சொர்க்கத்தின் வாசற்படிகள்!



சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு மலையைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். ஆம்; அந்த மலையின் மீது ஏறி, உச்சியை அடைவதற்காக நகரும் படிக்கட்டுகளை அமைத்திருக்கின்றனர். 
பொதுவாக ஷாப்பிங் மாலில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படும் நகரும் படிக்கட்டுகளை, மலையில் பயன்படுத்தியிருப்பது கடுமையான விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஜியாங்ஸியில் இருக்கும் மலையை ஒட்டி ஒரு சொகுசான தங்கும் விடுதி உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து, மலையில் நகரும் படிக்கட்டுகளை அமைத்திருக்கிறது அந்த ரிசார்ட். 1500 மீட்டர் உயரமுள்ள அந்த மலையின் அடிவாரத்திலிருந்து, உச்சி வரை வளைந்து, நெளிந்து செல்கிறது நகரும் படிக்கட்டுகள். இதற்கு முன்பு சீனாவில் உள்ள தான்யா மலையில் நகரும் படிக்கட்டுகளை அமைத்தனர். ஆனால், அதன் உயரம் குறைவு.

ஜியாங்ஸியின் மலையில் அமைந்திருக்கும் நகரும் படிக்கட்டுகள் நீளமானது மட்டுமல்லாமல், சிக்கலானவையும் கூட. இந்தப் படிக்கட்டுகளின் வழியாக உச்சியை அடைந்து, அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது சொர்க்கத்தையே பார்த்ததைப் போன்ற உணர்வு கிடைக்கும். அதனால் இதனை சொர்க்கத்தின் வாசற்படிகள் என்றும் சொல்கின்றனர்.

வயதானவர்களுக்கு, மலையில் ஏறுவதற்கான உடல் வலுவில்லாதவர்களுக்கு இந்த நகரும் படிக்கட்டுகள் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்கின்றனர். 

இன்னொரு பக்கம் மலையேற்றம் செய்து உச்சியை அடையும்போது கிடைக்கும் உணர்வை நகரும் படிக்கட்டுகள் கொடுக்காது; இந்தப் படிக்கட்டுகள் மலையின் அழகையே கெடுக்கிறது; இயற்கைக்கு எதிராக இருக்கின்றது என்று விமர்சனம் செய்கின்றனர்.

மலையேற்றம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் உச்சியை அடைந்துவிடலாம்; நகரும் படிக்கட்டுகள் மூலம் ஒரு சில நிமிடங்களிலேயே உச்சியைத் தொட முடியும்.

கடந்த 2022ம் வருடம் மலையின் மீது நகரும் படிக்கட்டுகளை அமைப்பதற்கான வேலை ஆரம்பமானது. சமீபத்தில் முழுமையாக நகரும் படிக்கட்டுகளை அமைத்துவிட்டனர்.
விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது இந்த சொர்க்கத்தின் வாசற்படிகள்.

த.சக்திவேல்