மரபணு பொருத்தம்!
ஆம். திருமணத்துக்கு இப்போது ஜாதக பொருத்தத்தை தாண்டி மரபணு பொருத்தம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. பொதுவாக நெருங்கிய உறவினர்களுக்குள் இப்பொழுது திருமணம் செய்வது கிடையாது.  அப்படி திருமணம் செய்தால் மரபணு பிரச்னையால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு அதிகம் என்ற மருத்துவ ஆய்வும்; அது தொடர்பான விழிப்புணர்வும் மக்களிடம் இன்று அதிகரித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஆண், பெண் இருவருக்கும் மரபணு சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதில் கர்நாடகா மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  கர்நாடகாவில் 27 சதவீதம் பேர் ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே மரபணு சோதனை செய்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் சமீபமாக அங்கு பிரபலமடைந்து வருகிறது.
நவீன தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் பெங்களூரில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது படிப்பு, வேலை, குடும்ப பின்னணி குறித்து ஆய்வு செய்த பிறகு ஜாதகம் பார்க்கின்றனர். அதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மரபணு சோதனை செய்து கொள்கின்றனர்.
இதுபோன்ற மரபணு சோதனை செய்துகொள்ள 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ‘அமெரிக்கா போன்ற நாடுகளில் மரபணு சோதனைக்கும் சுகாதார காப்பீடு பாலிசிகள் உண்டு. ஆனால், இந்தியாவில் அத்தகைய காப்பீட்டு வசதியில்லை. பொதுமக்கள் இதுபோன்ற மரபணு சோதனை எடுத்துக்கொள்ள பயப்படுகின்றனர்.
உறவினர்களுக்குள் திருமணம் செய்யும்போது ஒரே மாதிரியான மரபணு மாற்றம் இருந்தால் திருமணம் செய்ய முடியாமல் போய்விடும் என்று நினைக்கின்றனர். பொதுமக்களிடம் இது தொடர்பாக தவறான கருத்துகள் இருக்கின்றன. மரபணு சோதனை செய்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது போன்ற சோதனைகளை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து கொடுக்கலாம் என்று சில டாக்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பெங்களூரில் அதிகரித்துள்ள இந்த மரபணு பொருத்தம் கலாசாரம் விரைவில் தமிழகத்திலும் பிரபலமாகும் என்கிறார்கள்.
ஜான்சி
|