந்த உமிழ்வுதான் புவி வெப்பமயமாதலுக்கான முக்கியமான காரணங்கள். இக்காரணங்களுக்கு காரணமானவர்கள் யார்? இந்தியாவில் மேட்டுக்குடியினரும், நடுத்தர மக்களும்தான். இவர்கள்தான் கரியமில வாயுக்களை அதிகம் உமிழும் சாதனங்களை பெருமளவு பயன்படுத்துகிறார்கள்...’’ என்று சொல்லும் டாமின், இதை எல்லாம் தீர்க்க அடாப்டேஷன் எனும் முறைதான் சூழல் பிரச்னைகளைத் தீர்க்கும் என்கிறார்.
‘‘இப்படி மேட்டுக்குடி, மிடில் கிளாஸ் போன்றவர்கள்தான் புவி வெப்பமயமாக்கலுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறார்கள். இதனால்தான் சமூக நீதி மாதிரி சூழல் நீதியை சூழல்வாதிகள் பேசவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாக்கலுக்கு மிக முக்கியமான காரணமாகத் திகழும் ஒரு பிரிவும், அதனால் பாதிக்கப்படும் பெருமளவு மக்களாக ஏழைகளும் இருப்பதால்தான் சூழல் நீதி பற்றி பேசவேண்டியிருக்கிறது. ஆகவே ஏசி-யால் மட்டும் புவி வெப்பமயமாதல் நிகழ்கிறது என்று அரசு சொல்வது எல்லாம் பெரிய பிரச்னைகளைத் திசை திருப்பத்தான் பயன்படும். பெரிய பிரச்னைகளுக்கு அரசும், பெரிய நிறுவனங்களும், பணம் படைத்தவர்களுமே காரணம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சிறு பிரிவினரான நுகர்வோர் மேலேயே சூழல் கேட்டுக்கான பழியைப் போடுவது எப்படிச்சரியாகும்?
ஒரு ஏசி புவி வெப்பமயமாதலுக்கு சிறிய அளவில் காரணமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், புவி வெப்பமயமாதலுக்கான காரணமான மிக முக்கியமான பிரச்னைகளை அரசு அணுகித் தீர்க்காமல் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாதனத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முயற்சிப்பது எல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் ஜீயோ டாமின்.
டி.ரஞ்சித்
|