கடவுளின் தேசமே தேவதையின் பிறப்பிடம்!



மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சாந்தினி தரன். பிருத்விராஜ், துல்கர் சல்மான் என முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வருபவர், தமிழில் ‘555’ படத்துக்குப் பிறகு அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நடித்துள்ளார். அமெரிக்கவாசியாக இருந்த இவர் சினிமா மீதுள்ள பேஷனால் இந்தியாவுக்கு ஷிப்ட்டாகி விட்டதாக சொல்கிறார்.

பயோ-டேட்டா ப்ளீஸ்?

சொந்த ஊர் கேரளாவில் உள்ள காலிகட். அப்பாவுக்கு அமெரிக்காவில் வேலை என்பதால் குடும்பத்துடன் பல வருடங்களுக்கு முன் அங்கு ஷிப்ட்டாகிட்டோம். அங்குதான் என்னுடைய படிப்பை முடிச்சேன்.ஸ்கூல் படிக்கும்போதே டான்ஸ், சிங்கிங்ல ஆர்வம். கதகளி, பரதம், பாலே போன்ற நடனத்தை முறையா கத்துக்கிட்டேன். டான்ஸ் பண்ணும்போது என்னுடைய பெர்ஃபாமன்ஸ் நல்லாயிருக்கும்னு பலர் சொல்வாங்க. மற்றபடி சினிமாவுக்கு வரணும்னு எந்த லட்சியமும் இல்லாமல்தான் இந்த ஃபீல்டுக்கு வந்தேன்.

மலையாளத்தில்தான் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பமானது. ‘கே.எல்.10’ என்ற படம் பெரிய ஹிட்டடிச்சது. ரொம்ப சீக்கிரத்துலேயே பிருத்விராஜ், துல்கர் சல்மான் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடிச்சுட்டேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்கள் பண்ணியதால் இப்பவும் மார்க்கெட்டை தக்க வெச்சுக்க முடிஞ்சது. தமிழில் என்னுடைய முதல் படம் ‘555’.

தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்காதது ஏன்?

‘555’ படம் பண்ணும்போது மலையாளத்தில் பிஸியா இருந்தேன். தெலுங்கிலும் நடிக்க ஆரம்பிச்சேன். இதற்கிடையே என்னுடைய டிகிரியையும்  முடிக்க வேண்டியிருந்துச்சு. கோவிட்டும் இடைவெளிக்கு ஒரு காரணமா இருந்துச்சு. அமீர் சாருடன் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ என்னுடைய கம் பேக் படமா இருக்கும்.

அமீருடன் நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?

அமீர் சார் இயக்கிய எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். தமிழில் எப்படி கவனிக்கத்தக்க இயக்குநரா பார்க்கப்படுகிறாரோ அதேமாதிரி மலையாளத்திலும் அவருக்கு தனி மரியாதை உண்டு.சக நடிகர்கள் கம்ஃபோர்ட் டாக இருக்கிற மாதிரி அவருடைய அப்ரோச் இருக்கும். அவரிடமிருந்து சினிமாவை ஸ்டடி பண்ண முடிஞ்சது. பெரிய இயக்குநர் என்ற பந்தா இல்லாம ஃப்ரெண்ட்லியா பழகுவார். ஒரு காட்சியை எப்படி அணுகணும் என்பதைக் குறித்து அவர் தரும் விளக்கம் டீடைலா புரியும்படி இருக்கும். அவருடைய உடல் மொழியை கவனிச்சாலே எப்படியெல்லாம் ரியாக்‌ஷன் தரலாம் என்பது புரியும்.

படத்துல என்னுடைய கேரக்டர் பேர் தமிழ். வெட்னரி டாக்டரா வர்றேன். என்னுடைய கேரக்டர் வித்தியாசமா, அதே சமயம் ரொம்ப அழுத்தமாவும் இருக்கும். என்னுடைய கேரக்டர்ல பொலிட்டிக்கல் ஏரியாவும் வரும். பொலிட்டிக்கல் காட்சிகளில் நான் இதுவரை நடிச்சதில்லை. அதெல்லாம் புது அனுபவமா இருந்துச்சு.ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி என சக நடிகர்களுடன் நடிச்சது நல்ல அனுபவம்.

இயக்குநர் ஆதம் பாவா சார் ஆர்டிஸ்ட்களிடம் மிகச் சரியாக வேலை வாங்கக் கூடியவர். ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் என்ன கேரக்டர், எப்படி பண்ணணும் என்பதில் தெளிவா இருப்பார். எந்த இடத்திலும் தடுமாற்றம் வராதளவுக்கு ஆர்டிஸ்ட்டுகளிடம் வேலை வாங்கினார். மதுரை, தேனி, அதன்  சுற்று வட்டாரங்களில் ஷூட்டிங் நடந்துச்சு. அங்குள்ள மக்களிடம் பழகியது நல்ல அனுபவம்.தமிழ் ஆடியன்ஸ் எப்போதும் சினிமாவை ஆதரிப்பவர்கள். இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

மல்டி ஸ்டார் என்ற அடிப்படையில் உங்களுடைய டேக் அவே அனுபவம் என்ன?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழி மக்களிடமும் கலாசார ரீதியா நிறைய ஒற்றுமை இருப்பதா நினைக்கிறேன். நல்ல படங்களில் நடிக்கணும் என்ற ஆர்வத்துடன்தான் கதை கேட்கிறேன். அப்படி எந்த மொழியில் அழுத்தமான வேடங்கள் கிடைக்கிறதோ அந்த மொழியில் நடிக்கிறேன். இப்போது  பெரும்பாலான படங்கள் பான் இந்திய சினிமாவா வருவதால் பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை உள்ளடக்கிய கதைகள் வெளிவர ஆரம்பித்துள்ளது.

நடிகையாக இருப்பதில் சாதகம், பாதகம் என்ன?

பணம், புகழ், செல்வாக்கு இதெல்லாம் சாதகம். பாதகம்னு பெருசா எதுவும் இல்ல. சில சமயம் நம்முடைய பிரைவசிக்கு சிறியளவில் இடையூறு ஏற்படுற மாதிரி இருக்கும். எனக்கு மக்களுடன் பழகுவது பிடிக்கும். நடிகையான பிறகு என்னிடமிருந்து எந்தப் பழக்க வழக்கமும் மாறின மாதிரி தெரியல.

நடிகையா இருப்பதால் சில படங்களுக்கு உடல் எடைய குறைக்கணும். சில படங்களுக்கு உடல் எடையை அதிகரிக்கணும். அந்த மாதிரி சமயத்துல உணவு விஷயத்தில் கவனமா இருக்கணும்.சமூக வலைத் தளம் இருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க முடிகிறது. எனக்கு கேமராவுக்கு முன் நடிப்பதுதான் பிடிக்கும். கேமராவுக்கு பின்னாடி நடிச்சு பழக்கமில்லை.

சமீபத்திய மலையாளப் படங்கள் ஹிட் அடிக்கிறதே?

‘பிரம்மயுகம்’, ‘பிரேமலு’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என சமீபத்தில் வெளியான மூணு படங்களையும் பார்த்தேன். எல்லாமே நல்லா இருந்துச்சு. படம் ஹிட் அடிப்பது சந்தோஷமா இருக்கு. முன்பு இந்திய சினிமா என்றால் பாலிவுட் படங்களைத்தான் உதாரணமா சொல்லுவாங்க. இப்ப, ‘பாகுபலி’, ‘கே.ஜி.எப்’, ‘காந்தாரா’, ‘பிரம்மயுகம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என தென்னிந்தியப் படங்களை கொண்டாடுறாங்க. அந்தவகையில் தென்னிந்திய சினிமா மீது எல்லோருடைய கவனமும் திரும்பியிருக்கு.

உங்கள் ஹீரோக்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான் எப்படி?

‘ஆடுஜீவிதம்’ படத்துல பிருத்விராஜின் உழைப்பு வேற லெவலில் இருந்துச்சு. அவருடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அப்போதே அவருடைய உழைப்பு, அர்ப்பணிப்பு எப்படியிருக்கும்னு தெரியும். சிறந்த இயக்குநருக்கான அத்தனை திறமைகளையும் உள்ளடக்கியவர் பிருத்விராஜ்.துல்கர் சல்மான் ‘கிங் ஆஃப் கோதா’வில் வித்தியாசமான ஸ்டைலில் கலக்கியிருந்தார். ‘சீதா ராமம்’ படமும் நைஸ். செட்ல எப்பவும் ஆக்டிவ்வா இருப்பார். ஃப்ரெண்ட்லியா பழகுவார். எப்பவும் சிம்பிளா இருப்பார். மலையாள ஆர்டிஸ்ட்டா நிறைய பான் இந்திய படங்கள் பண்றார்.

சினிமாவில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

அமெரிக்காவிலிருந்து நடிக்க வருவேன்னு எதிர்பார்க்கவில்லை. நல்ல படங்கள் பண்ணணும். என்னுடைய சைட்ல இருந்து நல்ல நடிகை என்று பேர் வாங்கணும். அவ்வளவுதான்.

எஸ்.ராஜா