அமெரிக்காவுக்கு முன் இந்தியாவில் வெளியாகும் உலகின் ஹை பட்ஜெட் படம்!
உலகமெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படம், ‘மிஷன் இம்பாசிபிள் த ஃபைனல் ரெக்கோனிங்’.  விறுவிறுப்பான திரைக்கதையாலும், வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்களைத் தன்வசமாக்கிய ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட வரிசையில் எட்டாவதாக வெளியாகப்போகும் திரைப்படம் இது. உலகமெங்கும் வருகிற மே 23ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் 17ம் தேதியே வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் இவ்வளவு எதிர்பார்ப்புகளை உருவாக்க முழுமுதற்காரணம் இதன் நாயகன் டாம் குரூஸ் என்றால் மிகையாகாது. ஆக்ஷன் புயலாக வலம் வரும் டாமின் வயது 62 என்பது ஆச்சர்யம்.
 *டாம் குரூஸும், மிஷன் இம்பாசிபிளும்
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டாம் குரூஸ். நான்காவது படிக்கும்போதே பள்ளியில் நடந்த நாடகத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆறாவது படிக்கும்போது அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். டாமின் அம்மா இன்னொரு திருமணம் செய்துகொண்டார்.
அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்தார் டாம். 18 வயதில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி நியூயார்க் வந்தார். ஹோட்டலில் மேசையைத் துடைப்பது உட்பட பல வேலைகளைப் பார்த்து, பணம் சேர்த்தார். தொலைக்காட்சித் தொடர்களில் ஏதாவது நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வந்தவர், ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது தனிக்கதை.
உலகளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் நடித்தவர், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் டாம். அவரது திரைப்பட வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம்தான் ‘மிஷன்: இம்பாசிபிள்’. இதன் முதல் பாகம் 1996ம் வருடம் வெளியானது. இதில் ஈதன் ஹன்ட் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ஷனில் அசத்தியிருப்பார்.
எந்தவிதமான டூப்பும் இல்லாமல் , உயிரைப் பணயம் வைத்து அவரே எல்லா சண்டைக்காட்சிகளிலும் நடித்திருப்பார். புகழடைந்து வரும் காலம் என்பதால் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் அவர் நடித்திருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்றும், அதாவது புகழின் உச்சியில் இருக்கும் காலத்திலும், உண்மை எது... டூப் எது... என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி படமாக்க தொழில்நுட்பம் கைவசம் இருக்கும் காலத்தில்கூட டூப் போடாமல் உயிரைப் பணயம் வைத்து சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார் டாம். அதுவும் 60 வயதில்.
*ஈதன் ஹன்ட்
பெரும் ஆபத்துகள் மற்றும் சவாலான மிஷன்களை திறம்பட கையாள்வதற்காக ‘இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸ் (ஐஎஃம்எஃப்)’ எனும் அரசின் ரகசிய ஏஜென்சி இயங்கிவரும். இந்த ஃபோர்ஸை இயக்கும் ஏஜென்ட்தான் ஈதன் ஹன்ட். ஜேம்ஸ் பாண்டுக்கு நிகரான கதாபாத்திரம் இது.
*பட்ஜெட்
‘மிஷன் : இம்பாசிபிள்’ பட வரிசையில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் இதுதான். இதன் பட்ஜெட் இந்திய மதிப்பில் சுமார் 3400 கோடி ரூபாய்.படத்தின் இயக்குநரான கிறிஸ்டோபர் மெக்குவாரியும், டாம் குரூஸும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றனர். டாம் குரூஸ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமும் இதுதான். மட்டுமல்ல, உலகிலேயே அதிக பொருட்செலவில் உருவான படங்களில் இதுவும் ஒன்று.
*கதை
ஒரு ஏஐ புரோகிராம் மூலம் உலகையே பலவீனப்படுத்தி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிடுகிறான் வில்லன். தனது குழுவுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தை எப்படி ஈதன் ஹன்ட் நிறுத்துகிறார் என்பதே படத்தின் ஒன்லைன்.
த.சக்திவேல்
|