இது போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர் படம்!
‘‘டைட்டிலுக்கு ஏற்ற மாதிரிதான் ‘கலியுகம்’ படம் இருக்கும். படம் பார்க்க வரும் ஆடியன்சுக்கு முழுமையான த்ரில்லிங் அனுபவம் கிடைக்கும்.’’ உற்சாகமாகத் துவங்கினார் இயக்குநர் பிரமோத் சுந்தர்.‘‘ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்ன்னு கூட சொல்லலாம்.  முக்கியமா சொல்லணும்னா படம் பாத்த பிறகு இரண்டு மூணு நாளாவது படத்தோட பாதிப்பு ஆடியன்ஸ் மனசுல தங்கியிருக்கும்.’’அபோகலிப்டிக் களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எந்த விதத்தில் புது அனுபவமாக இருக்கும்..? 
ஆக்சுவலா இது போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர் படம். புது ஜானர்னு சொல்லலாம். இந்த ஜானர்ல பிரபாஸ் நடிச்ச ‘கல்கி’ வந்திருக்கு. ஆனால், அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழில் இது மாதிரி படம் வந்ததில்லைன்னு சொல்லலாம்.கலியுகம் முத்திப்போச்சுன்னா என்ன நடக்கும் என்பது படத்தோட அடிப்படை கதைக் கரு. இப்போது பணம், பொருள் என எல்லாமே மெட்டீரியலிஸ்டிக் லைஃப் நோக்கிதான் போய்க் கொண்டு இருக்கிறோம். உயிர் வாழ்வதற்வதற்கான அடிப்படை தேவையான தண்ணீர், உணவு போன்றவற்றை ரொம்ப அலட்சியப்படுத்துகிற சூழ்நிலையை எங்கும் பார்க்க முடிகிறது. அப்படி இந்தக் கதையின் ஐடியாவாக என்ன சொல்லலாம் என்றால், இப்போது எதை அலட்சியப்படுத்துகிறோமோ அது இல்லாத, கிடைக்காத காலகட்டம் வந்தால் எப்படி இருக்கும்? இதுதான் லைன்.இப்போது அதிக முக்கியத்துவம் தரும் பணம், பொருள் போன்றவை மதிப்பு இழந்து அடிப்படை தேவையான உணவு கிடைக்காதபோது மக்கள் எவ்வளவு கஷ்டப் பட நேரிடும் என்பதுதான் கதை.
கலியுகம் என்பதால் மக்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் என்ன மாதிரி கஷ்டத்தை சந்திக்கிறார்கள், எப்படி சர்வைவல் பண்றாங்க என்பதை மிகைப்படுத்தாமல் சொல்லியுள்ளோம். அதுக்காக ஆர்ட் ஃபிலிம் மாதிரி இருக்குமோன்னு பயப்பட வேண்டாம். ஆடியன்ஸை என்டர்டெயின் பண்ற மாதிரி முழுமையான் த்ரில்லர் படமாக இருக்கும்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை எப்படி தேர்வு பண்ணீனிங்க?
வேற சில முன்னணி கதாநாயகிகள் இந்தப் படத்தை செய்ய ஆர்வமாக இருந்தாலும் ஷ்ரத்தா மட்டுமே கதைக்கும், கேரக்டருக்கும் பொருத்தமாக இருந்தார். கதை சொல்லும்போதே புரிஞ்சு, அவருடைய இன்புட்ஸ் கொடுத்தார்.
அதை வெச்சு அவர்தான் எங்கள் ஹீரோயின்னு முடிவு பண்ணினோம்.ஷூட்டிங்கில் 200 சதவீதம் பங்களிப்பைக் கொடுத்தார். ஷ்ரத்தா பெரிய படங்கள் செய்தவராக இருந்தாலும் அவருடன் மிக சுலபமாக வேலை செய்ய முடியும். ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவார். டெடிகேஷன் ப்ரொஃபஷனலா இருக்கும். கவனம் முழுவதும் கேரக்டர் மீது இருந்ததால் கேரக்டருக்கு முடிந்தளவுக்கு நியாயம் செய்தார்.எனக்கு இது முதல் படம். ஆனால், அவருடைய பெர்ஃபாமன்ஸை அருகில் இருந்து கவனிச்சது நல்ல அனுபவம். மற்ற படங்களில் அவருடைய பெர்ஃபாமன்ஸ் பார்த்து வியந்து இருப்போம். இந்தப் படத்திலும் அதை கொண்டு வந்தார்.
ஷ்ரத்தாவைப் பொறுத்தவரை ஸ்கோப் உள்ள கேரக்டர் மட்டுமே பண்ணியிருக்கிறார். அதுமாதிரி இதுல அவருக்கு வலுவான கேரக்டர்.ஷ்ரத்தாவுக்கு அடுத்து கிஷோர் சார் ரோல் முக்கியமா இருக்கும்.
அவருடன் வேலை செய்த அனுபவம் வித்தியாசமனது. இறங்கிப் பண்ணியிருக்கிறார். சீனியர் ஆக்டர். ஆனால், செட்ல ஃப்ரெண்ட்லியா இருந்தார். அவரும் நல்ல கேரக்டர் இருந்தால் மட்டுமே படங்கள் செய்கிறவர். அவருக்கான தீனி இருந்ததால்தான் இந்தப் படத்தை கமிட் பண்ணினார். இந்த மாதிரி கதைக்கு டெக்னிக்கல் டீம் முக்கியமாச்சே..?
ஆமாம். அந்தக் கவலை இல்லாதபடி டெக்னிக்கல் டீம் பிரமாதமா ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மியூசிக் டான் வின்சென்ட். கேரளாவில் பல படங்கள் செய்தவர். மாநில விருது வாங்கியவர். தமிழில் இது முதல் படம். இரண்டு பாடல்கள். பேக்ரவுண்ட் ஸ்கோர் படம் பார்க்கும்போது பேசப்படும்.
ராம் சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் சார் டீம். ‘ஹிட்லிஸ்ட்’ பண்ணியவர். டிரைலர் விஷுவலில் அவருடைய மெனக்கெடல் தெரியும். கலர் கிரேடிங் வழக்கமாக இருக்கிற மாதிரி இருக்காது. ஒவ்வொரு ஃப்ரேமையும் பார்த்துப் பார்த்து பண்ணியிருக்கிறார்.
இந்தப் படத்தோட முக்கியமான அம்சம் சாப்பாடு, தண்ணீர் இல்லாத வறட்சியான காட்சி அமைப்பு... அதை ரசிகர்கள் ஃபீல் பண்ண வைக்கணும். இந்த சம்மருக்கு ரிலீஸ் செய்ய காரணமும் அதுதான்.
கோடை காலம் என்றால் மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படுவதைப் பார்க்க முடியும். அந்த வகையில் ரசிகர்கள் சுலபமாக கனெக்ட் பண்ணுமளவுக்கு விஷுவல்ஸ் இருக்கும்.
எடிட்டிங் நிமல். ஆர்ட் டைரக்ஷன் சக்தி. தயாரிப்பு கே.எஸ்.ராமகிருஷ்ணன். ஃபிலிம் சேம்பர் துணைத் தலைவர். அவருக்குதான் என் முதல் நன்றியை சொல்லணும். வித்தியாசமான கதையை எடுக்க முன்வந்தார்.
இது தமிழ், தெலுங்கு என இரு மொழி படம். அவர் கிடைச்சது பெரிய ஆசீர்வாதம். பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். டைரக்ஷன் பண்ற ஐடியாவுல சினிமாவுக்கு வந்தவர் என்பதால் கதையோட ஆழத்தை புரிஞ்சுக்க முடிஞ்சது. இந்தப் படத்தை சிஜி, செட் ஒர்க் இல்லாமல் பண்ண முடியாது. அதற்கு தாராளமா செலவு செய்தார்.
தயாரிப்பாளர் தாணு என்ன சொன்னார்?
ஆரம்பத்துல இருந்து எங்களுக்கு அவர்தான் சப்போர்ட். பூஜை அன்று படத்தை தொடங்கி வெச்சார். இப்போது ரிலீஸ் டேட்டையும் அவர்தான் அறிவித்தார்.
நாங்கள் சந்திச்சபோது ‘சச்சின்’ ரீரிலீஸ் வேலையில் பிசியா இருந்தார். அதற்கு நடுவே எங்களுக்கு டைம் கொடுத்து போஸ்டர் வெளியிட்டது பெரிய மகிழ்ச்சி.
மணிரத்னம் சார் தெலுங்கு போஸ்டர் ரிலீஸ் பண்ணினார். ராம்கோபால் வர்மா சார் தெலுங்கு டிரைலர் ரிலீஸ் பண்ணினார். சினிமா ஜாம்பவான்கள் டிரைலர் பார்த்துவிட்டு பாராட்டியது பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
யார் இந்த பிரமோத்?
சொந்த ஊர் சென்னை. என்ஜினியரிங் படிச்சுட்டு சினிமாவுக்கு வந்தவர்களில் நானும் ஒருவன். விளம்பரத் துறையில் சில காலம், ஐடியில் சில காலம் என வருஷங்கள் போச்சு.
விஜி சந்திரசேகர் மேடம் நடிச்ச ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்’ குறும்படம் எடுத்ததும் சினிமா பண்ணலாம் என்ற தைரியத்தைக் கொடுத்துச்சு. உதவி இயக்குநராக யாரிடமும் வேலை செய்யவில்லை. முதல் படம்தான் என்னுடைய லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ். நிறைய சீனியர்ஸ் வேலை செய்தார்கள். அவர்களிடம் கத்துக்கிட்டதுதான்.
எஸ்.ராஜா
|