ஒரு சாமான்யனும் மூன்று காலகட்டங்களும்!
தமிழ் சினிமாவின் ஆளுமைமிக்க படைப்பாளிகளில் முக்கியமானவர் ஒளிப்பதிவு மேதை தங்கர்பச்சான். காலம் முழுவதும் பேசப்படக்கூடிய ‘அழகி’ படத்தை இயக்கியவர்.
இவருடைய மகன் விஜித் பச்சான் ஹீரோவாக களமிறங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கியுள்ளார்.  இவர், பாலுமகேந்திராவிடம் சினிமா பயின்றவர். ‘‘சினிமாவுக்காக வங்கி வேலையை உதறினேன்’’ என்ற சுருக்கமான அறிமுகத்துடன் பேச ஆரம்பித்தார் சிவப்பிரகாஷ். போஸ்டர், டிரைலர் பார்க்கும்போது ‘ஆட்டோகிராப்’ படத்தை ஞாபகப்படுத்துகிற மாதிரி தெரியுதே?

இது சாமான்யனின் வாழ்க்கையில் மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை. அடிப்படையில் இது காதல் கதை. அதில் நாயகன் சில அநீதியை சந்திக்கிறான். அதற்கு எப்படி பழி வாங்கினான் என்பது சாராம்சம்.இது கதாநாயகனுக்கான கதையாக இருந்தால் வேற மாதிரி பண்ணியிருக்கலாம். கதை நாயகனுக்கான கதை என்பதால் அந்த உயரத்துக்கு ஏத்த மாதிரி பண்ணியிருக்கிறோம்.
‘பேரன்பும் பெருங்கோபமும்’ என்பது மனைவி மீது மிகப்பெரிய பேரன்பும், தனக்கும் தன் மனைவிக்கும் இழைக்கப்பட்ட அநீதியை பெருங்கோபத்தோடும் பார்க்கிறான் என்பதை அர்த்தப்படுத்தும் இந்த டைட்டில்.
பாடப் புத்தகத்துல தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று எழுதப்பட்டிருக்கும். புத்தகத்துல எழுதி வைத்துவிட்டால் தீண்டாமை அழிந்துவிடுமா? அதை சடங்கு மாதிரி படிச்சுட்டு போனவர்கள்தான் அதிகம்.
நடைமுறை வாழ்க்கையில் தீண்டாமை எனும் பெருங்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய கஷ்டத்தை அனுப விக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. தீண்டாமை எனும் பெருங்குற்றத்தை களைய நினைக்கும் சாமானியனின் இந்தக் கதை ரசிகர்களின் இதயத்தை தொட்டுச்செல்லும். விஜித் பச்சானை ஹீரோவாக எப்படி தேர்வு செய்தீர்கள்?
இந்தக் கதையை சித்தார்த், மணிகண்டன், கதிர் என சில ஹீரோக்களிடம் சொல்லியிருந்தேன். கதை அவர்களுக்கு பிடிச்சிருந்தாலும் அவர்களுடைய பிஸி ஷெட்யூலில் கால்ஷீட் ஒதுக்க முடியாத இடத்தில் இருந்தார்கள். மூன்று காலகட்டத்துல நடக்கும் கதை என்பதால் ஒவ்வொரு ஷெட்யூலுக்கும் கெட்டப் மாறணும். பிசி நடிகர்களால் அது சாத்தியமில்லை.
தயாரிப்பாளரிடம் கதை சொல்லும்போது யாரை மனசுல வெச்சு இருக்கீங்கன்னு கேட்டார். கதிர், மணிகண்டன் பெயர்களைச் சொன்னேன். எதுக்கு கதிர் பேர் சொன்னீங்க என்றார்.
‘பரியேறும் பெருமாள்’ பண்ணியிருந்தார்.
அதுக்கு நேர் எதிரான கேரக்டர் இதுல பண்ணா நல்லாயிருக்கும்னு சொன்னேன். ‘பரியேறும் பெருமாள்’ படத்துல முதலில் யார் கமிட்டானார்ன்னு தெரியுமான்னு சொல்லி அதுல விஜித் பச்சான் கமிட்டாகி நடிக்க முடியாமல்போன விஷயத்தை சொன்னார்.
விஜித் பச்சானை சந்திக்கும்போது அவர் கதைக்கு ஏற்ற நாயகனாக தெரிஞ்சார். விஜித்துக்கு சினிமா தெரியும். கூத்துப்பட்டறை மாணவர். இரண்டு மாத ஒர்க் ஷாப்ல ஜீவா கேரக்டராகவே மாறியிருந்தார். அதன் பிறகுதான் ஷூட் போனோம்.நாயகி ஷாலி நிவேகாஸ். தமிழ்ல பொளந்துகட்டுவாங்க.
என்ஜினியரிங் படிச்ச அவருடைய சினிமா ஆர்வத்தை ‘செங்களம்’ வெப் சீரிஸ்ல பார்த்திருப்பீங்க. பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். பெருமைக்காகச் சொல்லவில்லை. தமிழில் பெரிய உயரம் தொடுவார். அவரும் மூன்று கெட்டப்ல வர்றார். இவர்களுடன் மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா, லோகு, தீபா, சாய் வினோத் ஆகியோரும் இருக்கிறார்கள். இளையராஜா கம்போஸிங் அனுபவம் எப்படி இருந்துச்சு?
இந்தப் படத்துக்கு தயாரிப்பாளரிடமிருந்து வந்த ஒரே கோரிக்கை இதற்கு இளையராஜா இசை அமைத்தால் படத்தை உடனே ஆரம்பிச்சுடலாம்ன்னு சொன்னார். ராஜா சார் மியூசிக்ல படம் பண்ணணும் என்பது எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் கனவு. முதல் பட இயக்குநரான எனக்கு அது பெரிய உயரமா இருந்துச்சு.
தயாரிப்பாளர் அந்த வழியைக் காண்பிச்ச பிறகு கரும்பு தின்னக் கூலியா என்பது மாதிரி அடுத்த நாளே ராஜா சார் ஸ்டுடியோவுல போய் உட்கார்ந்துவிட்டேன். ராஜா சாருடன் கம்போஸிங் உட்கார்ந்த அனுபவம் அருமை. கதை கேட்டதும், பண்ணலாம்னு அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். அரை மணி நேரத்துக்கு முன்பே போய் உட்கார்ந்துவிட்டேன். ‘பாடல் சிச்சுவேஷன் சொல்லுங்க’ன்னு கேட்டு, பாடலை எழுதிக்கோன்னு பாடல் வரிகளை சொல்ல ஆரம்பிச்சார். அடுத்த சந்திப்பே கம்போஸிங்கா என்ற ஆச்சர்யத்துல இருந்த எனக்கு ராஜா சார் பாட்டெழுதுகிறார் என்பது அடுத்த இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. பாடல் எழுதி முடிச்சதும் உடனே கம்போஸிங் பண்ண ஆரம்பிச்சுட்டார். அடுத்த நாள் ரிக்கார்டிங். நாலு நாளில் மூணு பாடல் முடிச்சு கொடுத்துட்டார்.
ராஜா சாரை கன்வின்ஸ் பண்ணிவிட்டால் போதும். பாடல் பிரமாதமா வரும் என்பதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அவரிடம் பெரிய டைரக்டர், சின்ன டைரக்டர் என்ற பாகுபாடு கிடையாது. அவரைப் பொறுத்தவரை ‘நீங்க சொல்றீங்க, நான் வேலை பார்க்கிறேன். அந்த வேலையில் மட்டுமே என் சிந்தனை இருக்கும். வேற வேலை பார்க்கமாட்டேன்’னு சொல்வார். பொதுவாக ஒருவர் வேலையில் இருந்தாலும் ரீல்ஸ், இன்ஸ்ட்டா அல்லது பிற வேலை என கவனம் சிதறும். ராஜா சார் அப்படி அல்ல. நூறு சதவீதம் வேலையில் கவனமா இருப்பார்.
கம்போஸிங் நடக்கும்போது சுவாரஸ்யமான ஒரு விஷயம் நடந்துச்சு. ‘பாட்டு வெளியில் ஹிட்டாகணுமா, கதைக்கு ஏத்தமாதிரி வேணுமா’ன்னு கேட்டார். இரண்டுமே என்றேன். இரண்டுமே என்பதை இப்பவே சொல்ல முடியாது. ஆனால், திருவிழா பாடல் இனிவரும் திருவிழாக்களில் ஒலிக்கும் என்று அந்தப் பாடலை பண்ணிக்கொடுத்தார்.
ஒளிப்பதிவை தினேஷ் குமார் கவனிக்கிறார். ‘எண்ணித் துணிக’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ போன்ற படங்கள் பண்ணியவர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் பண்ணியவர். கதைக்குத் தேவையான நேட்டிவிட்டி, பியூட்டி என எல்லாத்தையும் அழகாகக் கொண்டு வந்தார். தயாரிப்பு E5 என்டர்டைன்மென்ட் காமாட்சி ஜெயகிருஷ்ணன். ‘மெட்ரோ’, ‘கண்ணகி’ படங்கள் செய்தவர்கள்.
உங்கள் குருநாதரிடம் கற்றுக்கொண்ட சினிமா பலன் கொடுத்ததா?
எனக்கு சொந்த ஊர் மதுரை. வங்கியில் வேலை. மனைவி சபீதா இப்ராஹீம். இலக்கியவாதி. அவர் இப்போது இல்லை. மனைவிதான் எனக்கு புத்தக வாசிப்பு மீது ஆர்வத்தை தூண்டியவர். அந்த டோபமைன் அதிகமாக சுரக்க ஆரம்பிச்சதால ஒரு கட்டத்துல ஐம்பது, நூறு புத்தகங்களை மொத்தமாக வாங்க ஆரம்பிச்சேன்.
ஒரு கட்டத்தில் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் சேர்ந்தேன. மற்ற இடங்களில் டைரக்ஷன் கத்துக்கலாம். பாலு மகேந்திரா சாரிடம் ஃபிலிம் மேக்கிங் கத்துக்கலாம். பாலுமகேந்திரா சார் எல்லா கிராஃப்ட்டையும் கத்துக்கொடுப்பார். பாலுமகேந்திரா சார் என்னிடம் சொன்னது, ‘புத்தகம் தன் வாசகனை தேடிக்கொள்ளும். ஒரு படைப்பு அதற்குரிய ஆட்களைத் தேடிக் கொள்ளும்!’.
எஸ்.ராஜா
|