உலகிலேயே மிக அதிகம் கடன் வாங்கியிருக்கும் நாடு அமெரிக் காதான்!



இராணுவ பலம் என்று வரும்போது முன்னணி நாடாக அமெரிக்கா இருந்தாலும் அன்றாட  நடைமுறையில் அதன் அதிகாரம் என்பது அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தால் உருவாவது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த அன்னியசெலாவணி கையிருப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதில் 60% அமெரிக்க டாலரில்தான் உள்ளது. 
ஒரு சராசரி இந்தியக் குடும்பம் தனது செல்வத்தில் கணிசமான பகுதியை தங்க நகைகளாக வைத்திருப்பது போல உலக நாடுகள் அன்னிய செலாவணியை பெரும்பாலும்  அமெரிக்க டாலர்
களில்தான் சேர்த்து வைத்துள்ளன.

இந்தியா ஒரு பொருளை கொரியாவில் இருந்து இறக்குமதி செய்தாலும் அவர்கள் அதற்கு கேட்கும் தொகையை அமெரிக்க டாலரில்தான் கேட்பார்கள் . அதே இந்தியா துபாய்க்கு மாம்
பழங்கள் ஏற்றுமதி செய்தாலும் அதற்கான தொகையை டாலரிலேயே கேட்டுப்பெறும். சர்வதேச பணப்பரிவர்த்தனை என்று எடுத்துக்கொண்டால் 90% மேல் அமெரிக்க டாலரில்தான் நிகழ்கிறது.

டாலரின் ஸ்திரத்தன்மை, அதன் வலிமை, எளிதில் மாற்ற முடிகிற  தன்மை, அதன் நம்பகத்தன்மை - இவையனைத்தும் அதை ஒரு golden standard ஆக நிறுவிவிட்டிருக்கின்றன.
இப்படி அன்னியசெலாவணியை அமெரிக்க டாலரில் வைத்திருப்பது அமெரிக்காவுக்கு மிகவும் வசதியானது; பல விதங்களில் அமெரிக்காவுக்கு நன்மை பயப்பது. முக்கியமாக எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்ற வசதி.

இதுவரை எப்படி அமெரிக்க டாலர் சர்வதேச அரங்கில் தங்கத்துக்கு நிகரான நம்பகத்தன்மை கொண்ட கரன்சி என்று பார்த்தோம். இந்த நம்பகத்தன்மையை அடகு வைத்துதான் அமெரிக்கா வேண்டிய அளவு கடன் வாங்க முடிகிறது.செலவுக்கு பணம் வேண்டும் என்றால் அமெரிக்கா உடனேகோடிக்கணக்கில் கடன் பத்திரங்களை (treasury bonds) வெளியிடும். உலக நாடுகள் சர்வதேச வியாபாரம் மூலம் தாங்கள் ஈட்டிய அமெரிக்க டாலர்களைக் கொடுத்து அந்த கடன் பத்திரங்களை வாங்குவார்கள்.

அமெரிக்காவின் டாலர் மீண்டும் அமெரிக்காவிடமே போய்விடும். மற்ற நாடுகளிடம் அந்தக் கடன் பத்திரம் மட்டுமே எஞ்சும்,இப்படி மானாவாரியாக அமெரிக்கா உலகம் முழுதும் கடன் வாங்கி வைத்திருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உலகிலேயே மிக அதிகம் கடன் வாங்கியிருக்கும் நாடு அமெரிக்காதான். 

கணக்குப் போட்டால் ஒவ்வொரு அமெரிக்கரின் தலை மீதும் கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அமெரிக்காவுக்கு அதிகம் கடன் கொடுத்த நாடுகளின் பட்டியலில் முதலில் உள்ள நாடு சீனா.

ஓர் எல்லை வரை கடன் வாங்குவது எல்லா நாடுகளுக்குமே தவிர்க்க முடியாதது என்பது உண்மைதான். அந்தக் கடனை பெரும்பாலான நாடுகள் சமாளித்துவிடும் என்பது உண்மை.  
ஆனால், அமெரிக்காவின் கடன் சுமை அபாயகரமான ஒரு புள்ளிக்கு மேல் எகிறிக்கொண்டிருக்கிறது. அதாவது தற்சமயம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கு மேலும் கடன் வாங்க வேண்டும் என்ற சூழலுக்குள் மாட்டிக்கொண்டுள்ளது.

அதாவது கடனை வாங்கி அதை ஏதாவது உருப்படியான விஷயங்களில் முதலீடு செய்து ஏதோ வகையில் அது வருமானமாக அரசுக்கு திரும்பக் கிடைத்தால்தான் கடனை அடைக்க முடியும். பழைய கடனுக்கு வட்டி கட்ட புதிதாக மேலும் கடன் வாங்கினால் அசலை பின்னர் திருப்பிக் கட்டவே முடியாது என்ற சூழல்தான் உருவாகும்.

தற்சமயம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா கட்ட வேண்டிய வட்டி மட்டுமே ‘ஒரு கோடி கோடி’ ரூபாய்க்கு மேல் போய்விட்டது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமான தொகையை அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் வட்டியாக மட்டுமே கட்டுகிறது.

எனவே,  அமெரிக்கா இந்த சுழலில் இருந்து மீள ஒருபுறம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்; மற்றொருபுறம் செலவுகளைக் குறைக்க வேண்டும்.ஆனால், இதை கடுமையான இறக்குமதி வரி விதிப்பின்  மூலம் செய்யலாம் என்ற டிரம்ப்பின் அணுகுமுறை மேலும் இந்த சுமையை கூட்டுவதில்தான் முடியும். 

உடனடியாக இந்த கூடுதல் வரி மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும், ஆனால், விரைவிலேயே வரிகளினால் ஏற்படும் விலை ஏற்றத்தால் மக்கள் செலவு செய்வதை குறைப்பார்கள். நுகர்வு குறைந்தால் அதன் மூலம் அரசுக்கு வரும் வருமானம் குறையும்.

அதேபோல பிற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தால் அமெரிக்க பொருட்களின் ஏற்றுமதியும் குறையும், உற்பத்தியை குறைக்கும் சூழல் உருவாகும். தொடர்ந்து வேலை இழப்பு, அதனால் வருமான வரி இழப்பு, மேலும் குறைவான நுகர்வு என்று பொருளாதார சுணக்கத்தை நோக்கிப் போகும் வாய்ப்புதான் அதிகம். 

எது எப்படி என்றாலும் பல நாடுகளுக்கு அமெரிக்காவின் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை கண்ணை மூடிக்கொண்டு நம்ப முடியாது என்பதை நட்பு  நாடுகள் கூட புரிந்துகொண்டுவிட்டன.

இன்றிருக்கும் World order என்பது மாறப்போகிறது என்பதற்கான சமிக்ஞையாகவே இந்த டிரம்ப்பின் tariff விவகாரத்தை அனைத்து நாடுகளும் எடுத்துக் கொள்கின்றன.தாதாக்கள் அவரவர் பேட்டைகளைப் பிரித்துக்கொள்வது போல ஒவ்வொரு வல்லமையும் தனது orbit of influence என்பதை உருவாக்கிக்கொள்ளும். ஆக, வல்லரசு என்பது பல்முனைப் போட்டியாக மாறப்போகிறது.

கார்த்திக் வேலு