பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக சொல்ல என்ன காரணம்?



கிக் பாக்ஸராக இருந்து நடிகையானவர் ரித்திகா சிங். நடிக்க வந்த சில வருடங்களிலேயே தேசிய விருதை தட்டிச் சென்றவர். ‘ஓ மை கடவுளே’ படத்துக்குப் பிறகு சமீபத்தில் முழுக்க முழுக்க காரிலேயே படமாக்கப்பட்ட ‘இன் கார்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பேட்டிக்காக மெசேஜ் தட்டியதும், வாட்ஸ் அப் காலில்  வந்தார்.

காருக்குள் படமாக்கப்பட்ட ‘இன் கார்’ அனுபவம் எப்படி?

நான் ஒரு கிக்பாக்ஸிங் வீராங்கனை. என் வாழ்க்கையில் பலமுறை  உடல் ரீதியாக சவாலான சில விஷயங்களைச் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் எளிதாகத் தோன்றிய படப்பிடிப்பு பிறகு கஷ்டமாகத் தோன்றியது. காரில் பலர் இருந்ததால் இன்ஃபெக்‌ஷன் ஏற்படும் அபாயம் இருந்தது. காரில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் உணர்ச்சிகளைச் சொல்லும்போது நம்முடைய  சுவாசம் முக்கிய பங்கு வகிக்கும். இடையில் ஓய்வெடுக்க டைம் இருக்காது என்பதை விட ஓய்வுக்காக காரைவிட்டு கீழே இறங்க முடியாதளவுக்கு சோர்வுதான் அதிகம் இருக்கும். ஷாட் ஓகே ஆனபிறகுதான் காரை விட்டு இறங்கி ஓய்வு எடுக்க முடியும்.

பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களில் எப்படி நடித்தீர்கள்?

இயக்குநர்கள் கதைக்கு தேவையான வசனங்களை எழுதித் தரும்போது அந்த இடத்தில் கேரக்டராக பேசுவதுதான் சரியாக இருக்கும். அது கதையை மீறி இருக்கும்போது நான் மறுப்பு சொல்லிடுவேன். இதுவரை அப்படி ஒரு நிலை வந்ததில்லை.

தமிழில் குறைவான படங்களில் நடிக்க காரணம் என்ன?

நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்கணும்னு எனக்கும் விருப்பம் இருக்கு. ஆனால், நான் கொஞ்சம் செலக்ட்டிவ்வாகத்தான் படங்களை கமிட் பண்ணுகிறேன். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். நான் நடிக்கும்  படங்களின் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும் நல்ல படத்தில் நடித்தோம்னு ஃபீல் வரணும்.

ஒரு படம் வெற்றியடையுமா, தோல்வியடையுமானு எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சவரை என்னுடைய சினிமா பயணம் முடியும் வரை நான் என்ஜாய் பண்ணி நடிக்க விரும்புகிறேன். மற்றபடி எனக்கு தமிழ் சினிமா ரொம்ப பிடிக்கும்.

இப்போ தட்டுத்தடுமாறி தமிழ் பேசுறேன். சீக்கிரத்துல தப்பு இல்லாம தமிழ் பேச முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது நிறைய தமிழ்ப் படங்களில் பண்ணுவேன்.

எந்த ஜானர்ல நடிக்க அதிக ஆர்வம்?

காமெடிப் படங்களில் நடிக்க பிடிக்கும். அதுதான் எனக்கு ஃபிட்டாகும்னு தோணுது. அடிப்படையில் நான் கொஞ்சம் ஜாலியான பேர்வழி. இயல்பாகவே எனக்குள் எனர்ஜி அதிகம். அந்தவகையில் காமெடி படங்கள் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதும் இயக்குநர்களும் என்னிடம் காமெடி கதைகளில் அதிகம் வேலை வாங்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அடுத்து, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’  மாதிரி கார், பைக், துப்பாக்கியோடு ஆக்‌ஷன் படம் பண்ண ஆசை.

பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

இதில் அடிப்படையிலிருந்து மாற்றம் வரவேண்டும். வீட்டில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுவதை ஒவ்வொருவரும் உறுதி செய்யவேண்டும். சில சமயங்களில் அவர்கள் அதிக மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை என்று உணர்கிறேன்.

அதனால் குழந்தைகள் அதை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் பெண்கள் எப்படி வழிநடத்தப்படுகிறார்கள் என்பது வீட்டிலிருந்து தொடங்குகிறது என்று நினைக்கிறேன். மனிதர்களிடம் எப்படி மரியாதையுடன் பழக வேண்டும் என்பதில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

நடிகையான பிறகு கிக் பாக்ஸிங்கிற்கு நேரம் கிடைக்கிறதா?

கிக் பாக்ஸிங் கைப்பொறுத்தவரை அப்பா என்னுடைய குரு என்பதால் இன்னும் பயிற்சி தொடர்கிறது. என்னுடைய சகோதரரும் இதே துறையில் பயிற்சி பெற்றவர்.
மும்பையில் எங்களுக்கு கிக் பாக்ஸிங் அகாடமி உள்ளது. நிறைய குழந்தைகள் எங்களிடம் கிக் பாக்ஸிங் கற்றுக்கொள்கிறார்கள். எங்கள் மாணவர்களில் பலர் சர்வதேச அளவில் பங்கேற்றுள்ளதோடு, பதக்கங்களையும் வென்றுள்ளார்கள். அதனால் நாங்கள் புரஃபஷனலாக பயிற்சி அளித்து வருகிறோம். நானும் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன்.

எஸ்.ராஜா