ஆள் பாதி...ஹை ஹீல்ஸ் மீதி!



இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு உருவாகி, முன்னணி ஆடம்பர பிராண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பிராண்ட், ‘ஜிம்மி ச்சூ’. உலகப்புகழ் பெற்ற இளவரசி டயானாவுக்கு ரொம்பவே பிடித்த பிராண்டும் இதுவே. 
மட்டுமல்ல, ஜெனீஃபர் லோபஸ், விக்டோரியா பெக்காம், கேட் பிளான்செட் உட்பட ஏராளமான பெண் பிரபலங்களும் இதன் முக்கிய வாடிக்கையாளர்கள்.  காலணிகள், பேக்குகள், வாசனைத் திரவியங்கள் என விதவிதமான ஃபேஷன் பொருட்களைத் தயாரித்தாலும், பெண்களுக்கான ஹை ஹீல்ஸ் காலணிகள்தான் ‘ஜிம்மி ச்சூ’வின் அடையாளம்.
இந்த பிராண்டை உருவாக்கியவரின் பெயர், ஜிம்மி ச்சூ. எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, மலேசியாவில் உள்ள ஜார்ஜ் டவுனில் வாழ்ந்து வந்த ஷூ மேக்கிங் குடும்பத்தில் பிறந்தார் ஜிம்மி ச்சூ. இவருடைய தந்தை பிரபலமான ஷூ மேக்கராக இருந்தார். ஒவ்வொரு ஷூவையும் கைகளாலேயே தயாரிப்பது ஜிம்மியுடைய தந்தையின் தனித்துவம்.

ஷூ மற்றும் செருப்புகளைத் தயாரிப்பதற்காக சிறிய அளவில் ஒரு ஒர்க்‌ஷாப்பை நடத்தி வந்தார் ஜிம்மியின் தந்தை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஷூ தயாரிப்பில் உதவியாக இருந்தார் ஜிம்மியின் அம்மா.
இந்நிலையில் ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் எட்டு வயதான ஜிம்மி. பள்ளி முடிந்த பிறகு நேராக வீட்டுக்கு வரும் ஜிம்மி, வீட்டுப்பாடங்களை விரைவாக முடிப்பார். அடுத்து தந்தையின் ஒர்க் ஷாப்பிற்குச் சென்று, அவர் ஷூ தயாரிப்பதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டே இருப்பார்.

இதுதான் ஜிம்மியின் முக்கிய பொழுதுபோக்கு. இரவில் தூங்கும் வரை தந்தையின் ஒர்க்‌ஷாப்பிலேயே இருப்பார் ஜிம்மி. பள்ளி விடுமுறை நாட்களில் கூட முழு நேரமும் ஒர்க்‌ஷாப்பில்தான் ஜிம்மி இருப்பார்.

‘‘அந்த நாட்களில் போன், கம்ப்யூட்டர், டிவி என எதுவும் கிடையாது. விளையாடுவதற்குப் பக்கத்தில் நண்பர்களும் இல்லை. அதனால் எப்போதும் அப்பாவின் ஒர்க்‌ஷாப்பில்தான் இருப்பேன். அதுமட்டுமே எனக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு...’’ என்று சமீபத்திய ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் ஜிம்மி ச்சூ.

ஜிம்மியின் தந்தை கலை நுட்பத்துடன் ஷூக்களை உருவாக்கினார். ஆரம்பத்தில் பெண்களுக்கான ஷூக்களையும், செருப்புகளையும் தயாரித்த ஜிம்மியின் தந்தை, பிறகு குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான ஷூக்களைத் தயாரித்தார். அதனால் ஆர்டர்கள் குவிந்தன. இரவு, பகல் பார்க்காமல் உழைத்தார். 

சில நாட்களில் தொடர்ந்து 15 மணி நேரம் வரை இடைவிடாமல் ஷூக்களைத் தயாரித்துக்கொண்டே இருந்தார். மூன்று வருடங்களாக தந்தையின் திறமையைப் பார்த்து வளர்ந்த ஜிம்மிக்கு ஷூ தயாரிப்பின் மீது காதலே பிறந்துவிட்டது.

ஜிம்மியின் அம்மாவுக்குப் பிறந்த நாள் வந்தது. தன் கைகளாலேயே தோலினால் ஆன செருப்பை உருவாக்கினார் ஜிம்மி. அப்போது அவருடைய வயது 11. முதன்முதலாக, தான் உருவாக்கிய செருப்பை அம்மாவுடைய பிறந்த நாளுக்குப் பரிசாக கொடுத்தார் ஜிம்மி.

‘‘ஷூவைத் தயாரிப்பதைக் காட்டிலும் செருப்பை உருவாக்குவது சுலபம்...’’ என்கிற ஜிம்மி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உழைத்து, அம்மாவுக்கான செருப்பை உருவாக்கினார். ஜிம்மியின் அம்மா மரணமடையும்வரை, மகன் உருவாக்கிய செருப்பை அணிந்திருந்தார். அம்மா இறந்த பிறகு, அவருடன் சேர்த்து அந்த செருப்பையும் புதைத்து விட்டனர்.

விதவிதமான செருப்புகளைத் தயாரித்த சிறுவன் ஜிம்மி, விரைவிலேயே ஷூ மேக்கிங்கிலும் ஈடுபட்டார். 16 வயதிலேயே ஷூ மேக்கிங்கில் ஜித்தனாகிவிட்டார். அதே நேரத்தில் படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார். 

21 வயதில் லண்டனுக்குச் சென்று ஷூ மேக்கிங் குறித்துப் படித்தார். ஜிம்மியின் பார்வையை முற்றிலும் மாற்றியது லண்டன். ஷூ டிசைனிங் குறித்து கற்றுக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அத்துடன் உலகப் புகழ்பெற்ற ஷூ பிராண்டுகள் அனைத்தும் லண்டனில் கிடைத்தன.

தனக்கான இடம் லண்டன்தான் என்று படிக்கும்போதே முடிவு செய்துவிட்டார் ஜிம்மி. அதனால் படிப்பு முடிந்த பிறகு மலேசியாவுக்குத் திரும்பிப்போகாமல், லண்டனில் உள்ள ஒரு ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்நிறுவனத்தில் ஷூ டிசைனராக எட்டு வருடங்கள் வேலை செய்தார். அதற்குப்பிறகு இன்னொரு ஷூ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சொந்தமாக ஷூ நிறுவனம் தொடங்குவதற்கான முழு நமபிக்கையும் வந்தபிறகு அந்த வேலையையும் விட்டுவிட்டார்.

மகனுடைய நிறுவனத்துக்கு உதவுவதற்காக பெற்றோர்கள் லண்டனுக்கு வந்தனர். மட்டுமல்ல, அம்மா கொடுத்த 6.5 லட்ச ரூபாயை முதலீடாக வைத்துதான் நிறுவனத்தையே ஆரம்பித்தார் ஜிம்மி.

ஆரம்ப நாட்களில் பெண்களுக்கான ஷூ மற்றும் செருப்புகளைத் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஜிம்மி ஷூ தயாரிக்கும்போது அவருடைய பெற்றோர்கள் உதவியாக இருந்தனர். ஷூ தயாரிப்பது, அதை பேக்கிங் செய்வது, விளம்பரப்படுத்துவது, விற்பது என அனைத்தையும் மூவரும் சேர்ந்தே செய்தனர்.

1986ம் வருடம், தான் தயாரித்த ஷூக்களையும், செருப்புகளையும் விற்பனை செய்வதற்காக லண்டனில் ஒரு கடையைத் திறந்தார் ஜிம்மி. இனிமேல் தனியாகவே ஜிம்மியால் பிசினஸை நடத்த முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகு, அவரது அப்பாவும், அம்மாவும் மலேசியாவுக்குத் திரும்பினார்கள். ஜிம்மியின் தயாரிப்புகள் தனித்துவமாகவும், தரமாகவும் இருந்தாலும், பிசினஸ் பெரிதாக விரிவடையவில்லை.

காரணம், ஜிம்மியைப் பற்றி வெளி உலகுக்குப் பெரிதாக தெரியாது. அத்துடன் நூற்றுக்கணக்கான ஆடம்பர பிராண்டுகளின் தயாரிப்புகள் லண்டனில் கிடைத்தன. இவற்றை எல்லாம் கடந்துதான் ஜிம்மி தனது பிராண்டை நிறுவ வேண்டும். இத்தனைக்கும் அவரது நிறுவனம் ஒரு பிராண்டாகவும் பரிணமிக்கவில்லை. ஆனாலும் மற்ற ஆடம்பர பிராண்டுகளுடன் போட்டி போடும் அளவுக்கு அவரது தயாரிப்புகள் இருந்தன.

இந்நிலையில் 1988ம் வருடம் லண்டனில் ஒரு ஃபேஷன் ஷோ நடந்தது. அதில் பங்குபெற்ற மாடல்கள் ஜிம்மியின் ஷூக்களையும், செருப்புகளையும் அணிந்து வந்தனர். ஷோவிற்கு வந்திருந்த பத்திரிகையாளர்களையும், பார்வையாளர்களையும் ஜிம்மியின் தயாரிப்புகள் பெரிதும் கவர்ந்தன. புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகையான ‘வோக்’கில் ஜிம்மியைப் பற்றியும், அவரது தயாரிப்புகளைப் பற்றியும் எட்டுப் பக்க அளவில் ஒரு கட்டுரை வந்தது.

இந்தக் கட்டுரைதான் ஜிம்மியின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை. ஆம்; இந்தக் கட்டுரையைப் படித்த பல பிரபலங்களும், பெரும் பணக்காரர்களும் ஜிம்மியை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். ஆயிரக்கணக்கான ஃபேஷன் டிசைனர்களுக்கு ஜிம்மி அறிமுகமானார். ஆர்டர்கள் குவிந்தன. 

1990களில் தூங்காமல் மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்தார் ஜிம்மி. இச்சூழலில் இளவரசி டயானாவுக்கு வேண்டிய ஷூக்களையும், செருப்புகளையும் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் வந்தது. ஆடிப்போய்விட்டார் ஜிம்மி. இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் தனது அம்மாவுக்குத் தெரிவித்தார்.

முதலில் ஜிம்மியின் அம்மா இதை நம்பவில்லை. ‘லூயி விட்டோன்’, ‘கிறிஸ்டியன் டாயர்’ போன்ற பிராண்டுகள் இருக்கும்போது இளவரசி ஏன் தனது மகனிடம் ஆர்டர் கொடுக்கிறார் என்ற சந்தேகம் வேறு. பிறகு புதிதாக ஆடைகளை வாங்கி அணிந்துகொண்டு, இளவரசியைப் பார்க்கச் செல் என்று ஜிம்மியை வாழ்த்தி அனுப்பியிருக்கிறார் அவரது அம்மா.

ஜிம்மி தயாரித்த செருப்புகளும், ஷூக்களும் டயானாவை வெகுவாகக் கவர்ந்தன. டயானா மூலம் ஜிம்மிக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். டயானா மரணமடையும் வரை ஜிம்மியின் வாடிக்கையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1996ம் வருடம் தாமரா மெல்லன் என்பவருடன் கூட்டுச் சேர்ந்து ‘ஜிம்மி ச்சூ’ என்ற தனது பெயரிலேயே பிராண்டை உருவாக்கினார். தந்தையைப் போலவே கைகளாலேயே அனைத்து விதமான காலணிகளையும் உருவாக்குகிறார். “‘ஜிம்மி ச்சூ’ காலணியின் சிறப்பை அணிந்தால் மட்டுமே உணர முடியும்...” என்கிறா டயானா. 2000ல் ‘ஜிம்மி ச்சூ’வின் காலணிகளை அணியாத ஹாலிவுட் பிரபலங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு அதன் புகழ் பரவியிருந்தது.

குறிப்பாக இதன் ஹை ஹீல்ஸ் செருப்புகள் ஸ்டைலீஷாகவும், அணிவதற்கு வசதியாகவும் இருந்தன. இப்போதும் ‘ஜிம்மி ச்சூ’வின் ஹை ஹீல்ஸுக்கு உண்டான மவுசு குறையவே இல்லை. இன்று ‘கேப்ரி ஹோல்டிங்ஸ்’ எனும் ஃபேஷன் நிறுவனத்தின் வசமிருக்கிறது ‘ஜிம்மி ச்சூ’. காலணிகளின் விலை பல ஆயிரங்களில் ஆரம்பித்து, லட்சங்களில் செல்கிறது.

த.சக்திவேல்