தக்காளியும் வாரம் 100 மணிநேர வேலையும்!



லைம் லைட்டுக்கு இது வரக் காரணம் எலான் மஸ்க்தான்.இன்றைய தேதியில் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய நபர்தான். உலகிலுள்ள 90 சதவிகித மக்களின் வாழ்க்கையை - வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் அமெரிக்காவுக்கு ஆலோசனைகளை வழங்குபவர்...
என இவர்மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மொழிகளிலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.அப்படிப்பட்ட இந்த மனிதர் சொன்ன ஒரு விஷயம் மட்டும் பாசிடிவ்வாக பூமி கிரகம் முழுக்க பரவி வருகிறது.

வேறொன்றுமில்லை. வாரம் ஒன்றுக்கு 100 மணிநேரம் எலான் மஸ்க் வேலை செய்கிறார். அப்படித்தான் பரவலாக சொல்லப்படுகிறது. அப்படியேதான் அவரும் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்த 100 மணிநேரத்தில் எக்ஸ் (டுவிட்டர்), ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, போரிங் கம்பெனி... என நான்கு நிறுவனங்களை நிர்வாகம் செய்கிறார்.

இது எப்படி சாத்தியம்?

சிம்பிள். நேர மேலாண்மைக்காக ‘பொமோடோரோ’ (Pomodoro Technique) எனும் உத்தியை பயன்படுத்துவதாக சொல்கிறார் மஸ்க்.

அதென்ன ‘பொமோடோரோ’?

இத்தாலியில் ‘பொமோடோரோ’ என்றால் ‘தக்காளி’ என்று அர்த்தம். அதனால் நாம் இதை ‘தக்காளி உத்தி’ என்றே அழைக்கலாம். தப்பில்லை. யாரும் வழக்கு தொடுக்க மாட்டார்கள்.
‘பொமோடோரோ’ உத்தி என்பது 1980களின் பிற்பகுதியில் ஃபிரான்செஸ்கோ சிரில்லோ என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர மேலாண்மை முறை.

ஃபிரான்செஸ்கோ சிரில்லோ என்பவர் இத்தாலிய மாணவர். இவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, நேரத்தை திறமையாக நிர்வகிக்க ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தார். அந்த பிராசஸில் அவர் வந்து சேர்ந்த இடம்தான் தக்காளி வடிவ கடிகாரம்! இதைப் பயன்படுத்தி அதன் மூலம் தன்னுடைய வேலை நேரத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்தார்; பணியாற்றினார்.

இப்படி அவர் தக்காளி வடிவ டைமரைப் பயன்படுத்தியதால், இந்த முறைக்கு ‘பொமோடோ ரோ டெக்னிக்’ என்ற பெயர் வந்தது.

ரைட். தக்காளி உத்தி எப்படி வேலை செய்கிறது?

முதலில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இது ஒரு வீட்டுப்பாடமாக இருக்கலாம் அல்லது ஒரு அலுவலக வேலையாக இருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒரு வேலையாக இருக்கலாம்.சரியா? உடனே செல்போனில் 25 நிமிடங்களுக்கு டைமரை செட் செய்துவிட்டு, எந்த வேலையை எடுத்துக் கொண்டீர்களோ அந்த வேலையை மட்டும் செய்யுங்கள். 

அந்த வேலைக்காக மட்டும் 25 நிமிடங்களை முழுமையாக செலவிடுங்கள். அதில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இந்த 25 நிமிடங்களுக்கு எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது. உதாரணமாக, மொபைல் நோட்டிஃபிகேஷன்களை பார்க்கக்கூடாது. பிரவுசிங் செய்யக்கூடாது.

இப்படி 25 நிமிடங்கள் வேலை செய்த பிறகு, 5 நிமிடங்கள் பிரேக். இந்த இடைவேளையில் நீங்கள் எழுந்து நடக்கலாம், தண்ணீர் குடிக்கலாம் அல்லது வேறு ஏதாவது ரிலாக்ஸாக இருக்கக்கூடிய விஷயங்களைச் செய்யலாம். 

முக்கியமாக வேலையைப் பற்றியே யோசிக்காமல் இருப்பது நல்லது.இதன்பின் வேலையைப் பொறுத்து அடுத்த ‘பொமோடோ ரோ’வை மீண்டும் தொடங்கலாம். அதாவது வேறொரு வேலை. அதே 25 நிமிடங்கள். அதே கவனம். அதே அர்ப்பணிப்பு. பிறகு 5 நிமிடங்கள் பிரேக். ரிலாக்ஸ்.

இப்படி ஒரு நாளில் நான்கைந்து ‘பொமோடோரோ’களை செய்தால், ஜஸ்ட் ஒரு இரண்டு மணிநேரத்தில் பெரிய பெரிய விஷயங்களைச் செய்ய முடியும்; சாதிக்க முடியும்; இலக்கை அடைய முடியும் என்கிறார் எலான் மஸ்க்.

இதில் இன்னொரு உண்மையும் புதைந்திருக்கிறது. உங்கள் வேலையை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு சிறு பகுதிக்கும் ஒரு ‘பொமோடோரோ’ என ஒதுக்கினால் போதும். முழு வேலையையும் முழுமையாக முடிக்கலாம் என்பதுதான் அந்த சீக்ரெட்.

2006ம் ஆண்டில் சிரில்லோ ‘பொமோடோரோ டெக்னிக்’ எனும் பெயரில் இதுகுறித்து விரிவாக அதேநேரம் சுருக்கமாக எழுதி மின் நூலாக அதுவும் இலவசமாக வெளியிட்டார். அது இருபது லட்சம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டது. 

அப்படி டவுன்லோட் செய்தவர்களில் ஒருவர் எலான் மஸ்க்!ஆக, தக்காளி உத்தியை நாம் பயன்படுத்தினால் விரைவில் பெரிய தக்காளித் தொக்காக ஆகலாம்! ‘பொமோடோரோ’ டைமரை செட் பண்ணுங்க... பெல்லை அழுத்துங்க... ஃபாலோ பண்ணுங்க... வாழ்க்கைல ஜெயிச்சுக் காட்டுங்க!

என்.ஆனந்தி