மாறிவிட்டது இந்தியர்களின் இன்வெஸ்ட்மென்ட்!



யெஸ். பாரம்பரிய முதலீடுகளில் இருந்து இந்தியர்கள் மெல்ல மெல்ல விலகி புதிய இன்வெஸ்ட்மென்ட்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.இப்படிச் சொல்வது மத்திய ரிசர்வ் வங்கி என்பதால் இது உறுதியான தகவல்தான்.
இந்தியாவில் பெரும்பாலும் முதலீடு, சேமிப்பு என வரும்போது மிகவும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களைத்தான் மக்கள் நாடுவார்கள். தங்கம் வாங்குவது, வங்கி முதலீடு என்றால் ஃபிக்சட் டெபாசிட் அல்லது ஆர்.டி மூலம் பணம் போட்டு வைப்பது உள்ளிட்டவற்றைத் தான் இந்தியர்கள் பெரும்பாலும் பின்பற்றுவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் இந்த முதலீடுகள் அனைத்துமே பாதுகாப்பான நிலையான வருமானத்தை வழங்கக் கூடியவை என்பதுதான்.
தற்போது அந்த போக்கு மாறி இருப்பது தெரிய வருகிறது. அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு தரவு இந்திய குடும்பங்களின் சேமிப்பு பழக்கம் எப்படி முதலீட்டு பழக்கமாக மாறி இருக்கிறது என்பதை விரிவாக விவரிக்கிறது.

2021ம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் சேமிப்பில் 50.54 சதவீதம் ஃபிக்சட் டெபாசிட். ஆனால், 2025ம் நிதியாண்டில் அது 45.77 சதவீதம் என குறைந்திருக்கிறது. அதாவது வெறும் ஐந்தே ஆண்டுகளில் இந்தக் குறைவு.பெரும்பாலானவர்கள் பாரம்பரியமான முதலீடுகளைத் தாண்டி மற்ற திட்டங்களிலும் இன்வெஸ்ட் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். 

குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தைகள், அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது என்பன உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் மக்கள் தங்களுடைய முதலீடுகளை இந்தத் திட்டங்களை நோக்கித் திருப்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டு கணக்குகள் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. 2021ம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட தொகை மதிப்பு 100 மில்லியன்தான். 

அது 2025 ஏப்ரல் மாதத்தில் 230 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. இப்படி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களில் 91% பேர் சில்லறை முதலீட்டாளர்கள் என ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் தரவு கூறுகிறது.இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மேலாண்மை செய்யக்கூடிய நிதியின் மதிப்பு 2020ம் ஆண்டு வெறும் 22 டிரில்லியனாக இருந்தது. அதுவே 2025ல் 69 டிரில்லியனாக உயர்ந்திருக்கிறது.

மட்டுமல்ல, கடந்த டிசம்பர் மாதம் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இந்தியக் குடும்பங்களின் முதலீட்டு போக்கு திசை மாறி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஆபத்து நிறைந்த முதலீட்டு விஷயங்களில் முதலீடு செய்யும் போக்கு 2019ம் ஆண்டு 15.7 சதவீதமாக இருந்து 2022ம் ஆண்டில் 17.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இவையெல்லாம் இந்திய குடும்பங்கள் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்துவிட்டு அந்தப் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தைகள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.

வங்கிகள் தரக்கூடிய வட்டி விகிதங்களை விட மியூச்சுவல் ஃபண்டுகள், சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள் அதிகமான வருமானம் தரக்கூடியவையாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.மக்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது இதற்கு முன்பு மிகவும் சிக்கலான ஒரு விஷயமாக இருந்து தற்போது அது மிக எளிமையானதாக மாற்றப்பட்டிருக்கிறது.

வருமானம் அதிகரிப்பது, நிதி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகள் உயர்ந்திருப்பது, முதலீட்டுத் திட்டங்கள் மிகச் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது... ஆகியவை காரணமாக சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளை நோக்கி பயணம் செய்கின்றனர் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

என்.ஆனந்தி