மகிழ்ச்சியா ரசிக்க ஒரு ஜாலியான படம்!
இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் இவர் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படமும் வெளியாகவுள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறார் ராம்.
‘‘இந்தப் படத்தை என் முதல் படத்தைப் போல் சின்சியராக எடுத்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. சிவா கரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களுக்குரிய கமர்ஷியல் அம்சங்களும் இருக்கும்...’’ என உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ராம். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநர் என்று அறியப்பட்டவர்.
 நீங்கள் இயக்கிய படங்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். இதன் டீசர் ஜாலியாக இருக்கிறது. முழுப் படமும் அப்படிதான் இருக்குமா?

இது ஃபீல்குட் காமெடிப் படம். உலகத்தில் உள்ள எல்லா பெற்றோரும் தங்களால் முடிந்த, சிறந்தவைகளை குழந்தைகளுக்கு தரணும்னு நினைக்கிறார்கள். ஆனால், குழந்தைகளின் எதிர்பார்ப்பு அதுதானா?
குழந்தைகள் எதிர்பார்க்கும் விஷயங்களை பெற்றோர்களால் கொடுக்க முடியுமா முடியாதா என்பதுதான் படத்தோட லைன். அந்தக் காலத்து திருவிளையாடல் கதை மாதிரி முருகன் கோவிச்சுட்டுப் போய்விடுவார். அப்பா, அம்மா பின்னாடியே போவார்கள். அப்படியும் சொல்லலாம். உங்கள் படங்களில் அழுத்தமான கதையம்சம் இருக்கும். இது இலகுவான சப்ஜெக்ட் மாதிரி தெரியுதே?
தயாரிப்பாளர்கள் ஹேப்பியா ஒரு படம் கேட்டார்கள். அதுமட்டுமல்ல, சமூகத்தில் நான் என்ன பார்க்கிறேனோ அதைத்தான் திரைப்படமாக எடுக்கிறேன்.தனி மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சி, சோகம், கஷ்டம், நஷ்டம் என எல்லாமே கலந்திருக்கும்.
எவ்வளவுதான் வெளி உலகில் சோர்வாக அல்லது அவமானத்தைச் சந்திச்சாலும் வீட்டில் அதை காட்டாமல், வீட்டில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாங்க. அந்த ஏரியாவுக்குள் கதை பண்ணலாம்னு தோணுச்சு.
சிட்டியில் இருக்கிற பலருடைய மனநிலை எப்படியாவது டாப் பொசிஷனுக்கு போயிடணும் என்பதாக இருக்கும். சொல்லப்போனால் அவர்களது கனவாக இருக்கும். சென்னைக்கு ஏன் இவ்வளவு பேர் வருகிறார்கள்... இங்கு வந்தால் கார், வீடு என கனவு வாழ்க்கையை சாத்தியப்படுத்தலாம் என்று வருகிறார்கள்.
அந்த நம்பிக்கையில்தான் எல்லோரும் வருகிறார்கள். அதனால்தான் சிட்டியில் வேலைக்கு ஆள் கிடைக்கிறார்கள். பலருடைய கனவுகளை விற்பனை செய்துவிட்டுதான் சிட்டி வாழுகிறது. அப்படி என் கதையில் வரும் நவீன தம்பதி, அவர்களுடைய மகன் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் வெற்றியடையப் பார்க்கிறார்கள். அதற்காக அவர்கள் செய்யும் தியாகம் என்ன என்பதை ஜனரஞ்சகமான சினிமாவாக சொல்லியுள்ளேன்.
சிவா காமெடி படங்களுக்கு பேர் பெற்றவர். ஹீரோவாக அவரை எப்படி தேர்வு செய்தீங்க?
‘கற்றது தமிழ்’, ‘சென்னை 28’ இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவந்துச்சு. அதிலிருந்து சிவா பழக்கம். இந்தக் கதைக்கு அப்பா கேரக்டர் எப்படி தேவைப்பட்டுச்சுன்னா, குழந்தை மாதிரியே உள்ள அப்பா இருந்தால் நல்லாயிருக்கும்னு தோணுச்சு.
சிவாவுடைய நடிப்பு எப்பவும் வளர்ந்த குழந்தை மாதிரியே இருக்கும்.சிவாவுக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர் உண்டு. அது எவ்வளவு நிஜம்னு ஷூட்டிங் டைம்லதான் தெரிஞ்சது. கோயமுத்தூர் அருகில் உள்ள அன்னூர் என்ற ஊரில் படப்பிடிப்பு நடத்தினோம். சுமார் 5000 பேர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். எங்களால் படப்பிடிப்பை நடத்த முடியாதளவுக்கு மக்கள் கூட்டம் முண்டியடிச்சது. இன்னொரு நாள் ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளுமளவுக்கு நிலைமை கை மீறிடுச்சு. அப்போதுதான் அவர் உண்மையில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று தெரிஞ்சது.
ஹீரோயின் புதுமுகம் மாதிரி தெரியுதே?
கிரேஸ் ஆண்டனி. மலையாளத்தில் முன்னணி நடிகை. அவருடைய ‘ஹேப்பி வெட்டிங்’, ‘அப்பன்’ போன்ற படங்கள் எனக்குப் பிடிக்கும். கதை எழுதியதும் இவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன்.
அவருடைய நடிப்பு ஊர்வசி மேடம் சாயலில் இருக்கும். அது உருவத்தில் இல்லாமல் பெர்ஃபாமன்ஸ்ல இருக்கும். மலையாளத்தில் வெர்சடைல் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர் வாங்கியவர். மனநலம் பாதிக்கப்பட்டவராக, நகைச்சுவை, ரியலிஸ்டிக்கான கதாபாத்திரம் என வித்தியாசமான வேடங்களில் நடிச்சு தனக்கென தனித்துவமான ஸ்டைல் உள்ளவர். தமிழில் அவருக்கு தொடர்ந்து நிறைய படங்கள் வரும். அஞ்சலிக்கு என்ன ரோல்?
வனிதா என்ற முக்கியமான கேரக்டர்ல வர்றார். அந்தக் கேரக்டருக்கு பெரிய நடிகை இருந்தால் கதைக்கு பலமாக இருக்கும் என்று தோணுச்சு. அஞ்சலி என்னுடைய அறிமுகம். குருவுக்கு ஆற்றும் கடமையாக நான் கேட்டதும் மறுக்காமல் செய்து கொடுத்தார். ‘பேரன்பு‘ படத்தில் நெகட்டிவ் ரோல் செய்தார்.
‘ஏழு கடல் ஏழு மலை‘யில் அவர்தான் ஹீரோயின். அதுமட்டுமல்ல, அஞ்சலி என் குடும்பத்துல ஒருத்தர்னு சொல்லலாம். அந்தளவுக்கு என்மீது அன்பும், மரியாதையும் உள்ளவர். இவர்களுடன் மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ் ஆகியோர் இருக்கிறார்கள். ‘ஆனந்த யாழை...’ மாதிரி படத்தில் பாடல் இருக்கிறதா?
அது வேற. அந்த ஜானர்ல இதுல பாடல் கிடையாது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியிருந்தார். அப்போது பெரிய பட வேலைகளில் பிசியாக இருந்தார். நாங்கள் ஃபெஸ்டிவலுக்கு படத்தை அனுப்ப வேண்டிய பிசியில் இருந்தோம்.
அப்போது ஆபத்பாந்தவனாக வந்தவர்தான் சந்தோஷ் தயாநிதி. பாடல்கள் மதன் கார்க்கி. மொத்தம் 19 பாடல்கள். எல்லாமே பின்னணி இசைக்கான பாடல்களாக இருக்கும். ‘ஸ்மோக்கிங் கில்ஸ்...’ என்ற பாடல் மதன் கார்க்கியின் 1000மாவதுபாடல். பின்னணி இசையில் யுவன் பங்களிப்பு உண்டு. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்னுடைய ‘ஏழு கடல் ஏழு மலை’க்கும் அவர்தான் கேமரா. ஈகோ இல்லாதவர் என்பதால் அவருடன் சுமுகமாக வேலை செய்ய முடிஞ்சது. ஜியோ ஹாட்ஸ்டார், ஜி.கே.எஸ்.புரொடக்ஷன், செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் தயாரிச்சிருக்காங்க,திரையீட்டுக்கு முன்பே ‘ரோட்டர்டாம்’ பட விழாவில் படத்தைப் போட்டுக் காண்பித்துள்ளீர்கள். அந்த வகையில் மக்களுக்காக படமா, பட விழாக்களுக்காக படமா?
ஃபெஸ்டிவலுக்காக படம் எடுக்க முடியாது. அங்கு 5 ஜூரி வெச்சு எது சிறந்த படம்னு முடிவு பண்ணுவார்கள். எங்கு வாழ்கிறோமோ, எந்த மொழியில் எடுக்கிறோமோ அவர்களுக்குதான் படம். எந்தப் படத்தையும் ஃபெஸ்டிவலுக்காக எடுத்ததில்லை.
பெஸ்டிவல் என்றால் சீரியஸான படம் என்ற கருத்து இருக்கு. அது எல்லா படத்துக்கும் பொருந்தாது.ஃபெஸ்டிவல் திரையிடல் தனிப்பட்ட விதத்தில் அதன் இயக்குநருக்கு ஃபிலிம் மேக்கருக்கான நம்பிக்கையைக் கொடுக்கும்.
எங்கள் படத்தை ரோட்டர்டாம் ஃபெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணினோம். உலகின் பல இடங்களிலிருந்து இயக்குநர்கள் வருவார்கள். அப்போது சமகால இயக்குநராக நம்முடைய சிந்தனை, சினிமாவைப் பார்க்கும்விதம் எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்க உதவும். ‘ஏழு கடல் ஏழு மலை’ எவ்வளவு தூரத்தில் உள்ளது?
எல்லா மலையையும் ஏறி, இறங்கிவிட்டோம். சீக்கிரத்தில் அறிவிப்பு தேதி வெளியாகும்.
உங்கள் பார்வையில் சினிமா கலையா, வியாபாரமா?
மக்கள் சினிமாவை கலையாகத்தான் பார்க்கிறார்கள். மக்களை சில கூறுகள் வழியாக வகைப்படுத்தலாம். சினிமா என்பது வியாபாரக் கட்டளைக்கு உட்பட்டு இயங்கக்கூடிய கலை. ஆனால், ஜெயிக்கக்கூடிய ஒருவர் அந்தக் கட்டளையைத்தாண்டி அந்தக் கலையை முன்னெடுத்துச்செல்ல முடியும். அப்போது மக்கள் அதை ரசிப்பார்கள்.
எஸ்.ராஜா
|