ஆப்கான் புரூஸ் லீ...
தற்காப்புக் கலைஞரும், நடிகருமான புரூஸ் லீயை உலகமே அறியும். இப்போதும் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்ளும் அத்தனை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் அவரே ஆதர்சம். ஆனால், ஆப்கானிஸ்தான் புரூஸ் லீ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
 சமீபத்தில் வெளியான, ‘Bloodline’ என்ற இந்திய திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார் இந்த ஆப்கான் புரூஸ் லீ. இந்தப் படத்தில் அவரைப் பார்ப்பவர்கள் நிச்சயம் புரூஸ் லீயின் ஏஐ என்றுதான் நினைக்கக்கூடும்.அந்தளவுக்கு அச்சு அசலாய் புரூஸ் லீ தோற்றத்தில் இருப்பவர். இவருக்கும் ஹாங்காங்கின் ஒரிஜினல் டிராகனான புரூஸ் லீதான் ஆதர்சம். இவர் பெயர் அப்பாஸ் அலிஸாடா. வயது 31. பூர்வீகம் ஆப்கானிஸ்தான். ஆனால், வசிப்பதோ லண்டனில்.
 காரணம் ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியான சூழல். ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கே கலைகளுக்கெல்லாம் இடமே கிடையாது. இதைவிட அப்பாஸ் அலிஸாடாவின் இனக்குழுவும் மதப் பிரிவும் அவர்களுக்கு ஒவ்வாத ஒன்று. அதனால், பாதுகாப்பிற்காக அங்கிருந்து வெளியேறி மனைவி, குழந்தைகளுடன் லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். உண்மையில் ஒரிஜினல் புரூஸ் லீயைவிட இந்த ஆப்கான் புரூஸ் லீயின் கதை இன்னும் சோகம் நிறைந்தது.
அப்பாஸ் அலிஸாடா ஆப்கானிஸ்தானின் ஹசாரா எனும் சிறுபான்மை இனக் குழுவைச் சேர்ந்தவர். ஹசாரா இனக்குழுவினர் பெரும்பாலும் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். பாரசீக மொழிகளான டாரி மற்றும் ஹசாராகியைப் பேசுபவர்கள். அதுமட்டுமல்ல. ஹசாராக்கள் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட இனக்குழுக்களில் ஒன்றாவர்.
குறிப்பாக 19ம் நூற்றாண்டில் அப்துர் ரஹ்மான் கானின் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் ஆட்சியின்கீழ் பல ஹசாராக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அறுபது சதவீத ஹசாராக்கள் படுகொலை செய்யப்பட்டதாக சொல்கின்றன வரலாற்றுத் தகவல்கள். மீதி இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மத்திய மலைத்தொடர் பகுதிக்குள் வலுக்கட்டாயமாக குடியேற்றம் செய்யப்பட்டனர். பின்னர் ஹசாராக்கள் வாழ்ந்த இடத்தில் பாஷ்டூன் இன மக்களையும், நாடோடிகளையும் அப்துர் ரஹ்மான் கான் குடியேற்றம் செய்தார். ஹசாரா மக்கள் குடியேற்றப்பட்ட இடம் இப்போது ‘ஹசாராஜத்’ எனப்படுகிறது. அதாவது ‘ஹசாராக்களின் நிலம்’ என்பது இதன் பொருள். தவிர தற்போது காபூல், பால்ஹ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஹசாரா இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு போர்களைச் சந்தித்த ஆப்கானிஸ்தானை, 1979ம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்தது. பின்னர் 1989ம் ஆண்டு அங்கிருந்து ரஷ்யா வெளியேறியது. பிறகு வந்த தாலிபான்கள் மீண்டும் ஹசாராக்களைக் கொடுமைப்படுத்தினர்.
2001ல் செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் வந்தது. இதன்பின்னர் அமைதி நிலவியது. இந்தக் காலகட்டமே ஆப்கான் புரூஸ் லீயான அப்பாஸ் அலிஸாடாவை மேலெழுந்து செல்ல உதவியது. அவரின் கனவை நனைவாக்கியது.
நான்கு சகோதரிகள், மூன்று சகோதரர்கள் உள்ள பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் அப்பாஸ் அலிஸாடா. தந்தை முகமத் ரீஸா ஆட்டோ மெக்கானிக். வறுமையான குடும்பப் பின்னணி. இந்நிலையில்தான் அங்குள்ள அகடமியிலும் தன்னிச்சையாகவும் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டார் அப்பாஸ் அலிஸாடா.
முதன்முதலாக அவர் புரூஸ் லீயின், ‘என்டர் த டிராகன்’ படத்தை எட்டு வயதில் பார்த்துள்ளார். அதிலிருந்தே தற்காப்புக் கலை மீது அப்பாஸுக்கு அதீத ஆர்வம் வந்துள்ளது. தொடர்ந்து 12 வயதில் குங்ஃபூ கற்றுள்ளார். பிறகு கராத்தே, கிக் பாக்ஸிங் உள்ளிட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். தாலிபான் அரசு அப்புறப்படுத்தப்ட்டதால்தான் இதுவும் சாத்தியமானது. தாலிபான் ஆட்சி அகன்ற பிறகு காபூலின் லோக்கல் பஜாருக்கு வெளிநாட்டுப் படங்களின் டிவிடிக்கள் வந்துள்ளன. அப்பாஸ் குடும்பத்தாலும் மலிவு விலைக்கு டிவி வாங்க முடிந்துள்ளது. பின்னர் அப்பாஸ் அதன்வழியே புரூஸ் லீயின் படங்களைப் பார்த்துள்ளார். அப்படியாக 12 வயதில் தற்காப்புக் கலையில் பயிற்சியெடுத்துள்ளார்.
ஒருமுறை ஜிம்மிற்குச் சென்ற போது அப்பாஸின் நண்பர் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். காரணம், புரூஸ் லீ மாதிரியே அவர் இருந்ததுதான். அவர், அப்பாஸ் அலிஸாடாவின் தோற்றம் புரூஸ் லீயைப் போல இருப்பதாகச் சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
இதற்கிடையே அப்பாஸ் அலிஸாடாவின் 14 வயதில் தந்தை முகமத்திற்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், அவர் ஜிம்மிற்கோ அல்லது தற்காப்புக் கலை அகடமிக்கோ செல்லமுடியவில்லை. வீட்டிலிருந்து புரூஸ் லீயின் படங்களைப் பார்த்து மேற்கொண்டு பயிற்சியெடுத்துள்ளார்.
பிறகு அவரின் 20 வயதில் தற்காப்புக் கலையை வீடியோ எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக 2014ம் ஆண்டு, ‘புரூஸ் ஹசாரா’ என அவரின் நண்பர் ஃபேஸ்புக்கில் இவரை ஹைலைட் செய்ய, அப்பாஸ் அலிஸாடாவைப் பலரும் ஃபேஸ்புக்கில் பின்தொடரத் தொடங்கினர். ஆப்கான் புரூஸ் லீ என அழைக்கப்படலானார். 2015ம் ஆண்டு அஜர்பைஜான் திரைப்படக் குழுவினர் அவரை அணுகி, ‘Brat Li’ என்ற படத்தில் நடிக்கக் கேட்டனர். புரூஸ் லீயை நினைவுபடுத்தும் விதமாக அமைந்த அந்தக் கதாபாத்திரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் அப்பாஸ் அலிஸாடா. இதிலிருந்து அவரின் சினிமா கிராஃப் தொடங்கியது. தொடர்ந்து அங்கே ஐந்து விளம்பரப் படங்களில் நடித்தார். இதற்கிடையே தற்காப்புக் கலை தெரிந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹீனாவை மணந்தார்.
இந்நிலையில் 2021ம் ஆண்டு அமெரிக்கா தனது துருப்புகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற, அதிர்ச்சியடைந்தார் அப்பாஸ் அலிஸாடா. ஏனெனில், தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்றது. உடனே உஷாரான அப்பாஸ் அலிஸாடா அங்கிருந்து வெளியேற முயன்றார். காரணம், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ‘காஸா ஸ்வான்’ என அறியப்பட்ட புகழ்பெற்ற காமெடியன் நாசர் முகமத்தை படுகொலை செய்ததுதான்.
தாலிபான் கிளர்ச்சியாளர்கள் அவரை காரினுள் பிடித்து வைத்திருந்த வீடியோ அப்போது வைரலானது. இதன்பிறகு அவரின் புல்லட் துளைக்கப்பட்ட உடல்தான் கிடைத்தது. இந்நிலையிலேயே அப்பாஸ் அலிஸாடா, தன்னுடைய மனைவி ஹீனா மற்றும் குழந்தைகள் அல்மாஸ், எலியாஸ் ஆகியோருடன் அங்கிருந்து வெளியேற நினைத்தார்.
ஆனால், பிறந்து இரண்டு வாரமே ஆன குழந்தை எலியாஸிற்கு பாஸ்போர்ட் கிடையாது. இதனால், அங்கிருந்து குடும்பத்துடன் ரகசியமாக பாகிஸ்தான் வந்தவர், பிறகு ஈரான் சென்றுள்ளார்.
அப்போது தூக்கமில்லாமல் ஒரு குடிசையில் தன் குடும்பத்துடன் வாழ்க்கையைக் கழித்ததாக வேதனையுடன் குறிப்பிடுகிறார் அப்பாஸ் அலிஸாடா. பிறகு லண்டனிற்குத் தெரிந்த ஒருவர் மூலமாக போய்ச் சேர்ந்துள்ளார்.
அப்போது புரூஸ் லீயின் புகழ்பெற்ற சொற்றொடரான, ‘தண்ணீரைப் போல இரு’ என்பதுதான் நினைவில் வந்ததாகச் சொல்கிறார் அப்பாஸ் அலிஸாடா. தண்ணீரை எதில் அடைத்தாலும் அதுபோலவே மாறிவிடும்.
கப் உள்ளே அடைத்தால் கப்பின் வடிவத்தைத் தண்ணீர் எடுக்கும்.இதன்பொருள், வாழ்விற்குத் தகுந்தபடி நெகிழ்வாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படியே வாழ்வதாகச் சொல்கிறார் அவர். இன்று இங்கிலாந்தில் வாழும் தெற்காசிய மக்களிடையே செலிபிரிட்டியாக ஜொலிக்கிறார் ஆப்கான் புரூஸ் லீயான அப்பாஸ் அலிஸாடா. இங்கிலாந்து சென்றபிறகும் அவர் சும்மா இருக்கவில்லை. அங்கிருந்த ஹாங்காங்கைச் சேர்ந்த தற்காப்புக் கலை மாஸ்டர் சாமுவேல் குவோக்கிடம் மென்மேலும் பயிற்சியெடுத்துள்ளார். தற்போது தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்வதாகச் சொல்கிறார் அவர். சமீபத்தில் வெளியான, ‘Bloodline’ திரைப்படம் அவருக்கு இன்னும் ஒரு பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
பிரிட்டிஷ் - இந்திய தயாரிப்பான இந்தப் படம் கேரளாவில் எடுக்கப்பட்டது. அதிரடி த்ரில்லர் படமான இதில் தற்காப்புக் கலைஞராகவே சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார் அப்பாஸ் அலிஸாடா.இந்தப் படத்தின் தயாரிப்பிலும், இணை இயக்குநராகவும், கதையாசிரியராகவும் நடிகர் ஜோஜோ ஜார்ஜ் பங்காற்றியுள்ளார்.
மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தின் அனுபவம், தனக்கு இன்னும் உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் அப்பாஸ் அலிஸாடா. முதல்முறையாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா வந்துள்ள அவருக்கு இந்திய மக்களின் விருந்தோம்பலும் மிகவும் கவர்ந்துள்ளதாக நெகிழ்கிறார். இன்று சினிமாவிற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணிக்கும் இந்த ஆப்கான் புரூஸ் லீயின் கனவு என்பது என்றாவது ஒருநாள் ஆப்கானிஸ்தான் சென்று சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதே!
பேராச்சி கண்ணன்
|