மறைந்துபோன உயிரினங்கள் மீண்டும் பூமியில்..!
உயிர்ப்பிக்கும் பணியில் உலக விஞ்ஞானிகள்
பொதுவாக எந்த ஓர் உயிரினமும் பூமியிலிருந்து முற்றிலுமாக அழிந்துவிட்டால் அதனை மீண்டும் மீட்டுக்கொண்டுவர முடியாது. அதனாலேயே உயிரியலாளர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டி தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.  ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகமோ பூமியிலிருந்து பல நூறு ஆண்டுகளுக்குமுன் மறைந்துபோன உயிரினங்களை மீட்டெடுக்க ஆயத்தமாகி வருகிறது. அதாவது மரபணு பொறியியல் மற்றும் செயற்கை உயிரியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இந்த உலகத்திலிருந்து மறைந்துபோன விலங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளன. 
இதில் woolly mammoth எனும் கம்பளி யானை, டோடோ (dodo) என்ற பறவையினம், தைலாசின் (thylacine) எனும் டாஸ்மேனியன் புலி உள்ளிட்ட மறைந்துபோன உயிரினங்களை விரைவில் பூமிக்குக் கொண்டு வரும் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த கொலோசல் பயோசயின்ஸஸ் எனும் பயோடெக்னாலஜி மற்றும் ஜெனிடிக் எஞ்சினியரிங் நிறுவனம் இந்தப் பணியை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு உருவான இந்நிறுவனம் பழைய டிஎன்ஏ மாதிரிகளை சேகரிப்பதுதான் தங்களின் தலையாய பணி என்கிறது.
இதுமட்டுமல்ல, இத்துடன் விஞ்ஞானிகள், வீட்டு மாடுகளின் மூதாதையராகக் கருதப்படும் அழிந்துபோன ஆரோக்ஸ் (Aurochs) மாடுகள், பயணி புறா (Passenger pigeon), குவாக்கா (Quagga) எனும் வரிக்குரிரை இனம் ஆகியவற்றையும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருக்கின்றனர். விரைவில் இவை மீண்டும் பூமியில் வாழும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக விஞ்ஞானிகள் மறைந்துபோன உயிரினங்களின் டிஎன்ஏ மாதிரிகளிலிருந்து இந்தப் பணியை முன்னெடுக்கின்றனர். இதற்கு குளோனிங், ஜீன் எடிட்டிங், செலக்ட்டிவ் பிரீடிங் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு ஸ்பெயினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அங்கு 2000ம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்துபோன புகார்டோ(bucardo) என்ற ஆட்டினத்தை குளோனிங் முறையில் உருவாக்கினர். ஆனால், இது நுரையீரல் குறைபாடு காரணமாக இறந்துபோனது.
பின்னர் 1980களில் பூஞ்சை நோயால் மறைந்துபோன ஆஸ்திரேலியாவின் பிளாட்டிபஸ் தவளைகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 2013ம் ஆண்டில் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக அமையவில்லை. பிறகு, இதுபோன்ற பரிசோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனாலும் மறைந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் அறிவியல் தொழில்நுட்பம் என்பது வளர்ந்தபடியே இருந்தது. இந்நிலையில்தான் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆறு உயிரினங்களை உயிர்ப்பிக்கும் பணிகளில் விஞ்ஞானிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கம்பளி யானை (woolly mammoth)
கம்பளி யானை என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்துவந்த ஒரு யானைஇனம். இதன் உடல் முழுவதும் ரோமங்களால் போர்த்தப்பட்டிருப்பதால் கம்பளி யானைகள் எனப்படுகின்றன. இது சுமார் 3 லட்சம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடைசி பனி யுகத்தின்போது வாழ்ந்த இனம் எனச் சொல்லப்படுகிறது.
இதில் ஒரு சிறிய அளவிலான எண்ணிக்கை மட்டும் ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள ரேங்கல் தீவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை உயிர் வாழ்ந்துள்ளது. இதன் உறைந்த சடலங்கள்தான் சைபீரியா மற்றும் வடஅமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆர்க்டிக்கில் உள்ள நிரந்தர பனிக்கட்டிகள் இதன் சடலங்களையும் அவற்றின் மரபணுவின் முப்பரிமாண அமைப்பையும்கூட பாதுகாத்துள்ளன. இதனால் இதிலிருந்து சிறந்த டிஎன்ஏவை விஞ்ஞானிகளால் பிரித்தெடுக்க முடியும். இந்நிலையில் கொலோசல் பயோசயின்ஸஸ் நிறுவனம் 2028ம் ஆண்டுக்குள் முதல் கம்பளி யானை குட்டிகளை உருவாக்குவோம் எனக் கூறியுள்ளது.
இந்நிறுவனம் மறைந்துபோன விலங்கின் முழு மரபணுவையும் வரைபடமாக்கி அதனை தற்போது வாழும் உயிரினங்களுடன் ஒப்பீடு செய்கிறது. இதில் கம்பளி யானையின் டிஎன்ஏவுடன் ஆசிய யானைகளின் டிஎன்ஏக்கள் ஒத்துப்போகின்றன.இதிலிருந்து அவர்கள் ஜீன் எடிட்டிங்கில் உள்ள மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் வழியாக கம்பளி யானையை உருவாக்க முயல்கின்றனர்.
டோடோ
மொரீஷியஸ் தீவிற்குச் சொந்தமான பறக்கமுடியாத பறவையினம் இது. இன்றும் மொரீஷியஸின் தேசிய சின்னத்தில் இந்தப் பறவை இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய காலனித்துவத்தின் விளைவாக 17ம் நூற்றாண்டில் இந்தப் பறவையினம் மறைந்துவிட்டது. மொரீஷியஸின் கூற்றுப்படி 1598ல் காலனித்துவவாதிகள் மொரீஷியஸ் வந்தபோது எலிகள், பூனைகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளைக் கொண்டு வந்ததாகவும், அவை இந்தப் பறவைகளின் முட்டை மற்றும் குஞ்சுகளின் கூடுகளை அழித்ததாகவும் சொல்கிறது.
தவிர மனிதர்கள் வேட்டையாடுதல், காடழிப்பு உள்ளிட்டவையும் மற்றொரு காரணம். இதனால் 1681ம் ஆண்டு வாக்கில் இந்தப் பறவையினம் முற்றிலும் அழிந்துபோனது. இன்று டோடோவின் டிஎன்ஏ இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்களில் எஞ்சியுள்ளன. அப்படியாக விஞ்ஞானிகள் 2022ம் ஆண்டு விதிவிலக்காக பாதுகாத்து வைக்கப்பட்ட இந்தப் பறவையினத்தின் மரபணுவைச் சேகரித்தனர். டோடோ மீண்டும் பூமிக்குத் திரும்பி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தைலாசின் எனும் டாஸ்மேனியன் புலி
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் இருந்த ஓநாய் போன்ற உயிரினம் இது. முகத்தோற்றம் ஓநாய் போன்றும் உடலின் பின்பகுதியில் புலிகளில் காணப்படும் வரிகளும் கொண்டதாக காணப்படுகிறது. ஒருகாலத்தில் ஆஸ்திரேலியா கண்டம் முழுவதும் நிறைந்திருந்தது இந்த தைலாசின். இது ஆடுகளை வேட்டையாடும் உயிரினமாக இருந்ததால் மக்கள் இதனை வேட்டையாடினர். ஒருகட்டத்தில் இந்த உயிரினம் முற்றிலும் அழிந்துபோனது.
கடைசி புலி 1936ம் ஆண்டு ஒரு மிருகக்காட்சிச்சாலையில் இறந்தது. இதன் மாதிரிகள் இருப்பதால் இதிலிருந்து டிஎன்ஏவை எளிதாக பிரித்தெடுக்க முடியும் எனநம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஆஸ்திரேலிய மரபணு பேராசிரியர்கள்.
சமீபத்தில் கொலோசல் பயோசயின்ஸஸ் நிறுவனம் இதன் துண்டு துண்டாக இருந்த டிஎன்ஏவை முழுமையாக வரிசைப்படுத்தியுள்ளது. இருந்தும் தைலாசினை உருவாக்க இன்னும் பல சவால்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள். கொலோசல் பயோசயின்ஸஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த மூன்று உயிரினங்களை உயிர்ப்பிப்பதையே தற்போது முக்கிய பணியாகச் செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் இந்தப் பணிக்காக 200 மில்லியன் டாலர் நிதியை கூடுதலாகத் திரட்டியதாக அறிவித்துள்ளது.
மற்றவை
இதுதவிர, வடஅமெரிக்காவில் அதிக அளவில் காணப்பட்ட பயணி புறாவை ஐரோப்பியர்கள் இறைச்சிக்காக வேட்டையாடி அதன் அழிவுக்கு வழிவகுத்தனர். கடைசியாக இருந்த ஒரே புறாவும் 1914ல் இறந்துபோனது.
இதனை உயிர்ப்பிக்கும் வேலையையும் தற்போது விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அடுத்ததாக ஆசியா, வடஆப்பிரிக்கா, ஐரோப்பா எனப் பரவி இருந்த மாட்டினம் ஆரோக்ஸ். கடைசியாக 1627ம் ஆண்டு இந்த இனம் மறைந்துபோனதாகச் சொல்லப்படுகிறது. இதனை உயிர்ப்பிக்கும் முயற்சியிலும் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இதனுடன் தென்னாப்பிரிக்காவில் பரவலாகக் காணப்பட்ட தனித்துவமான வரிக்குதிரை இனம் குவாக்கா. இதன் முன்பகுதி வரிகளுடனும், பின்பகுதி வரிகள் இல்லாமல் அல்லது குறைவான வரிகளுடனும் காணப்படுகிறது.19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த இனம் வேட்டையாடப்பட்டு அழிந்துபோனது.
கடைசி குவாக்கா 1883ம் ஆண்டு இறந்தது. தற்போது ஏழு குவாக்கா எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவை உலகின் அரிதான எலும்புக்கூடுகள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணிகளையும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர். அதனால், மறைந்தபோன உயிரினங்களை நாம் பூமியில் மீண்டும் உயிருடன் பார்க்கலாம்.
பேராச்சி கண்ணன்
|