இந்த மக்களவைத் தேர்தலின் பணக்கார வேட்பாளர்!



இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஏழு கட்டமாக நடக்கும் தேர்தல்களில் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்திருக்கின்றன.
இந்நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் பணக்கார வேட்பாளர் என்கிற பெயரை எடுத்திருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான டாக்டர் பெம்மாசானி சந்திரசேகர். அவரின் சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 785 கோடி ரூபாய் என வேட்பாளர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

ஆந்திராவில் வரும் மே 13ம் தேதி நான்காவது கட்டமாக மக்களவைக்கும் சட்டசபைக்கும் தேர்தல்கள் நடக்கின்றன. இதில், குண்டூர் மக்களவைத் தொகுதிக்கு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார் டாக்டர் பெம்மாசானி சந்திரசேகர். 

இவர் ஆந்திரா மாநிலம் தெனாலி தொகுதியிலுள்ள புரிபலெம் கிராமத்தைச் சேர்ந்தவர். பின்னர் நரசராவ்பேட்டையில் குடியேறியது இவரின் குடும்பம். தொடர்ந்து ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்தவர், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் எம்டி முடித்தார். பிறகு அங்கேயே செட்டிலானார்.

இருந்தும் ‘யூ வோல்டு’ என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி நிறைய ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார். 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலேயே அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வந்தது. ஆனால், இறுதிக் கட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருக்கு அந்த வாய்ப்பு போனது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் களம் இறங்குகிறார் டாக்டர் சந்திரசேகர்.

அவரின் சொத்து மதிப்புதான் இப்போது பேசுபொருளாகி இருக்கின்றது. வேட்பாளர் பத்திரத்தில் தனது அசையும் சொத்து என 2 ஆயிரத்து 316 கோடி ரூபாயையும், தன் மனவைி கொனேரு ஸ்ரீரத்னாவின் பெயரில் உள்ள அசையும் சொத்து 2 ஆயிரத்து 289 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர இருவரிடமும் அசையா சொத்துகள் மதிப்பு சுமார் 106  கோடி ரூபாய் என்றும், தங்கள் மகன், மகளின் பெயர்களில் உள்ள சொத்துகள் தலா 496 கோடி ரூபாய்கள் என்றும், 2 கோடி மதிப்பில் நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் உலகம் முழுவதும் 101 நிறுவனங்களில் பங்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், இவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.  

பி.கே