உலகின் மிகப்பெரிய ஆலமரங்கள் இந்தியாவில்தான் உள்ளன!
சென்னை அடையாறு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஆலமரம்தான். தியாசஃபிக்கல் சொசைட்டி எனும் பிரம்மஞான சபையினுள் வீற்றிருக்கும் இந்த ஆலமரத்தைப் பார்க்கும் அனைவருமே பிரமித்துப் போவார்கள்.  அந்தளவுக்குப் பெரிதானது. பிரம்மாண்டமானது.சுமார் 450 ஆண்டுகள் பழமையான இந்த ஆலமரம், மொத்தம் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. சென்னையை எத்தனையோ புயல்கள் தாக்கிய போதும்கூட இந்த ஆலமரம் பாதிக்கப்படாமல் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.  இதேபோல் இந்தியாவில் இன்னும் பிரம்மாண்ட பெரிய ஆலமரங்கள் உள்ளன. இவை அந்தந்த பகுதிகளில் புகழ்பெற்று விளங்கினாலும் இன்றைய சமூக வலைத்தளங்கள் மூலமாக அவை வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. அந்த ஆலமரங்களின் ருசிகரத் தகவல்கள்தான் இவை.
 திம்மம்மா மர்ரிமனு இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப்பெரியது என்ற பெயரைப் பெற்றுள்ள ஆலமரம், ‘திம்மம்மா மர்ரிமனு’. இது சுமார் 4.72 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது என்றால் இதன் பிரம்மாண்டத்தையும் சிறப்பையும் அறிந்து கொள்ளலாம்.அதாவது ஏறக்குறைய நான்கு கால்பந்து மைதானங்களுக்கு சமமான அளவில் வளர்ந்து நிற்கிறது இந்த ஆலமரமும் அதன் விழுதுகளும். சுமார் 550 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லப்படுகிறது.
 இதனாலேயே இயற்கை ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் இந்த ஆலமரத்தை அதிசயமாகப் பார்த்து வருகின்றனர். 1989ம் ஆண்டு இதுவே உலகின் மிகப் பெரிய ஆலமரம் என கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்திலும் இடம்பெற்றது. ஆந்திராவின் அனந்த பூர் மாவட்டத்திலுள்ள கதிரி நகரிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது திம்மம்மா மர்ரிமனு. இதில் மர்ரிமனு என்றால் தெலுங்கில் ஆலமரம் என அர்த்தம். திம்மம்மா என்பது ஓர் உள்ளூர் புராணத்திலிருந்து வந்தது.

15ம் நூற்றாண்டில் திம்மம்மா என்ற பெண் தனது கணவரின் இறுதிச் சடங்கின்போது சதி எனும் உடன்கட்டை ஏறி உயிரைத் தியாகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது சிதைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மரக்கட்டையிலிருந்து சிறிய மரக்கன்று ஒன்று முளைத்ததாகவும், அதுவே இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இது திம்மம்மா மர்ரிமனு என அழைக்கப்படுகிறது.
அந்தக் கிராம மக்களும் திம்மம்மாவை பக்தி மற்றும் தியாகத்தின் அடையாளமாக நினைத்து அவருக்குக் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இங்கே வந்து திம்மம்மாவை வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெறுகின்றனர். சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடி வழிபாடு நடத்துகின்றனர். இதனால், திம்மம்மா மர்ரிமனு பிரபலமாகவும், உயிர்ப்புடனும் உள்ளது.
இந்த இயற்கை அதிசயத்தைப் பாதுகாக்க ஆந்திரப் பிரதேச வனத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு வேலிகளும், பார்வையாளர்களுக்கான பிரத்யேக பாதைகளும் அமைத்துத் தந்துள்ளது.
த கிரேட் பானியன்
கொல்கத்தாவின் ஹவுராவில் உள்ள ஷிப்பூரில் இருக்கும் ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் பூங்காவில் இருக்கிறது இந்த கிரேட் பானியன். சுமார் 250 ஆண்டுகள் பழமையான இந்த ஆலமரம் திம்மம்மா மர்ரிமனுவைவிட கொஞ்சமே குறைவு. அதாவது 4.67 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது இந்த ஆலமரம்.
இதனையும் பலர் உலகின் மிகப் பெரிய ஆலமரம் என்றே வர்ணிக்கின்றனர். இந்தத் தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள் இருந்தாலும் இந்த ஆலமரத்தைப் பார்வையிடவே பல நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். 1900களின் ஆரம்பத்தில் இரண்டு புயல்களின் தாக்குதலால் இந்த ஆலமரத்தின் முக்கிய தண்டு, பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டது. இதனால், 1925ம் ஆண்டு இந்த ஆலமரத்தின் முக்கிய தண்டு அகற்றப்பட்டது. இருந்தும் மரத்தின் மீதிப் பகுதி தொடர்ந்து வளர்ந்தது. மொத்தமாக 3,772 விழுதுகள் இதில் உள்ளன. இந்தத் தாவரவியல் பூங்காவிற்கு 2009ம் ஆண்டுதான் இயற்கை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸின் நினைவாக அவர் பெயர் சூட்டப்பட்டது.
ஆனால், இந்தப் பூங்காவை 1787ம் ஆண்டில் வடிவமைத்தவர் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த கர்னல் ராபர்ட் கைட் என்பவர். அவர் மசாலா, தேநீர் மற்றும் தேக்கு போன்ற வணிக ரீதியான தாவர இனங்களை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்தப் பூங்காவை நிறுவினார்.ஆனால், அதில் ஒரு ஆலமரம் தழைத்தோங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகில் பிரம்மாண்டமாக மாறும் என அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
கபீர்வாட்
குஜராத்தின் சூரத் நகரிலிருந்து 80 கிமீ தொலைவில் நர்மதை நதியில் ஒரு சிறு தீவாக அமைந்திருக்கிறது கபீர்வாட். இதில் வாட் என்பது குஜராத்தி மொழியில் ஆலமரம் என்று அர்த்தம்.பக்தி கவிஞரும், துறவியுமான கபீர் இங்கே வசித்து தியானம் செய்ததால் இந்த இடம் அவர் பெயரில் ‘கபீர்வாட்’ என அழைக்கப்படுகிறது.
சுமார் 600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலமரம் 4.33 ஏக்கர் பரப்பளவில் வீற்றிருக்கிறது. மொத்தம் 3 ஆயிரம் விழுதுகளைக் கொண்டுள்ளது. இந்த ஆலமரத்தில் புனிதர் கபீருக்குக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அதனுடன் அருங்காட்சியகமும் இருக்கிறது. இந்த பெரிய ஆலமரத்தையும் கபீர் கோயிலையும் தரிசிக்க தினமும் பலர் வந்து செல்கின்றனர். இதற்காக அவர்கள் நர்மதை நதியில் 15 நிமிட படகு சவாரியை மேற்கொள்கின்றனர். பில்லாலமர்ரி
தெலுங்கானாவின் மகபூப்நகரிலிருந்து நான்கு கிமீ தொலைவில் இருக்கிறது பில்லாலமர்ரி ஆலமரம். இதில் பில்லால என்பது குழந்தையையும் மர்ரி என்பது ஆலமரத்தையும் குறிக்கும். அதாவது குழந்தைகளுக்கான ஆலமரம் என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலமரம் 4 ஏக்கர் பரப்பளவில் வீற்றிருக்கிறது. இதில் கடந்த 2018ம் ஆண்டு ஒரு பெரிய கிளை சரிந்து விழுந்தது. பூஞ்சை தொற்றுகளும் இருந்தன. இதனால் பில்லாலமர்ரி தற்காலிகமாக மூடப்பட்டது.
பின்னர் வனத்துறை அந்தப் பகுதியை வேலி அமைத்து மரத்தின் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளித்தது. அத்துடன் குழந்தைகள் பூங்கா, சிறிய மிருகக்காட்சிச் சாலை, மீன்கூடம், தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் படகு சவாரி போன்றவற்றை உருவாக்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டு பில்லாலமர்ரி பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
இதன்பிறகு பெங்களூரின் கேதொஹள்ளியில், ‘தொட்டா ஆலத மரம்’ எனும் பெரிய ஆலமரம் உள்ளது. மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. பொதுவாக ஆலமரம் மற்ற மரங்களைப் போல் மேல்நோக்கி வளர்வதற்குப் பதிலாக, அதன் கிளைகளிலிருந்து தொங்கும் விழுதுகளைப் பயன்படுத்துகிறது. இந்த விழுதுகள் தரையை அடையும்போது அவை புதிய மரக்கிளைகளாக வளர்ந்து மரத்தை மேலும் மேலும் விரிவடையச் செய்கின்றன. இந்தத் தனித்துவமான வளரும்முறைதான் சிலவற்றை இவ்வளவு பெரிய ஆலமரமாக உருமாற வழிவகுக்குகிறது.
செய்தி:ஹரிகுகன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|